காயல்பட்டினத்தில் இன்று நள்ளிரவு துவங்கி, அதிகாலை வரை இதமழை பெய்தது. காலை விடிந்ததும் சிறிது இடைவெளி விட்டிருந்த நிலையில் மீண்டும் 08.30 மணி துவங்கி சிற்சிறு இடைவெளிகளுக்கிடையே இதமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தொடர்ந்து தேங்கி வருகிறது.
இன்று 09.30 மணி நிலவரப் படி, மழைமேகத் திரட்சியுடன் வானம் நிறம் மாறிக் காணப்படுகிறது. வெயில் இல்லை. இதமான வானிலை நிலவுகிறது. அடுத்து கனமழையை எதிர்பார்க்கலாம் என உணர்த்தும் வகையில் வானிலை உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, இன்று (05.10.2018. வெள்ளிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விடுமுறை அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து இன்று வெளியிடப்பட்டுள்ள மழைப்பொழிவுப் பட்டியலின் படி, மாவட்டத்திலேயே காயல்பட்டினத்தில் இரண்டாவது அதிகபட்சமாக 28.00 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
|