குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட 793 ஏக்கர் நிலத்திலிருந்து DCW அமிலக் கழிவு தொழிற்சாலை வெளியேற வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திடுமாறு, காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – MEGA தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம், சேர்ந்தமங்கலம், புன்னக்காயல் கிராமங்களில் இருந்த சுமார் 1300 ஏக்கர் அளவிலான புறம்போக்கு நிலங்கள் - DCW நிறுவனத்திற்கு, 1959 ஆம் ஆண்டு, அப்போதைய மதராஸ் அரசால், விற்பனை செய்யப்பட்டது.
மேலும் 793 ஏக்கர் நிலம் - 30 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில், 1963 ஆம் ஆண்டு, DCW நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதில் - காயல்பட்டினம் வடபாகத்தில் உள்ள 144.43 ஏக்கர் நிலம், சேர்ந்தமங்கலம் கிராமத்தில் உள்ள 200.90 ஏக்கர் நிலம், புன்னக்காயல் கிராமத்தில் உள்ள 448.06 ஏக்கர் நிலம் அடங்கும்.
குத்தகை காலத்திற்குள், குத்தகை நிலங்களை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, DCW நிறுவனம் அரசிடம் வாங்கலாம் என்று குத்தகை ஒப்பந்தம் தெரிவித்திருந்தது. இருப்பினும் - குத்தகை காலத்தில், முறையாக குத்தகை தொகையை DCW நிறுவனம் செலுத்தி வராததால், அந்நிலங்களை - DCW நிறுவனத்திற்கு விற்க அரசு சம்மதம் தெரிவிக்கவில்லை.
1989 ஆம் ஆண்டு, அரசின் எந்த ஆணையையும் பெறாமல், தன்னிச்சையாக - DCW நிறுவனம், அரசு கருவூலத்தில், சுமார் 3 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் (அதாவது ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 500) செலுத்தி, அந்நிலங்களுக்கு இனி அந்நிறுவனம் தான் உரிமைதாரர் என தானாகவே, DCW நிறுவனம், அறிவித்துக்கொண்டது. இதனை அரசு ஏற்கவில்லை.
இருப்பினும் 1989 ஆம் ஆண்டிற்கு பிறகு - இன்றைய தேதி வரை, 29 ஆண்டுகளாக - எந்த குத்தகை தொகையையும் - அந்நிறுவனம் அரசுக்கு செலுத்தவில்லை. 2002 ஆம் ஆண்டு, இது சம்பந்தமாக DCW நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் - குத்தகை தொகையை அரசு கோரி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்திருந்தது. குத்தகை தொகை கோர இடைக்கால தடை விதித்த நீதிமன்றம், DCW நிறுவனத்தின் விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க அரசினை கோரியது. இது சம்பந்தமாக இறுதி முடிவு ஏதும் எடுக்காமல் - தமிழக அரசு, காலம் தாழ்த்திவந்தது.
1989 ஆம் ஆண்டு முதல் - அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டு வருகிறது என்ற தகவல் - பொது வெளியில் அறியப்படாமல் இருந்தது. இச்சூழலில், இது சம்பந்தமான ஆவணங்களை பெற்ற காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) நிர்வாகிகள், உள்ளூர் ஊடகங்கள் வாயிலாக இத்தகவலை, பிப்ரவரி 2015 இல் வெளியிட்டனர். அதன் பிறகு, DECCAN CHRONICLE ஆங்கில நாளிதழின் அனைத்து பதிப்புகளிலும், ஏப்ரல் 2015 இல் - முழு பக்க செய்தியாக இத்தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து, இச்செய்தியை வெளியிட்ட இரண்டு உள்ளூர் இணையதளங்களும் (kayalpatnam.com, kayalnews.com), DECCAN CHRONICLE நாளிதலுக்கும் - DCW நிறுவனம், அவதூறு நோடீஸ் அனுப்பியது. ஆவணங்கள் அடிப்படையில் வெளியிடப்பட்ட இச்செய்திகளுக்கு - உள்ளூர் இணையதளங்களும், DECCAN CHRONICLE நாளிதழும் - மறுப்பு தெரிவிக்கவோ, மன்னிப்பு கோரவோ மறுத்தனர். இவ்விஷயத்தை - DCW நிறுவனம் அதன் பிறகு தொடரவில்லை.
கடந்த மார்ச் மாதம், தமிழக அரசு - இது சம்பந்தமாக, தனது இறுதி முடிவை எடுத்துள்ளது.
அதன்படி - 1989 ஆம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை, DCW நிறுவனம் பாக்கி வைத்துள்ள குத்தகை தொகையை 12 சதவீத வட்டியுடன் மீட்கவும், 793 ஏக்கர் நிலத்தை DCW நிறுவனத்திற்கு வழங்கமுடியாது என்றும், அந்நிலம் முழுவதும் அரசு வசத்திற்கு கையகப்படுத்தவேண்டும் என்றும் - அரசாணை வெளியிடப்பட்டது. [G.O.(Ms) No.85 - Revenue Department, Land Disposal Wind, LD 6(1) Section dated 31.3.2017]
இந்த அரசாணை வெளியாகி ஓர் ஆண்டாகிறது. இந்நிலையில், இது சம்பந்தமாக துரித நடவடிக்கை எடுக்க கோரி - வருவாய்துறைக்கான தமிழக அரசின் முதன்மை செயலர், கூடுதல் தலைமை செயலர் / நில நிர்வாகத்துறையின் ஆணையர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர், திருச்செந்தூர் தாலுகா வட்டாச்சியர் - ஆகியோரிடம், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA) சார்பாக, கோரிக்கை மனு இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 7, 2018; 4:00 pm]
[#NEPR/2018050701]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|