லஞ்சம் / ஊழல் குறித்த புகார்கள் எதுவுமிருப்பின், முறைமன்ற நடுவருக்குத் தெரிவிக்க வலியுறுத்தும் தகவல் பலகையை, அனைத்து உள்ளாட்சி மன்றங்களிலும் நிறுவிட உத்தரவிடுமாறு முறைமன்ற நடுவருக்கு காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
அரசு துறைகள் மீது சுமத்தப்படும் லஞ்சம் / ஊழல் புகார்கள் அனைத்தையும் விசாரணை செய்ய அமைக்கப்பட்ட துறைதான் லஞ்ச ஒழிப்புத்துறை (DIRECOTRATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION). இந்த துறையினில் முக்கிய அதிகாரிகள் - காவல்துறையை சார்ந்தவர்கள்.
2014 ஆம் ஆண்டு, உள்ளாட்சிமன்றங்களில் நடக்கும் லஞ்சம் / ஊழல் ஆகியவை சம்பந்தமான புகார்களை விசாரிக்க, தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் முறைமன்றம் நடுவர் (TAMIL NADU LOCAL BODIES OMBUDSMAN) நியமனம் செய்யப்பட்டார். அதன் காரணமாக, உள்ளாட்சி மன்றங்கள் சார்ந்த புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தற்போது அனுப்பப்பட்டால், இத்துறை சார்ந்த புகார்களை விசாரிக்க முறைமன்ற நடுவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதால், புகார்களை அவரிடம் சமர்ப்பிக்க கோரி - லஞ்சம் ஒழிப்புத்துறை பதில் அனுப்பிவருகிறது.
உள்ளாட்சி மன்றங்களில் நடக்கும் லஞ்சம் / ஊழல் ஆகியவை சம்பந்தமான புகார்களை விசாரிக்க முறைமன்ற நடுவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் இன்னும் பொதுமக்களை பரவலாக சென்றடையவில்லை என்பதே நிதர்சன உண்மை.
இதனை கருத்தில் கொண்டு - நடப்பது என்ன? குழுமம் சார்பாக, தமிழ்நாடு உள்ளாட்சிமன்றங்கள் முறைமன்ற நடுவருக்கு மனு ஒன்று வழங்கப்பட்டது. அதில் - எவரேனும் லஞ்சம் கேட்டாலோ, ஊழல் புரிந்தாலோ லஞ்சம் ஒழிப்புத்துறையை நாடிட அறிவுறுத்தி தற்போது அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகைகள் போல, உள்ளாட்சிமன்றங்களில் நடக்கும் முறைக்கேடுகள் குறித்த புகார்களை, தமிழ்நாடு உள்ளாட்சிமன்றங்கள் முறைமன்ற நடுவம் அலுவலகத்துக்கு அனுப்பிட வலியுறுத்தி, உள்ளாட்சிமன்றங்களின் அலுவலகங்கள் அனைத்திலும் தகவல் பலகைகள் நிறுவிடவும், இதே தகவலை உள்ளாட்சி மன்றங்களின் இணையதளங்களிலும் பதிவிடவும் - உத்தரவுகள் பிறப்பிக்க கோரப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 9, 2018; 5:30 pm]
[#NEPR/2018050902]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|