காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்று காலை 09.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் எம்.கே.முஹம்மத் ஷெரீஃப் அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் சிறப்புரையாற்றினார்.
டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் உருவாகும் விதம் குறித்தும், அவை வருமுன் காப்பதற்கான நடவடிக்கைகள், வந்துவிட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசிய அவர், இது தொடர்பாக காயல்பட்டினம் நகராட்சி எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாணவர்களுக்கு விளக்கிக் கூறி, இந்நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பளிக்குமாறு தத்தம் இல்லங்களில் அனைத்து மாணவர்களும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெ.டிக்ஸன் ஃபர்னாந்து, டெங்கு தடுப்பு உறுதிமொழியை முன்மொழிய, அனைவரும் வழிமொழிந்தனர்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி உடனிருந்தார். பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக, பள்ளியின் அனைத்து வகுப்பறைகளிலும் - காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு மருந்துப் புகை அடிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான மாணவர்களை இவ்வாறு ஓரிடத்தில் ஒருங்கிணைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதால், ஒரே நாளில் பல நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு விழிப்புணர்வுச் செய்திகள் சென்று சேரும் என்ற எண்ணத்திலேயே இதுபோன்ற நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தப்படுவதாகவும், நகரின் அனைத்துப் பள்ளிகளிலும் அடுத்தடுத்து இந்நிகழ்ச்சியை நடத்திட திட்டம் உள்ளதாகவும், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் காயல்பட்டணம்.காம் இடம் கூறினார்.
தகவல் உதவி:
ஆசிரியர் S.M.அஹ்மத் சுலைமான் |