வரும் அக்டோபர் மாதம் 06ஆம் நாளன்று – காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்தப்படவுள்ள - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள – தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்துக் கிளைகளுக்கும் அழைப்பு அனுப்பிட – அதன் நகர கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் – வரும் 06.10.2018. அன்று நடத்தப்படவுள்ள பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்கான கலந்தாலோசனைக் கூட்டம், 01.10.2018. திங்கட்கிழமையன்று 10.30 மணிக்கு, நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் தலைமையில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள – கட்சியின் அலுவலகமான தியாகி பீ.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில் நடைபெற்றது.
அரபி ஷாஹுல் ஹமீது் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் வரவேற்றார்.
நகர பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், இளைஞரணி அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், நகர நிர்வாகிகளான ‘பெத்தப்பா’ சுல்தான், எம்.இசட்.சித்தீக், ஜிஃப்ரீ, ஹாஃபிழ் கே.ஜெ.ஆர்.அப்துல் ஹக் ஃபைஸல் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.
இக்கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 – பொதுக்கூட்ட நிகழ்விடம்:
வரும் 06.10.2018. சனிக்கிழமையன்று 19.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் “2019 பாராளுமன்றத் தேர்தலில் இந்திய முஸ்லிம்களின் பங்கும், பணியும்” எனும் தலைப்பில் பொதுக்கூட்டத்தை நடத்திடவும், அதற்கு முறைப்படி காவல்துறை அனுமதியைப் பெற்றிடவும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 – மாவட்டத்தின் அனைத்துக் கிளைகளுக்கும் அழைப்பு:
06.10.2018. அன்று நடத்தப்படவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள – தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்துக் கிளைகளையும் முறைப்படி அழைக்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 – புதிய மாணவரணி, இளைஞரணிக்கு கண்ணியம்:
நகர கிளை சார்பில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவரணி, இளைஞரணி நிர்வாகிகளை – 06.10.2018. அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 – நிகழ்ச்சி நிரல் இறுதி செய்தல்:
06.08.2018. அன்று நடத்தப்படும் பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல், இக்கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது.
தீர்மானம் 5 – சமூக ஊடகக் குழுமம் துவக்கம்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் பணிகளை இன்னும் ஊக்கத்துடன் செய்வதற்கு வசதியாக, வாட்ஸ்அப் குழுமத்தைத் துவக்கிட தீர்மானிக்கப்பட்டு, அதற்கான பொறுப்பு முஹம்மத் முஹ்யித்தீன் வசம் ஒப்படைக்கப்பட்டது.
தீர்மானம் 6 – போதைப் பொருள் ஒழிப்புக்கு தொடர் நடவடிக்கை தேவை:
காயல்பட்டினத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கும் பணியை காவல்துறை முழுவீச்சில் செய்திட இக்கூட்டம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ நன்றி கூற, கே.எம்.என்.முஹம்மத் உமர் துஆவைத் தொடர்ந்து, ஸலவாத்துடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|