காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC), சென்னை க்ரவுன் அரிமா சங்கம், சென்னை அப்பல்லோ மருத்துவமனை ஆகியன இணைந்து, சென்னையில் பல்துறை மருத்துவ இலவச முகாமை, 20.11.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 09.00 மணி முதல் 16.00 மணி வரை, சென்னை மண்ணடி அங்கப்பன் தெருவிலுள்ள மியாசி மேனிலைப்பள்ளியில் நடத்தின.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் முகாமைத் துவக்கி வைத்தார்.
238 பேருக்கு பொது மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, தேவையான ஆலோசனைகளுடன் மருந்துகளும் வழங்கப்பட்டன.
கண் மருத்துவ பரிசோதனை மூலம் 216 பேர் பயன்பெற்றனர். அவர்களுள் 23 பேர் கண்புரை இலவச அறுவை சிகிச்சைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 40 பேருக்கு கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இ.சி.ஜி., இரத்தக் கொதிப்பு, சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகளும் முகாமில் மேற்கொள்ளப்பட்டன. 19 பேர் குருதிக் கொடை வழங்கினர்.
இம்முகாமில் ஏராளமான காயலர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பயன்பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை, ரவீந்திரன், ப்ரபாகரன், ப்ரபு உள்ளிட்டோருடன் இணைந்து, காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மைய அங்கத்தினரான குளம் இப்றாஹீம், எஸ்.இப்னு ஸஊத், எம்.எம்.அஹ்மத், எச்.என்.ஸதக்கத்துல்லாஹ், எஸ்.எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ், பல்லாக் சுலைமான், வழக்குரைஞர் ஹஸன் ஃபைஸல், எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம், ‘நெட்காம்’ புகாரீ, குளம் முஹம்மத் தம்பி, சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் நூஹ், கிதுரு முஹ்யித்தீன், சித்தீக், ஹஸன் நெய்னா உள்ளிட்டோரடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.
முகாம் 13.30 மணி வரை மட்டுமே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தும், அதிகளவில் பயனாளிகள் வருகை தந்ததால், 16.00 மணி வரை நீட்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
M.M.அஹ்மத் & சொளுக்கு M.A.C.முஹம்மத் நூஹ்
|