காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தனியார் பள்ளிக்கூடங்களில், நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக கட்டணம் வசூல்; இலவச கல்விச் சட்டம் அமல்படுத்துவதில் அலட்சியம் ஆகியவற்றின் மீது நடவடிக்கை கோரி தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
2009 ஆம் ஆண்டு தமிழக அரசு - கல்வித்துறை சம்பந்தமாக இரு வேறு சட்டங்களை கொண்டு வந்தது. அவை -
(1) Tamil Nadu Schools (Regulation of Collection of Fee) Act, 2009
(2) Right of Children to Free and Compulsory Education Act, 2009
Tamil Nadu Schools (Regulation of Collection of Fee) Act, 2009 சட்டப்படி - ஒவ்வொரு தனியார் பள்ளிக்கூடமும், மாணவர்களிடம் பெறவேண்டிய கட்டணம் எவ்வளவு என்பதை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயம் செய்யும். அனைத்து வகையான செலவுகள் (சம்பளம், நிர்வாக செலவுகள்...) விபரங்களை ஒரு பள்ளிக்கூடம் சமர்ப்பித்தபின், அதன் அடிப்படையிலேயே இந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இருப்பினும் - காயல்பட்டினம் உட்பட மாநிலத்தின் பல்வேறு தனியார் பள்ளிக்கூடங்களில், அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட பல மடங்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
Right of Children to Free and Compulsory Education Act, 2009 சட்டப்படி - சிறுபான்மை தகுதி பெறாத அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களிலும், அந்த பள்ளிக்கூடத்தின் நுழைவு வகுப்பில் (LKG அல்லது முதல் வகுப்பு அல்லது ஆறாம் வகுப்பு), 25 சதவீதம் இடம் - பள்ளிக்கூடத்தில் இருந்து 1 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள, நலிந்த பிரிவை / வாய்ப்புகள் மறுக்கப்படும் பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கவேண்டும்.
இருப்பினும் - காயல்பட்டினம் உட்பட மாநிலத்தின் பல்வேறு தனியார் பள்ளிக்கூடங்களில், இந்த சட்டத்தின் படி, மாணவர்கள் சேர்க்கை முழுமையாக நடைபெறவில்லை. பல்வேறு தவறான காரணங்களை கூறி - அந்த சட்டப்படி சேர்க்கப்படும் மாணவர்களிடம் இருந்து, ஒரு தொகையை - விதிமுறைகளை மீறி பெறுகின்றனர்.
இவ்விரு பிரச்சனைகள் குறித்தும், அவற்றை சரி செய்யக்கோரியும் - சில கோரிக்கைகளை, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் திரு பிரதீப் யாதவ் IAS அவர்களிடம், நடப்பது குழுமம் நேற்று (மே 7) வைத்துள்ளது:
அக்கோரிக்கைகள் குறித்த விபரங்கள் வருமாறு:
==============================
பள்ளிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூல்
==============================
// ஒவ்வொரு பள்ளிக்கூடத்தின் நுழைவாயிலில், அந்த பள்ளிக்கூடத்தின் ஒவ்வொரு வகுப்புக்கும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் விபரங்கள் அடங்கிய தகவல் பலகை நிறுவப்படவேண்டும்
// நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பள்ளிக்கூடங்கள் வசூல் செய்தால், தொடர்புக்கொள்ளவேண்டிய தலைமை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரின் தொடர்பு விபரங்கள் அந்த தகவல் பலகையில் இடம்பெறவேண்டும்
// அரசு நிர்ணயித்துள்ள பள்ளிக்கூட கல்விக்கட்டணத்தை, மாணவர்கள் - நேரடியாக அரசு இணையதளத்தில் செலுத்திட ஏற்பாடு செய்யவும்
// மீனவர்கள், விவசாயிகள், எரிபொருள் நுகர்வோர் ஆகியோருக்கு என ஒவ்வொரு மாதமும் - மாநிலத்தில் உள்ள அனைத்து ஆட்சியர் அலுவலகத்திலும் நடைபெறும் குறைதீர் கூட்டம் போல், அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட அதிகம் வசூல் செய்யும் பள்ளிக்கூடங்கள் குறித்த புகார்களை தெரிவிக்கும், மாதாந்திர கூட்டம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்படவேண்டும்
======================================
கட்டாய இலவச கல்வி - 25 சதவீதம் இடம் ஒதுக்கீடு
======================================
// ஒவ்வொரு பள்ளிக்கூடத்தின் நுழைவாயிலில் நிறுவப்படும் தகவல் பலகையில், அந்த பள்ளிக்கூடத்தின் நுழைவு வகுப்பில் எத்தனை இடம் உள்ளது, அதில் எத்தனை இடம் இலவச கல்வி வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படவேண்டும்
// மேலும் இச்சட்டத்தின் கீழ், அடுத்தடுத்த வகுப்புகளில் எத்தனை மாணவர்கள் பயின்று வருகிறார்கள் என்ற விபரமும் அந்த தகவல் பலகையில் தெரிவிக்கப்படவேண்டும்
// இந்த சட்டத்தின் கீழ் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, எந்தெந்த சலுகைகள் - அரசு வழங்குகிறது என்ற விபரம் தெரிவிக்கப்படவேண்டும்
// இந்த சட்டம் ஒழுங்காக பள்ளிக்கூடத்தில் அமல்படுத்தபடவில்லை என்றால் அணுகவேண்டிய தலைமை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரின் தொடர்பு விபரங்கள் அந்த பலகையில் தெரிவிக்கப்படவேண்டும்
// மீனவர்கள், விவசாயிகள், எரிபொருள் நுகர்வோர் ஆகியோருக்கு என ஒவ்வொரு மாதமும் - மாநிலத்தில் உள்ள அனைத்து ஆட்சியர் அலுவலகத்திலும் நடைபெறும் குறைதீர் கூட்டம் போல், இலவச கல்வித்திட்டத்தை உதாசீனம் படுத்தும் பள்ளிக்கூடங்கள் குறித்த புகார்களை தெரிவிக்கும், மாதாந்திர கூட்டம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்படவேண்டும்
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 8, 2018; 7:00 am]
[#NEPR/2018050801]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|