குடும்பத்தின் முதல் பட்டதாரி எனில், கட்டணமின்றியே பொறியியல் படிப்பில் சேர்க்கை பெறலாம் என்ற அரசின் தகவலை உள்ளடக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்த பொறியியல் கல்லூரிகள், சுய நிதி மூலம் இயங்கும் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு ஆகியவற்றுக்கான இணையவழி மாணவர் சேர்க்கை - மே 3 அன்று துவங்கியது. மே 30 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
நேற்று (மே 8) மாலை வரை, 32,524 மாணவர்கள், இணையவழியில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார்கள்.
2010 - 2011 கல்வியாண்டு முதல் - அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக்கல்லூரிகளிலும், பல் மருத்துவக் கல்லூரிகளிலும், வேளாண்மைக்கல்லூரிகளிலும், கால்நடை மருத்துவக்கல்லூரிகளிலும், சட்டக்கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களில், அவர்கள் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லையானால், அந்த மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக, சாதிப்பாகுபாடின்றியியும், வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமலும், அவர்கள் செலுத்த வேண்டிய கல்விக்கட்டணத்தை முழுவதும் அரசே ஏற்றுக்கொள்கிறது.
இது குறித்து அரசாணை [G.O. (st) No. 85 Higher Education (J2) Department dated: 16.04.2010]- 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. (நகல் இணைக்கப்பட்டுள்ளது).
இந்த தகுதியை பெற்றுள்ள மாணவர்கள், இணையவழியில் விண்ணப்பம் செய்யும்போது - இந்த சலுகையை தேர்வு செய்யவேண்டும். மேலும் - இது சம்பந்தமாக அரசு சான்றிதழ் ஒன்றினையும், மாணவர் - பெற்றோர் இணைந்து வழங்கும் உறுதி மொழி (JOINT DECLARATION) சான்றிதழ் ஒன்றினையும் இணைக்கவேண்டும். விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த சலுகையை பெற விரும்பும் மாணவர்களின் பெற்றோர்களோ, பெற்றோர்களின் பெற்றோர்களோ, உடன் பிறந்தவர்களோ - பட்டதாரிகளாக இருந்திருக்கக்கூடாது; மேலும் - இந்த சலுகை - ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படும். இச்சலுகையை ஏற்கனவே - குடும்பத்தில் ஒருவர் பெற்றிருந்தால், மீண்டும் இச்சலுகையை குடும்பத்தில் மற்றொருவர் பெற இயலாது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 9, 2018; 11:30 am]
[#NEPR/2018050901]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|