ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி பட்டமளிப்பு விழாவில், 26 மாணவியர் ‘ஆலிமா சித்தீக்கிய்யா’ பட்டம் பெற்றுள்ளனர். விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் 26ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பட்டமளிப்பு விழா, மே 30, 31 நாட்களில் (சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்) நடைபெற்றது.
30ஆம் நாள் சனிக்கிழமை 09.30 மணி முதல் 22.00 மணி வரை, கல்லூரியின் தீனிய்யாத் பிரிவு மாணவியர், மூன்றாமாண்டு மாணவியரின் சிறப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.
மே 31 ஞாயிற்றுக்கிழமையன்று 09.30 மணி முதல் 13.00 மணி வரை, ‘ஆலிமா ஸித்தீக்கிய்யா’ மற்றும் தீனிய்யாத் பட்டம் பெறும் மாணவியரின் சிறப்புரைகள் இடம்பெற்றன.
அன்று மாலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆண்கள் பகுதியில் நடைபெற்றன. எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் முன்னிலை வகித்தார். கல்லூரி நிர்வாகி எல்.கே.கே.லெப்பைத்தம்பி தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார்.
சென்னை யூனிட்டி பப்ளிக் பள்ளியின் ஆசிரியர் மவ்லவீ தர்வேஷ் ஹஸனீ, இவ்விழாவில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, வாழ்த்துரையாற்றினார்.
பின்னர் பட்டமளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. கல்லூரியின் முதல்வரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபுமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ - பட்டம் பெறும் மாணவியரின் பெயர்களை ஆண்கள் பகுதியிலிருந்து வாசிக்க, பெண்கள் பகுதியில் கல்லூரியின் பெண் நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் மாணவியருக்கு பட்டச் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினர்.
தொடர்ந்து, கல்லூரியின் ஓராண்டு பாடத்திட்டத்தின் கீழ் கற்றுத் தேர்ந்த மாணவியருக்கும், 8 ஆண்டுகள் பாடத்திட்டத்தைக் கொண்ட தீனிய்யாத் பிரிவில் கற்றுத் தேர்ந்த மாணவியருக்கும் பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பட்டம் பெற்ற மாணவியருக்கு கல்லூரி முதல்வர் அறிவுரை வழங்கினார்.
கல்லூரி நிர்வாகிகளுள் ஒருவரான ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
இந்நிகழ்ச்சிகளில், கல்லூரி மாணவியரின் பெற்றோர் உள்ளிட்ட உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
அனைத்து நிகழ்ச்சிகளுக்குமான ஏற்பாடுகளை, கல்லூரியின் ஆசிரியையர், ரக்கீபாக்கள், நிர்வாகிகள், ஒளிப்பதிவாளர் எம்.ஏ.அப்துல் ஜப்பார், காயல்பட்டினம் தஃவா சென்டர் மேலாளர் டி.வி.செய்யித் ஜக்கரிய்யா, ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் சார்பில் கடந்தாண்டு (2014) ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |