CMA, CE, RDMA, REE உள்ளிட்ட உள்ளாட்சித் துறை உயரதிகாரிகளை தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டத்தின் கீழ் கொண்டு வருமாறு தமிழக அரசிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணி செய்துக்கொண்டிருக்கும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் மீதான விசாரணைக்காக முறைமன்ற நடுவர் அமைப்பை - தமிழக அரசு, நிதி ஆணையத்தின் பரிந்துரையின் பெயரில், 2014 ஆம் ஆண்டு (தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டம்) அமைத்தது.
இந்த முறைமன்ற நடுவரிடம், உள்ளாட்சி மன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள்/ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மீதான முறைகேடுகள் குறித்த ஆதாரப்பூர்வமான புகார்களை பதிவு செய்யலாம். ஓய்வுபெற்ற IAS அதிகாரியின் தலைமையின் கீழ் இயங்கும் இந்த முறைமன்றம், பதிவு செய்யப்பட்ட புகார்களை விரிவாக விசாரித்து, தண்டனை வழங்கி ஆணைகள் பிறப்பிக்க அதிகாரம் பெற்றதாகும்.
ஒரு உள்ளாட்சி மன்றத்தின் உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட முடியும் என்பது இச்சட்டத்தில் உள்ள மிகப்பெரிய குறைப்பாடாகும்.
ஒரு உள்ளாட்சி மன்றத்தில் அதிகளவில் முறைக்கேடுகள் நடப்பது, ஒப்பந்தப்புள்ளிகளை தேர்வு செய்வதில் ஆகும். குறைந்த மதிப்பீட்டிலான ஒப்பந்தப்புள்ளிகளை முடிவு செய்யும் அதிகாரமே உள்ளாட்சி மன்றங்களுக்கு உண்டு. உதாரணமாக - காயல்பட்டினம் போன்ற இரண்டாம் நிலை நகராட்சிகளில் 35 லட்சம் ரூபாய்க்கு குறைவான ஒப்பந்தப்புள்ளிகளுக்கே, மன்ற அனுமதி வழங்கமுடியும். அதற்கு மேலான தொகைக்கான ஒப்பந்தப்புள்ளிகள், மண்டல இயக்குனர், நிர்வாகத்துறை ஆணையர் அல்லது அரசினால் நேரடியாக ஒப்புதல் வழங்க முடியும்.
அதிகளவில் முறைக்கேடுகள், அதிக தொகைக்கொண்ட ஒப்பந்தப்புள்ளிகளிலும் நடைபெறுவதை காண முடிகிறது. நிலைமை இவ்வாறு இருக்க - இந்த சட்டத்தின் கீழ், உள்ளாட்சி மன்ற அளவிலான உறுப்பினர்கள்/அதிகாரிகள்/ஊழியர்கள் ஆகியோர் மீது மட்டுமே புகார்கள் பதிவு செய்யமுடியும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.
2014 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு - நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் (Commissioner of Municipal Administration), தலைமை பொறியாளர் (Chief Engineer), நகராட்சி நிர்வாகத்துறையின் மண்டல இயக்குனர் (Regional Director of Municipal Administration), மண்டல செயற்பொறியாளர் (Regional Executive Engineer) - ஆகியோர் மீதும், முறைக்கேடுகள் நடைபெற்றிருப்பின், புகார்கள் பதிவு செய்ய வழிவகுக்க வேண்டும் என கோரி, தமிழக அரசின் தலைமை செயலர், நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலர், சட்டத்துறையின் செயலர் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் ஆகியோருக்கு நடப்பது என்ன? குழுமம் கோரிக்கை வைத்துள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 8, 2018; 11:00 am]
[#NEPR/2018050802]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|