காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா 26.04.2018. வியாழக்கிழமையன்று 09.00 மணிக்கு, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் தலைவர் எஸ்.கே.இசட்.ஆப்தீன் தலைமை தாங்கினார். மஹ்ழரா திருக்குர்ஆன் மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிளைத் துவக்கி வைத்தார். உதவி தலைவர் வாவு எஸ்.காதிர் ஸாஹிப் வரவேற்றுப் பேசினார்.
கல்லூரி முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழை (ஸனது) வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
இவ்விழாவில், காயல்பட்டினம் மருத்துவர் தெருவைச் சேர்ந்த எம்.டீ.அபுல் ஹஸன் என்பவரது மகன் மவ்லவீ அஃப்ழலுல் உலமா ஏ.எச்.முஹம்மத் ஸுலைமான் லெப்பை உட்பட 19 மாணவர்கள் ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெற்றனர்.
கடந்த கல்வியாண்டில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட அவையோர் அவற்றை மாணவர்களுக்கு வழங்கினர்.
கல்லூரியின் பேராசிரியர்கள், பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் – முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கேரள மாநில ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவரும் – அங்குள்ள ஜாமிஆ இஹ்யாஉஸ் ஸுன்னா அரபிக் கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ ரஈஸுல் உலமா அஷ்ஷெய்க் இ.ஸுலைமான் உஸ்தாத் – இவ்விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி ஆசியுரை வழங்கினார். நிறைவில் அவருக்கு, கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ‘மஹான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ’ விருது வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது.
பட்டம் பெற்ற மாணவர்கள் சார்பில் தமிழிலும், மலையாளத்திலும் ஏற்புரை வழங்கப்பட்டது.
கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஆடிட்டர் எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை நன்றி கூற, நிர்வாகக் குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் கத்தீபு கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
விழா ஏற்பாடுகளை, கல்லூரி செயலாளர் எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, துணைச் செயலாளர் ஜெஸ்மின் ஏ.கே.கலீலுர்ரஹ்மான் உள்ளிட்ட நிர்வாகிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
படங்கள்:
ஃபாஸில் ஸ்டூடியோ
|