தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி மாவட்டப் பிரிவின் ஏற்பாட்டில், 2016-2017ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான - தூத்துக்குடி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றன.
கடற்கரை கைப்பந்து, பளு தூக்குதல், குத்துச் சண்டை, ஜுடோ, கைப்பந்து, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக், டேக்வாண்டோ, தடகளப் போட்டிகள் அடுத்தடுத்து நடத்தப்பட்டன.
நேற்று (22.11.2016. செவ்வாய்க்கிழமை) 25 வயதுக்குட்பட்டோருக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.
இதில் 5 காயலர்கள் உட்பட, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். நிறைவில், காயல்பட்டினம் அலியார் தெருவைச் சேர்ந்த ‘மாஸ் மீடியா கம்யூனிகேஷன் நிறுவன அதிபர் கே.எம்.முஹம்மத் தம்பி - ஏ.எஸ்.ஃபாத்திமா மஹ்ஜபீன் தம்பதியின் மகன் கே.எம்.டீ.முஹம்மத் முஃப்லிஹ். முதலிடத்தைப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம், மாநில அளவிலான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க இவர் தகுதி பெற்றுள்ளார்.
அவருக்கு, ஆயிரம் ரூபாய் பணப்பரிசையும், பாராட்டுச் சான்றிதழையும் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் முன்னிலையில், தமிழக செய்தி & விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, பள்ளிக்கல்வி - விளையாட்டு & இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான கு.உமா மகேஸ்வரி, ஆர்.சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்ற இளைஞர் கே.எம்.டீ.முஹம்மத் முஃப்லிஹ், ஏற்கனவே பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்று, மாநில - மாவட்ட - வட்டார அளவில் பல்வேறு சிறப்பிடங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. |