காயல்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக, சாரல் மழையும் - வெயில் ஒளிர்வும் மாறி மாறி நிகழ்ந்த நிலையில், இன்று நள்ளிரவு 02.00 மணி முதல் அதிகாலை 05.30 மணி வரை கனமழை பெய்தது.
நடப்பு மழைப் பருவத்தை எதிர்பார்த்து காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மழை நீர் வடிகால்கள் தூர் வாறப்பட்டுள்ளது. தாழ்வான சாலைகளில் கருங்கல் சரல்கள் கொண்டு சமப்படுத்தப்பட்டுள்ளது. மழை வெள்ளம் ஏற்பட்டால் - குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் பாதிப்பை ஏற்படுத்தி விடாதிருக்க, ஆங்காங்கே தண்ணீரை உறிஞ்சும் மோட்டார்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு மழைப் பருவத்தில், தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கியிருக்கின்றபோதிலும், நகராட்சியின் முன்னேற்பாட்டுப் பணிகள் காரணமாக, பெரிய அளவில் குளங்களாகத் தேங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து பெறப்பட்டுள்ள மழை பொழிவு பதிவுப் பட்டியலின் படி, மாவட்டத்திலேயே மூன்றாவது அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் இன்று 17 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று (நவம்பர் 22) 12 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதுவும் மாவட்டத்திலேயே மூன்றாவது அதிகபட்ச மழைப்பொழிவாகும்.
|