விடுதலை பெற்ற இந்திய நாட்டில், ஒவ்வொரு மதத்தினருக்கும் தனியார் சட்டங்கள் உள்ளன. முஸ்லிம் சமூகத்திற்கு முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது. இவையனைத்தையும் நீக்கிவிட்டு, அனைவருக்குமான பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடுவன் அரசை ஆளும் பாஜக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இம்முயற்சியைக் கண்டித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் சமூகத்தினரும் - இதர சமயங்களைச் சேர்ந்தோரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நெல்லையில் மாநாடு:
அந்த வரிசையில், நெல்லை மாவட்டம் - பாளையங்கோட்டை முஸ்லிம் அநாதை நிலைய வளாகத்தில் அலுவலகத்தைக் கொண்டுள்ள “ஷரீஅத் சட்டப் பாதுகாப்புக் குழு” சார்பில், 12.11.2016. சனிக்கிழமையன்று ஷரீஅத் சட்டப் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
முன்னேற்பாடுகள்:
முன்னதாக இதுகுறித்து, நெல்லை மாநகர - புறநகர ஜமாஅத்துல் உலமா சார்பிலும், திருநெல்வேலி முஸ்லிம் ஜமாஅத் சட்ட மையம் சார்பிலும், நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் பின்வருமாறு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது
காயலர்கள் பங்கேற்பு:
11.11.2016. வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் காயல்பட்டினத்திலுள்ள ஜும்ஆ பள்ளிகளிலும், இம்மாநாட்டில் கலந்துகொள்ள பெருந்திரளாகச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நிகழ்வு நாளன்று, காயல்பட்டினத்தின் பல்வேறு மஹல்லாக்களிலிருந்து சிறப்பு வாகனங்கள் மூலம் ஏராளமான பொதுமக்கள் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருந்தனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இம்மாநாட்டில் திரண்டிருந்தனர்.
நிகழ்ச்சிகள்:
அன்று காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட முத்தவல்லிகள் சங்கத் தலைவர் டி.இ.எஸ்.நெய்னா முஹம்மத் தலைமை வகித்தார். சங்க செயலாளர் ஷிஃபா எம்.கே.எம்.முஹம்மத் ஷாஃபி, நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா தலைவர் மவ்லவீ டி.ஜே.எம்.ஸலாஹுதீன் ரியாஜீ, மேலப்பாளையம் மவ்லவீ ஹாஃபிழ் பீ.ஏ.காஜா முஈனுத்தீன் பாக்கவீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முஸ்லிம் அனாதை நிலைய செயலாளர் எம்.கே.எம்.செய்யித் அஹ்மத் கபீர் வரவேற்றார். பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தாளாளர் டீ.இ.எஸ்.ஃபத்ஹுர் ரப்பானீ, மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன் லால், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பழ. கருப்பையா, தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலாளர் மவ்லவீ ஏ.முஹம்மத் ரிழா ஆகியோர் உரையாற்றினர்.
மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முஸ்லிம் அனாதை நிலைய செயலாளர் எம்.கே.எம்.செய்யித் அஹ்மத் கபீர் தலைமை வகித்தார். தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், டீ.பீ.எம்.மைதீன்கான், தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் கோதர் மொய்தீன், வி.எஸ்.டீ.ஷம்சுல் ஆலம், எம்.அப்துல் வஹாப், நெல்லை கிழக்கு மாவட்ட அரசு காஜி மவ்லவீ எம்.முஹம்மத் கஸ்ஸாலீ, கே.எம்.ஏ.நிஜாம், ஏ.நிஃமத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முஸ்லிம் அனாதை நிலைய பொருளாளர் ஷிஃபா எம்.கே.எம்.முஹம்மத் ஷாஃபி வரவேற்புரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், எஸ்.டி.பீ.ஐ. கட்சி மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக்கவீ, கீழக்கரை தாஸிம்பீவி அப்துல் காதிர் கல்லூரி முதல்வர் டாக்டர் சுமய்யா தாவூத், மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், பேராசிரியர் ஆர்.டி.சபாபதி மோகன் ஆகியோர் உரையாற்றினர்.
தீர்மானங்கள்:
(1) நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள நமது உயிரினும் மேலான ஷரீஅத் சட்டத்தை மாற்றி, பொது சிவில் சட்டத்தை திணிக்க முயலும் மத்திய அரசின் முயற்சிகளை இம் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. திருமணம், விவாகரத்து, சொத்துரிமை மற்றும் வக்ஃபு நிர்வாகம் போன்ற விஷயங்களில் எப்போதும் போல் தொடர்ந்து ஷரீஅத் சட்டத்தை பின்பற்றி நடக்க இம் மாநாடு உறுதி ஏற்கிறது.
(2) ஷரீஅத் சட்டம் குறித்து அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் எடுக்கும் அத்துணை முயற்சிகளுக்கும், முழு ஆதர வையும் ஒத்துழைப்பையும் தருவது எனவும்,
(3) மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை, சிறுபான்மையின ரின் உரிமைகளையும், நலன் களையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, புதிய கல்விக் கொள்கையின் வரைவு திட்டத்திற்கான உள்ளீடுகளை முழுவதுமாக கைவிடுமாறு மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
(4) இந்திய அரசியலமைப்பு சிறுபான்மை மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கல்வி உரிமை எந்த வகையிலும் பாதிக்கப் படாமல் இருக்கவும், சிறு பான்மை கல்வி நிலையங்க ளுக்கு அரசின் நிதியுதவி எப் போதும் போல் தொடரவும் ஆவன செய்யுமாறு மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது. தீர்மானம் 5 வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு வீர மரணமடைந்த திப்பு சுல்தான் போன்ற வரலாற்று நாயகர் களையும், முஸ்லிம் ஆட்சி யாளர்களையும் இழிவுபடுத்திப் பேசி வரும் சங் பரிவார அமைப்புகளை இந்த மாநாடு கண்டிப்பதுடன், சுதந் திரப் போராட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் பங்களிப்பை எந்தத் திரிபும் இல்லாமல் மத்திய - மாநில பாடப் புத்தகங்களில் இடம் பெறச்செய்யுமாறு பாடத் திட்ட குழுக்களை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தி மூலம்:
இ.யூ.முஸ்லிம் லீக் இணையதளம்
தகவல் உதவி:
நஹ்வீ M.M.முத்துவாப்பா & S.M.முஹம்மத் மக்கீ
படங்கள்:
A.S.அஷ்ரஃப்
|