கத்தர் காயல் நல மன்றத்தின் 73ஆவது செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலனுக்காக 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், ஜூலை 03 அன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் புதிய செயலாளர் எம்.என்.ஸுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 73ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 05ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று, கத்தர் நகரிலுள்ள காயல் நண்பர்கள் இல்லத்தில், மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் தலைமையில் நடைபெற்றது.
ஹாஃபிழ் எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். செய்யித் முஹ்யித்தீன் வரவேற்புரையாற்றினார்.
செயற்குழு மறுவடிவமைப்பு:
துவக்கமாக, தற்கால அவசியம் கருதி - மன்றத்தின் செயற்குழு பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது:-
ஆலோசனைக் குழு:
(1) செய்யித் மூஸா
(2) சோனா முஹ்யித்தீன்
(3) கே.வி.ஏ.டீ.ஹபீப்
தலைவர்:
எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம்
துணைத்தலைவர்:
எம்.என்.முஹம்மத் யூனுஸ்
செயலாளர்:
எம்.என்.ஸுலைமான்
துணைச் செயலாளர்கள்:
(1) ஃபாரூக்
(2) ஜியாத்
பொருளாளர்:
அஸ்லம்
துணைப் பொருளாளர்:
ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன்
சர்வதேச ஒருங்கிணைப்பாளர்:
‘கவிமகன்’ காதர்
மருத்துவக் குழு:
(1) மொகுதூம் மீரான்
(2) ஃபைஸல் ரஹ்மான்
(3) ஹாஃபிழ் எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ்
(4) இசட்.எம்.டி.அப்துல் காதிர்
கல்விக் குழு:
(1) ‘கவிமகன்’ காதர்
(2) கத்தீப் மாமுனா லெப்பை
(3) கே.எம்.டீ.ஷேக்னா லெப்பை
ஏற்பாட்டுக் குழு:
(1) முஹம்மத் முஹ்யித்தீன்
(2) ஹுஸைன் ஹல்லாஜ்
வேலைவாய்ப்புக் குழு:
(1) செய்யித் முஹ்யித்தீன்
(2) ஹாஃபிழ் எம்.எம்.எல்.முஹம்மத் லெப்பை
செய்தி தொடர்பாளர்:
முஹம்மத் இப்றாஹீம்
காலத்தின் அவசியம் கருதி செயற்குழுவில் செய்யப்பட்டுள்ள இந்த அவசர மாற்றத்திற்கு, வரும் பொதுக்குழுக் கூட்டத்தில் முறைப்படி ஒப்புதல் பெறப்படும்.
TNPC தேர்வு குறித்த விழிப்புணர்வு:
TNPC அரசுப் பொதுத் தேர்வு குறித்தும், Aptitude செயல்திட்டங்கள் குறித்தும், ஆறுமுகநேரியில் மாணவ-மாணவியருக்கு விழிப்புணர்வூட்டி வரும் இளம் முன்னோடிகள் சங்கம் (Young Pioneer Association - YPA) அமைப்பின் நிர்வாகிகளுடன், காயல்பட்டினம் மாணவர்கள் நலன் கருதி இவற்றை நடத்திடுவதற்காக நடைபெற்ற கலந்துரையாடல் குறித்து, மன்றத்தின் துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் விளக்கிப் பேசினார். இதுகுறித்து, இக்ராஃ மூலம் கூடுதல் விபரங்களைப் பெற்றிடவும், அதன் வழிகாட்டலுடன் முறையான செயல்திட்டம் வகுத்து விரைவில் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அரசு நூலகத்திற்கு உதவி:
காயல்பட்டினம் அரசு பொதுநூலகத்தின் நூலகர் முஜீப் அவர்களது வேண்டுகோளை ஏற்று, அங்கு புத்தகங்களை அடுக்கி வைத்துப் பாதுகாக்க அலமாரி ஒன்றை வாங்குவதற்கு ரூபாய் 15 ஆயிரம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
ஏழை மாணவ-மாணவியருக்கு பள்ளிச் சீருடை:
வழமை போல இவ்வாண்டும் - காயல்பட்டினத்திலுள்ள ஏழை மாணவ-மாணவியர் நலன் கருதி, அவர்களுக்கு பள்ளிச் சீருடைகள் வழங்குவதற்காக 1 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
மாடித்தோட்ட செயல்திட்டம்:
காயல்பட்டினத்தில், பொதுமக்கள் தம் தேவைக்கான கீரை, காய்கறிகளை தம் வீட்டில் உள்ள மாடி உள்ளிட்ட சிறு இடங்களைப் பயன்படுத்தி - ரசாயண உரக் கலப்பின்றி இயற்கை முறையில் பயிரிட்டுப் பயனடையச் செய்யும் மாடித்தோட்ட செயல்திட்டம் குறித்து, மன்றப் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ், எழுத்தாளர் சாளை பஷீர் ஆகியோருடன் காயல்பட்டினத்தில் தனது விடுமுறையின்போது கலந்துரையாடிப் பெற்ற தகவல்கள் குறித்து, துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் கூட்டத்தில் விவரித்தார்.
இதுகுறித்த விரிவான கலந்தாலோசனை, குறுக்கு விசாரணைகளுக்கான விளக்கங்கள் வழங்கப்பட்ட பின், இத்திட்டத்தை செயல்படுத்திட ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுகுறித்து, கூடுதல் தகவல்களைத் திரட்டித் தர மன்றப் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் வசமும், அதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள, ஹாஃபிழ் எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ் வசமும் பொறுப்பளிக்கப்பட்டது.
ஷிஃபா குறித்த விளக்கம்:
ஷிஃபாவின் அண்மைச் செயல்பாடுகள் மற்றும் வருங்கால செயல்திட்டங்கள் குறித்து, SKYPE வழியே நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டம் குறித்து, செயலாளர் எம்.என்.ஸுலைமான் விளக்கிப் பேசினார்.
இக்ராஃவின் புதிய தலைவருக்கு வாழ்த்து:
காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் நடப்பாண்டிற்கான தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் அவர்களுக்கு மன்றத்தினர் அனைவரும் மனதார வாழ்த்து தெரிவித்து, அவரது பணி சிறக்க பிரார்த்தித்தனர்.
இக்ராஃவின் புதிய தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
புற்றுநோய் பரிசோதனை முகாம்:
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்புகளுடன் இணைந்து மன்றத்தால் வழமை போல நடத்தப்பட்டு வரும் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமின் நடப்பாண்டு முகாமை வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இஃப்தாருடன் பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை, வரும் ஜூலை மாதம் 03ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடத்திட தீர்மானிக்கப்பட்டது. நிகழ்விடம் மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறாக, செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள் அமைந்திருந்தன. நன்றியுரையைத் தொடர்ந்து, ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு, கத்தர் காயல் நல மன்றத்தின் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
பிரதிநிதி - கத்தர் கா.ந.மன்றம்
கத்தர் காயல் நல மன்றத்தின் முந்தைய (72ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |