கோடை வெப்பத்தைக் கருத்திற்கொண்டு, நோன்பு மாத நாட்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளைச் செய்யாதிருப்பதன் மூலம் மின் தடையைத் தவிர்க்க, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், மின் வாரியத்திடம் கோரிக்கை அளிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஆவன செய்யப்படும் என மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தமிழ்நாடு மின்வாரியம், ஒவ்வொரு மாதமும் - ஒரு குறிப்பிட்ட தினத்தில், பராமரிப்பு பணிகளுக்கு என காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, மின் விநியோகத்தை நிறுத்தும்.
இவ்வாண்டு கோடை மாதத்தின் மத்தியில் ரமலான் நோன்பு வருவதை கருத்தில் கொண்டு, திருச்செந்தூர், ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் மின்வாரியம் அலுவலக அதிகாரிகளை இவ்வாரம் துவக்கத்தில் நேரில் சந்தித்து - நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், நோன்பு நாட்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டாம் என வேண்டுகோளை வைத்திருந்தனர். இக்கோரிக்கையை தங்களின் மேலதிகாரிகளுக்கு அனுப்பிவைப்பதாக அவர்களும் உறுதியளித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், இன்று (மே 4) காலை, தமிழ்நாடு மின்வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட மேற்பார்வை பொறியாளர் (SUPERINTENDING ENGINEER; SE) பொறியாளர் ஆ.சாக்கன் பி.ஈ. அவர்களை நேரடியாக சந்தித்து, இது சம்பந்தமான வேண்டுகோளை வைத்தனர்.
கடந்த ஆண்டு நோன்பு மாதத்தில் இதனால் சந்தித்த பிரச்சனையும், அவ்வேளையில் முற்கூட்டியே மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தால் அடுத்தாண்டு, இப்பிரச்சனை நிகழாமல் பார்த்துக்கொள்வதாக மின்வாரிய அதிகாரிகள் உறுதி அளித்ததையும், நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் நினைவுகூர்ந்தனர்.
கோரிக்கைகளை விரிவாக கேட்டறிந்த மேற்பார்வை பொறியாளர் (SE), நோன்பு மாதம் துவங்குவதற்கு முன்பு மே மாத பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், அது போல ஷவ்வால் ஆறு நோன்பு நாட்கள் முடிந்தபின்பு, ஜூன் மாத பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஆவன செய்வதாக, நடப்பது என்ன? குழும நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 4, 2018; 12:30 pm]
[#NEPR/2018050401]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|