சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் 48ஆவது செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலனுக்காக 7 லட்சத்து 18 ஆயிரத்து 50 ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, இக்ராஃ கல்விச் சங்கத்தின் புதிய தலைவராக கத்தர் காயல் நல மன்றத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் ஏ.டீ.ஸூஃபீ இப்றாஹீம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 48வது செயற்குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 12-ம் தேதி) மன்ற துணைத்தலைவர் முஹம்மது நூஹு அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஆரம்பமாக கூட்டத்தை இறைமறை ஓதி நயீமுல்லாஹ் அவர்கள் துவக்க அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வின் சாராம்சத்தை முஹ்சின் அவர்கள் வாசித்தார். அதன் பின் ஹாஜியார் சாலிஹ் அவர்கள் வந்தோரை வரவேற்றார். அடுத்து இக்கூட்டத்திற்கு தலைமையேற்ற மன்ற மூத்த செயற்குழு உறுப்பினர் பொறியாளர் SL சதக்கதுல்லாஹ் அவர்கள் தலைமையுரையாற்றினார்.
இக்ரா பற்றிய கருத்துரை:
அடுத்து எம்மன்ற தலைவர் ஹாபிழ் செய்ஹு தாவூத் இத்ரிஸ் அவர்கள் கடந்த வாரம் நமதூரில் நடைபெற்ற இக்ரா கல்விச் சங்கத்தின் பொதுகுழுவில் நடந்த முக்கிய தகவல்களை பரிமாரிகொண்டார், அத்தோடு நடப்பு ஆண்டின் 2015-16 தலைமை பொறுப்பேற்றுள்ள கத்தார் காயல் நலமன்ற தலைவர் பாஜுல் கரீம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் நமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல மன்றங்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மதிய உணவு இடைவேளை:
இதனிடையே மதிய உணவு இக்கூட்ட ஒருங்கினைப்பாளர்கள் ஏற்பாட்டில் அருமையான மந்தி (சவுதி ஸ்பெஷல்) சாப்பாடு பரிமாறப்பட்டது.
ரமலான் உணவுப்பொருள் வழங்கல் பற்றி விளக்கம்:
தொடர்ச்சியாக நோன்பு கால அத்தியவசிய சமையல் பொருட்கள் இவ்வருடம் 125 குடும்பங்களுக்கு ரூ. 2,936/ வீதம் மொத்தம் ரூ. 3,67,000/ வழங்க இருப்பதாகவும், கடந்த ஆண்டை விட 43 பயனீட்டாளர்கள் கூடுதலாக பெற இருக்கிறார்கள் என்று இத்திட்டத்தின் பொறுப்பாளர் முஹ்சின் தெரிவித்தார். இதற்காக வாரி வாரி வழங்கிய எம்மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய வெளியூர் நண்பர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி நவிலப்பட்டது. جزاك الله الخيرا
நாட்டுக்கோழி (புதிய) திட்டம் பற்றி...
அத்தோடு இவ்வருடம் ரமலான் உணவுப்பொருள் பெறும் அனைத்து 125 பயனீட்டாளர்களுக்கும் பெருநாள் இரவு "நாட்டுக்கோழி" ஒன்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் ஒரு வெள்ளோட்டமாக நடைமுறைபடுத்தப்பட உள்ளது, இன்ஷா அல்லாஹ் இதன் வெற்றியின் மீது வரும் ஆண்டுகளிலும் அதற்குண்டான பங்களிப்பாளர்கள் கிடைக்கும் பட்சத்தில் தொடர்ச்சியாக எம்மன்றம் எடுத்து நடாத்தும் என்பதை இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
CUT OFF மதிப்பெண் பட்டியல்:
அடுத்து இவ்வருடம் +2 தேர்வில் தேர்ச்சி அடைந்து நம்மன்றத்தினால் அறிவிக்கப்பட்ட CUT OFF அடிப்படையில் மதிப்பெண் பெற்ற 21 மாணவ மாணவியருக்கும், வணிகவியல் பிரிவில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவிகளுக்கும் மொத்தமாக பணப்பரிசு ரூ. 29,000/ வழங்க உள்ளதை வெள்ளி சித்தீக் அவர்கள் விளக்கினர். இதற்காக பொருளுதவி நல்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
நல திட்ட உதவிகள்:
ஷிபா (உலக காயல் நல மன்ற கூட்டமைப்பு) மூலம் பெறப்பட்ட 14 மருத்துவ கடிதங்கள் அலசப்பட்டு அவ்வகைக்கு ரூ. 1,35,000/ ஓதுக்கீடு செய்யப்பட்டு, அதோடு நேரடியாக பெறப்பட்ட கல்வி மற்றும் சிறு தொழில் உதவியாக ரூ. 76,350/ வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். இமாம் மற்றும் முஅத்தீன் ஊக்கத்தொகையாக THAKWA மன்றத்தோடு இணைந்து செயல்படுத்த இவ்வருடம் அவ்வகைக்கு ரூ. 30,000/ ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஷிபா ஒரு அலசல்:
அடுத்து ஷிபா அமைப்பு பற்றி ஒரு அலசல், இதுவரை நம்மன்றம் வழங்கிய தொகைகள், அடுத்து நமதூர் ஏழை எளிய மக்களுக்கு நம் நாட்டின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் எந்தெந்த நோய்கள் பொருந்தும், அந்த காப்பீட்டை எப்படி பெறுவது என்ற ஒரு விழிப்புணர்வு பிரசுரம் வெளியிட ஆவணம் செய்யுமாறு ஷிபா அமைப்பை கேட்டுக் கொள்வதென தீர்மாணிகப்பட்டது. ஊரில் உள்ள தன்னார்வ தொண்டர்களை தொடர்பு கொண்டு அவர்கள் வாயிலாக எல்லா உதவிகளையும் பெறவும் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் வருகிற நோன்புப்பெருநாள் விடுப்பில் தாயகம் வருகிற அனைத்து நல மன்றங்களின் உறுப்பினர்களை ஷிபா அமைப்பு ஒன்று கூட்டி சகல விஷயங்களை பேசி ஆராய்வதற்கு வழி செய்யவும் வலியுருத்தப்படுகிறது.
புறநகர் பள்ளிகளுக்கு உதவி திட்டம்:
எமது மன்றத்தின் அடுத்த கட்ட முயற்சியாக புறநகர் பள்ளிகளுக்கு இலவச சீருடை, பாட புத்தகம் மற்றும் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளிகளை கண்டெடுத்து (அருணாசலபுரம், மங்கலவாடி, ஓடக்கரை) அதன் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களை எம்மன்ற காயல் பிரதிநிதி தர்வேஷ் முஹம்மது அவர்கள் தொடர்பு கொண்டு, தேவைகள் அறிந்து அதற்கு ஒரு வருட நிதியாக ரூ. 1,20,000/ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் அத்திட்டத்தை படிப்படியாக நிறைவேற்றிட ஆவணம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக முழு முயற்சி எடுத்த எம் பிரதிநிதி அவர்களுக்கு நன்றியையும், பாராட்டினையும் சமர்ப்பித்து கொள்கிறோம்.
வலைதளம் ஒரு அறிமுகம்: (uthavumkarangal.org)
மன்ற துணைத்தலைவர் முஹம்மது நூஹு அவர்கள் ஒரு புதிய வலைதளம் (WEBSITE) uthavumkarangal.org என்ற முகவரியில் உருவாக்கி அந்த வலைதளத்தை கூட்டத்தில் துவக்கி வைத்து அதன் செயல்பாட்டை விளக்கினார். அதில் அனைத்து உலக காயல் நல மன்றங்களை இணைக்கும்பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், நமதூர் தேவைகளுக்கு அனைத்து மன்ற உறுப்பினர்களும் அந்தந்த மன்றத்தின் குடையின் கீழ் எங்கிருந்து வேண்டுமானாலும் மருத்துவம்/கல்வி/சிறுதொழில் வேண்டி வரும் விண்ணப்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டலாம் என்பதே இவ்வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்பதை அழகாகவும், ஆழமாகவும் எடுத்துரைத்தார். மேலதிகமாக இணையும் மன்றங்களின் சந்தாதாரர்கள் விபரங்களை வலைத்தளத்தில் ஏற்றி கணக்கு விபரங்களை பாதுகாத்து கொள்ளலாம். அதன் பேரில் முதலாவதாக எம்மன்றம் தன்னை இணைத்துக்கொண்டு செயல்படும் என்று ஒருமித்தமாக முடிவு எடுக்கப்பட்டது, அத்தோடு அவரின் நீண்ட நாள் முயற்சி வெற்றி பெற வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய நோன்புப்பெருநாள் விடுப்பில் வரும் மற்ற மன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் DEMO செய்து காட்டப்படும். தொடர்புக்கு எங்கள் பிரதிநிதி சகோதரர் தர்வேஷ் அவர்களை அணுகி கொள்ளலாம்.
புதிய துணைப்பொருளாளர் நியமணம்:
எம்மன்ற துணைப்பொருளாளர் KMN ஷம்சுதீன் அவர்கள் பணியிடம் மாறுதல் பெற்று அமீரகம் சென்று விட்டபடியால், அவருக்கு பகரமாக எம்மன்ற செயற்குழு உறுப்பினர் வாவு கிதுறு முஹம்மது அவர்களை நிர்வாகக்குழு பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டு, அவர்கள் பணி சிறக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது, இத்தருணத்தில் முன்னால் துணைப்பொருளாளர் இது நாள் வரை செய்த பங்களிப்பிற்கு அவர்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
50வது பொதுக்குழு கூட்டம்:
அடுத்து எம்மன்றத்தின் 50வது பொதுக்குழு கூட்டம் வருகிற ஜூலை மாதம் 3-ம் நாள் வெள்ளிகிழமையன்று ஷிபா அல் ஜசீரா பாலி கிளினிக் ஆடிட்டோரியத்தில் இப்தார் நிகழ்வோடு நடைபெறும் என்று கூட்ட ஒருங்கினைப்பாளர்கள் அறிவித்தார்கள். அதை உறுதி செய்யும் பட்சத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும் என்று தெரிவித்தார்கள்.
இக்கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நூஹு, ஹசன், ஜெய்னுல் ஆப்தீன், சபியுல்லாஹ் மற்றும் உமர் அப்துல்லத்தீப் ஆகியோரின் அனுசரணையில் உணவு வழங்கப்பட்டது.
இறுதியாக SB முஹ்யிதீன் அவர்கள் நன்றி நவில ஹாபிழ் PSJ ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் துஆ பிரார்த்தனையோடு குழு படம் எடுத்து பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே!
இவ்வாறு, ரியாத் காயல் நல மன்ற செயலாளர் ஏ.டீ.ஸூஃபீ இப்றாஹீம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல் & படங்கள்:
நோனா செய்யித் இஸ்மாயீல்
செய்தி தொடர்பாளர் - ரியாத் கா.ந.மன்றம்
ரியாத் காயல் நல மன்றத்தின் முந்தைய (47ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |