காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் ஒருங்கிணைப்பில், 30.09.2018. அன்று காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டுள்ளது. அதில் 104 பேர் குருதிக் கொடையளித்துள்ளனர்.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
உலக சுகாதார அமைப்பின் (WHO) இலக்கான - மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் குருதிக்கொடை செய்தால், சமூகத்தின் குருதித்தேவை பூர்த்தி அடையும் என்ற இலக்கை எட்டும் நோக்கில் - 2017 ஏப்ரல் முதல், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் அரசு ரத்த வங்கிகளுடன் இணைந்து, மெகா | நடப்பது என்ன? அமைப்பு - காயல்பட்டினத்தில் குருதிக்கொடை முகாம்களை நடத்தி வருகிறது.
2017 - 2018 காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட மூன்று குருதிக்கொடை முகாம்களில், 244 பேர் கலந்துக்கொண்டனர்.
2018 - 2019 காலக்கட்டத்தில், கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட முகாமில், 122 பேர் கலந்துக்கொண்டனர்.
இவ்வாண்டின் இரண்டாவது மற்றும் மெகா | நடப்பது என்ன? அமைப்பின் ஐந்தாவது குருதிக்கொடை முகாம், செப்டம்பர் 30 ஞாயிறு அன்று - காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முகாம் - காலை 9 மணி முதல் மாலை 4 வரை, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் பொன் ரவி மேற்பார்வையில் நடைபெற்றது.
இந்த முகாமில் ஆண்கள் 89, பெண்கள் 15 என மொத்தம் 104 பேர் கலந்துக்கொண்டு, குருதிக்கொடை செய்தனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே! இந்த முகாம் மூலம் சுமார் 100 கொடையாளிகள் தேவை என திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி, எழுத்துப்பூர்வமாக - மெகா | நடப்பது என்ன? அமைப்பிடம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முகாமின் முக்கிய அம்சங்கள்:-
// வாழ்நாளில் 120 வது முறையாக குருதிக்கொடை செய்யும் கானி முஹம்மது முஹைதீன், திருச்சியில் இருந்து வருகை புரிந்து இம்முகாமில் கலந்துக்கொண்டார்
// வாழ்நாளில் 55 வது முறையாக குருதிக்கொடை செய்யும் ஏ.கே.எம்.ஜூவல்லர்ஸ் பங்குதாரர் ஒய்.எம்.முஹம்மது தம்பி இம்முகாமில் கலந்துக்கொண்டார்
// காட்டு தைக்கா தெரு இளைஞர் அமைப்பு அங்கத்தினர் 23 பேர் இம்முகாமில் கலந்துக்கொண்டு குருதிக்கொடை செய்தனர்
// காயல்பட்டினம் தாவா சென்டர் அமைப்பில் இருந்து 15 பேர் குருதிக்கொடை செய்தனர்
// இது தவிர ரெட் ஸ்டார் சங்கம், திருவள்ளுவர் நற்பணி மன்றம் அங்கத்தினர் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளை சார்ந்தவர்கள் குருதிக்கொடை செய்தனர்
// ஏப்ரல் மாதம் நடந்த முகாமில் குருதிக்கொடை செய்த மாற்றுத்திறனாளி திரு பி.சுடலை முத்து - மீண்டும் இம்முகாமில் கலந்துக்கொண்டார்
// காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஹமீது ஹில்மி இம்முகாமில் கலந்துக்கொண்டு குருதிக்கொடை செய்தார்
// திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டுள்ள இருவர் வீரபாண்டியபட்டினத்தில் இருந்து ஜோடியாக இம்முகாமில் கலந்துக்கொண்டு குருதிக்கொடை அளித்தனர்
// பணிநிமித்தமாக காயல்பட்டினம் வந்திருந்த திருப்பூர் சார்ந்த சகோதரர் ஒருவர் இம்முகாமில் குருதிக்கொடை செய்தார்
இந்த முகாமில் கலந்துக்கொண்டவர்களின் எண்ணிக்கையோடு சேர்த்து, நடப்பாண்டில் (2018 - 2019) இரு முகாம்கள் மூலம் குருதிக்கொடை செய்தோர் எண்ணிக்கை - 226 ஆகும்.
மக்கள் தொகையின் ஒரு சதவீதம் என்ற 500 கொடையாளர்கள் இலக்கை அடைந்திட - மெகா | நடப்பது என்ன? அமைப்பு, இறைவன் நாடினால் - மார்ச் 2019 க்கு முன்னர், குறைந்தது இரு முகாம்கள் நடத்திட திட்டமிட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 1, 2018; 8:00 pm]
[#NEPR/2018100101]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|