வழமைபோல, நடப்பாண்டு ரமழான் மாதத்திலும் காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
துவக்கத்தில் மண் சிட்டிகளில் கஞ்சியும், மண் கலையங்களில் தண்ணீரும் பரிமாறப்பட்ட நிலை மாறி, பிற்காலத்தில் சில்வர் பாத்திரங்களில் தொடர்ந்து, தற்போது மெலமன் பாத்திரங்களில் நிற்கிறது.
இவ்வாறிருக்க, துவங்கிய இடத்திற்கே திரும்பும் முடிவுடன் - காயல்பட்டினம் எல்.எஃப். ரோட்டில் அமைந்துள்ள செய்கு ஹுஸைன் பள்ளியில் மீண்டும் மண் கலையங்களும், மண் சிட்டிகளும் புதிதாக வரவழைக்கப்பட்டு, பள்ளியின் அறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பள்ளியின் பொருளாளர் கே.எம்.இஸ்மத் தெரிவித்துள்ளதாவது:-
அன்பின் அனைத்துலக காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்...
இறையருளால், இவ்வாண்டும் புனிதமிக்க ரமழான் மாதத்தில் நம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழமைபோன்று நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கால ஓட்டத்திற்கேற்ப நம் பள்ளியிலும் மெலமன் பாத்திரங்கள் கடந்தாண்டு வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், மண் பாண்டங்களை மறந்துவிட்ட காரணத்தால் உடல் நலம் கெடுவதைக் கருத்திற்கொண்டு, அவதிகளைப் பொருட்படுத்தாமல் – மீண்டும் நம் பள்ளியில் மண் கலையங்களும், மண் சிட்டிகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.
நிகழாண்டு இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்காக இப்பாண்டங்கள் துவக்கமாகப் பயன்படுத்தப்படவுள்ளதோடு, இன்ஷாஅல்லாஹ் இனி வருங்காலங்களில் ஆண்டுதோறும் அது தொடரும்.
மேலும், திருமணம் உள்ளிட்ட வீட்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் நம் பள்ளியிலிருந்து வாடகை அடிப்படையில் இந்த மண் பாண்டங்களைப் பெற்றுப் பயன்படுத்திட வசதி செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் யாவரின் நற்காரியங்களையும் ஏற்று, ஈருலக நற்பேறுகளை நிறைவாக வழங்கியருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு செய்கு ஹுஸைன் பள்ளி பொருளாளர் கே.எம்.இஸ்மத் தெரிவித்துள்ளார்.
|