மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் மீலாத் விழா – வினாடி-வினா போட்டி உள்ளிட்ட பல்சுவை சன்மார்க்க நிகழ்ச்சிகளுடன் நடந்து முடிந்துள்ளது. பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். விரிவான விபரம்:-
பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு - அவர்களது வாராந்திர விடுமுறை நாட்களில், இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வியைப் பயிற்றுவிப்பதற்காக, காயல்பட்டினம் புதுப்பள்ளி வளாகத்தில் பல்லாண்டு காலமாக இயங்கி வருகிறது மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை (MARO).
இந்நிறுவனத்தின் மீலாத் விழா, கடந்த ஏப்ரல் மாதம் 27, 28 (வெள்ளி, சனி) ஆகிய இரு நாட்களில் நாட்களில் – புதுப்பள்ளி வெளிப்புற சாலையில் நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்ச்சிகள்:
முதல் நாள் நிகழ்ச்சிகள் 27.04.2018. வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. அன்று 06.30 மணிக்கு நபிகளார் புகழ் பாடும் புர்தா மஜ்லிஸ் – மேலப் பள்ளி இமாம் மவ்லவீ எம்.டீ.ஷெய்க் அப்துல் காதிர் ஸூஃபீ தலைமையில், புதுப்பள்ளி இமாம் மவ்லவீ எம்.எஸ்.ஃகாலித் அன்ஸாரீ முன்னிலையில் நடைபெற்றது.
07.30 மணிக்கு ஃபாத்திஹா துஆவுடன் – மத்ரஸா மாணவர்கள் பங்கேற்ற ஆன்மிகப் பேரணி நடைபெற்றது. எஸ்.எம்.கலீல் அதைத் துவக்கி வைத்தார்.
16.30 மணிக்கு – சென்ட்ரல் மேனிலைப் பள்ளி ஆசிரியர் பி.செய்யித் அப்துல் காதிர் முன்னிலையில் மாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிராஅத், அஹ்மதுல்லாஹ் பைத்தைத் தொடர்ந்து, மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை இணைச் செயலாளர் கே.வி.எஸ்.ஏ.ஹபீப் முஹம்மத் வரவேற்புரையாற்றினார்.
தொடர்ந்து, இஸ்லாம் – பொது அறிவு – உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி, ஆடியோ – வீடியோ – மல்டிமீடியா வசதிகளுடன் QUIZ MARO – 2018 பல்சுவை வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
20.15 மணிக்கு தஃப்ஸ் நிகழ்ச்சி – கவிஞர் ஏ.ஆர்.தாஹா முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து, மத்ரஸா மாணவர்களும், பெண்கள் பிரிவான மஜ்லிஸுன் நிஸ்வான் மாணவியரும் பங்கேற்ற சன்மார்க்கப் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாதிஹுர்ரஸூல் குழுமத்தினரின் நஅத் மஜ்லிஸுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்:
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் 28.04.2018. சனிக்கிழமையன்று நடைபெற்றன. அன்று காலையிலும், மாலையிலும் – மத்ரஸா, மஜ்லிஸுன் நிஸ்வான் மாணவ - மாணவியரின் பல்சுவை சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
19.00 மணிக்கு, மாணவர் அணிவகுப்பு நிகழ்ச்சி – புதுப்பள்ளி ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.உஸைர் தலைமையில், பணி நிறைவு பெற்ற உளவியல் பேராசிரியர் கவிஞர் புலவர் எஸ்.எம்.அபுல்பரக்காத் முன்னிலையில் நடைபெற்றது.
20.15 மணிக்கு இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட – திருவிதாங்கோடு ஜாமிஉல் அன்வர் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.நிஜாமுத்தீன் அஹ்ஸனீ சறிப்புரையாற்றினார்.
21.30 மணிக்கு பரிசளிப்பு விழா துவங்கியது. மத்ரஸா பாடங்களிலும், விழாவில் நடத்தப்பட்ட போட்டிகளிலும் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு – பிரமுகர்களான எஸ்.எஸ்.எம்.புகாரீ, பீ.எம்.எஸ்.அமீர் அப்துல்லாஹ், எஸ்.ஏ,முஸ்தஃபா, எஸ்.ஐ.முஹம்மத் ஷாஃபிஈ ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
எம்.ஒய்.மஹ்மூத் புள்ளலெப்பை நன்றி கூற, மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை முதல்வர் மவ்லவீ ஏ.எச்.எம்.ஏ.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ துஆவுடன் விழா நிறைவுற்றது.
ஏற்பாடுகளை - மத்ரஸா நிர்வாகிகள், ஆசிரியர்கள், முன்னாள் – இந்நாள் மாணவர்கள், புதுப்பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ முஹம்மத் அலீ
|