காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் ஒருங்கிணைப்பில், 30.09.2018. அன்று காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. இவ்வாறு நடத்தப்படும் குருதிக்கொடை முகாம்கள் குறித்து அடிக்கடி பரப்பப்படும் தவறான தகவல்களுக்கும் (MISCONCEPTIONS), கேட்கப்படும் கேள்விகளுக்கும் (FAQs) முழு விளக்கமளித்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பொதுமக்களுக்கு 4 பக்கங்கள் கொண்ட விளக்கப் பிரசுரம் வெளியிடப்பட்டு, நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் தொழுகையைத் தொடர்ந்து பகிரப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
குருதிக்கொடை முகாம்களில் ரத்த தானம் செய்யக்கூடாது என ஒரு சிலர் செய்திபரப்புகிறார்களே. அது குறித்து உங்கள் விளக்கம் என்ன?
காயல்பட்டினத்தில் - மெகா | நடப்பது என்ன? குழுமம் ஏற்பாட்டில் எப்போது எல்லாம் குருதிக்கொடை முகாம் நடத்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் - இது போன்ற தகவல்கள் பரப்பப்படுவது இயல்பாகிவிட்டது.
"யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே" என்ற பழமொழிக்கு ஏற்ப, இதுபோன்ற அறிவுக்கு ஒவ்வாத தகவல்கள் வெளிவந்தால், ஒரு சில தினங்களில் மெகா | நடப்பது என்ன? குழுமம் ஏற்பாட்டில் குருதிக்கொடை முகாம் காயல்பட்டினத்தில் நடக்கவுள்ளது. அதனை சீர்குலைக்க ஒரு சிலர் செய்யும் முயற்சி என்பதை நாம் அறிந்துக்கொள்ளலாம்.
அவ்வாறு வெளியாகும் அறிக்கையை ஒரு சிலர் நம்ப வாய்ப்புள்ளதே. அந்த செய்திகளில் உள்ள விஷயங்களுக்கு தெளிவான பதில் கொடுப்பது அவசியம் இல்லையா?
விஞ்ஞானம் வளர்ந்த தற்போதைய காலகட்டத்திலும், சூரியன் - பூமியை சுற்றுகிறது, பாம்பு - சூரியனை முழுங்குகிறது என நம்ப கூடிய மக்கள் இவ்வுலகில் உள்ளார்கள். நேரில் பார்க்கும் போது - சாதாரண மக்களாக தான் இவர்கள் தெரிவார்கள். ஆனால் - பொது அறிவோ, உலகறிவோ இல்லாதவர்கள் அவர்கள். அது போன்றவர்கள் தான் - குருதிக்கொடை முகாம்கள் குறித்து அறிக்கை வெளியிடுபவர்கள்.
உண்மைதான். இருந்தாலும், அவர்களை விபரம் அறிந்தவர்கள் என நம்பி சிலர் உள்ளார்களே. அவர்களுக்கு பயனாக இருக்கும் என்பதற்காவது விளக்கம் கொடுத்தால் அவர்களும் பிறருக்கு எத்திவைப்பார்களே?
கண்டிப்பாக, இது போன்று அறிவுக்கு ஒவ்வாத தகவல்களை பரப்புவோர்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள விளக்கம் வழங்குவது நம் கடமை. கண்டிப்பாக விளக்கம் வழங்குவோம்.
ரத்த வங்கியில் / முகாம்களில் ரத்த தானம் செய்யக்கூடாது என்கிறார்களே? அதற்கான உங்கள் பதில் என்ன?
இது அறியாமையின் வெளிப்பாடு. 176 நாடுகளில், 13,000 ரத்த வங்கிகளுக்கும் மேல் உள்ளன. இந்தியாவில் மட்டும், 2700 ரத்த வங்கிகளுக்கு மேல் உள்ளது. தமிழகத்தில் 300 ரத்த வங்கிகளுக்கு மேல் உள்ளது. இதில் குறைந்தது 87 ரத்த வங்கிகள், அரசு ரத்த வங்கிகள்.
மெகா | நடப்பது என்ன? குழுமத்துடன் இணைந்து முகாம்கள் நடத்தும் தூத்துக்குடி அரசு கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி - 1997 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. அது போல - திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி - 2016 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது.
இந்த ரத்த வங்கிகளே, உலகளவில் - மருத்துவத்துறையின் - முதுகெலும்புகளாகும்.
இந்தியா போன்ற நடுத்தர நாடுகளில் உள்ள ரத்த வங்கிகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 5400 ரத்த தானங்கள் நடைபெறுகின்றன. அதாவது ஒரு ரத்த வங்கிக்கு மாதமொன்று குறைந்தது சராசரியாக 450 ரத்த தானங்கள் அவசியம். இவைகள் - குருதிக்கொடை முகாம்கள் மூலமே பெறப்படுகின்றன. குருதிக்கொடை முகாம்கள் இல்லையென்றால், ரத்த வங்கிகள் செயல்பட முடியாது; ஸ்தம்பித்து விடும்.
2016 - 2017 ஆம் ஆண்டு மட்டும் 4090 முகாம்கள், அரசு ரத்த வங்கிகள் மூலம் தமிழகத்தில் நடத்தப்பட்டன என தமிழக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும் - ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு பகுதியிலும் குருதிக்கொடை முகாம் நடக்கும்போது - புதிதாக குருதிக்கொடையாளர்கள் ஆர்வம் கொள்கிறார்கள். குருதிக்கொடை குறித்த அச்சம் நீங்குகிறது; விழிப்புணர்வு ஏற்படுகிறது; குருதிக்கொடையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
தேவைப்படும்போது குருதிக்கொடை கொடுக்கலாம்; வங்கியில் சேர்த்து வைக்க தேவையில்லை என்கிறார்களே?
இவ்வாறு கூறுபவர்கள் - ஒருவரின் ரத்தம் எவ்வாறெல்லாம், யார் யாருக்கெல்லாம் பயன்படுகிறது என அறியாததினால் கூறுகிறார்கள்.
அவர்கள் அறிந்தது - ரத்த தேவை என்பது பிரசவம், விபத்து போன்ற தருணங்களில் மட்டும்தான்.
ஆனால் - தானம் செய்யப்படும் ரத்தம், புற்றுநோய் மருத்துவம் பெறுபவர்கள், ரத்த சோகை உள்ளவர்கள், பிற ரத்தம் சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பல்வேறு வகையான அறுவை சிகிச்சைகளுக்கு என இரண்டு வினாடிக்கு ஒரு யூனிட் ரத்தம், இந்தியாவில் தேவை என்ற அளவில் பயன்படுத்தப்படுகிறது.
முகாம்களில் பெறப்பட்டு, ரத்த வங்கியில் கொடுக்கும்போது - சுமார் 13 பரிசோதனைகள் ரத்தத்தில் மேற்கொள்ளப்பட்டு, அதன் பிறகே - தேவையானவருக்கு ரத்தம் வழங்கப்படுகிறது.
முற்கூட்டியே வங்கிகளுக்கு ரத்தம் கொடுக்கவில்லை என்றால் எவ்வாறு அவர்கள் பரிசோதனை செய்வார்கள்?
அதுமட்டுமல்ல - ரத்தத்தில் உள்ள பல்வேறு கூறுகள் (COMPONENTS) பிரிக்கப்பட்டு தேவையானவர்களுக்கு வழங்கப்படுகிறது. முற்கூட்டியே வங்கிகளுக்கு ரத்தம் கொடுக்கவில்லை என்றால் எவ்வாறு கூறுகள் (RBC, PLATELETS etc) பிரிக்க முடியும்?
எனவே - ரத்த தானம் மருத்துவத்தை அறியாமல், ஒரு சிலர் பரப்பும் பொய்யான தகவலே - ரத்த வங்கியில் கொடுக்கக்கூடாது, முகாம்களில் கொடுக்கக்கூடாது என்பதாகும்.
ரத்த தேவை ஏற்படும் போது, அந்த வகை குருதிக்கொடையாளர்களை அனுப்பி - குருதிக்கொடை செய்யலாம் என்கிறார்களே?
ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும் போது, மாற்று கொடையாளி (REPLACEMENT DONOR) வழங்கினால் மட்டும் ரத்தம் வழங்கப்படும் என்ற வழமையை - படிப்படியாக குறைக்கவேண்டும் என்பதே இந்திய தேசிய குருதிக்கொள்கையாகும் (NATIONAL BLOOD POLICY).
ஒருவருக்கு அரிய வகை ரத்தம் தேவைப்படுகிறது; அந்த வகை ரத்த கொடையாளிகள் இல்லை என்றால், நாம் காத்திருக்க முடியுமா?
அதற்காக தான் - ரத்த வங்கிகளை வலுப்படுத்த அரசு முயற்சி செய்துவருகிறது. போதியளவு ரத்த வங்கியில் அனைத்து வகை ரத்தமும் இருந்தால், குடும்பத்தினர் பதட்டப்படுவதும், நெடு தூரம் பயணம் செய்து குருதிக்கொடை செய்வதும் முடிவுக்கு வரும்.
இந்நிலையை அடைய ரத்த வங்கிகள் அவசியம்; குருதிக்கொடை முகாம்களும் அவசியம்.
எல்லோரும் முகாமில் ரத்தம் கொடுத்துவிட்டால், நமக்கு தேவைப்படும்போது ரத்தம் இருக்காது என்கிறார்களே?
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படி, மக்கள் தொகையில் ஒரு சதவீதத்தினர் குருதிக்கொடை செய்தால் போதுமானது. அதாவது காயல்பட்டினத்தின் மக்கள்தொகை 50,000. இதில் ஒரு சதவீதம் என்பது 500 பேர். இந்த 500 பேர் குருதிக்கொடை செய்வதால், எப்படி ரத்த தானம் செய்பவர்கள் கிடைக்காமல் போகும்?
இன்னும் சொல்லப்போனால், 125 பேர் மூன்று மாதத்திற்கு ஒரு முறை குருதிக்கொடை செய்தாலே, ஆண்டொன்றுக்கு 500 என்ற இலக்கை நாம் அடையலாம். 50,000 பேர் வாழும் ஊரில் 125 பேர் குருதிக்கொடை செய்வதால் - எப்படி கொடையாளர்கள் தட்டுப்பாடு ஏற்படும்? எனவே - இது முற்றிலும், எந்த அடிப்படையும் இல்லாத, முட்டாள்தனமான பிரச்சாரம் ஆகும்.
நாம் ரத்த வங்கிக்கு கொடுக்கிறோம்; நமக்கு தேவைப்படும்போது ரத்த வங்கியில் தரமாட்டேன் என்கிறார்களே?
ரத்த வங்கியில் போதிய ரத்தம் இருக்கும்போது - எந்த ரத்த வங்கியும் மறுப்பதில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ரத்தவங்கிகளும் - இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது (www.tngovbloodbank.in).
இதன் மூலம் - ஒரு ரத்த வங்கியில் ரத்தம் குறையும் போது, அடுத்த ரத்த வங்கிக்கு ரத்தம் வழங்க முடிகிறது.
மேலும் - சமீப காலம் வரை, ஒரு ரத்த வங்கியில் இருந்து, மற்றொரு ரத்த வங்கிக்கு - ரத்தம் கொண்டுசெல்வது தடைசெய்யப்பட்டிருந்தது. அந்த விதிகள் தற்போது தளர்த்தப்பட்டு - ஒரு ரத்த வங்கியில் அதிகம் ரத்தம் இருந்து, மற்றொரு ரத்த வங்கியில் குறைவாக இருந்தால், ரத்தம் மாற்ற அரசு வழிவகுத்துள்ளது.
எனவே - ஒரு வங்கியில் ரத்தம் இல்லையென்றால், குறைவாக இருக்கிறது என்றால் - அருகில் எந்த ரத்த வங்கியில் ரத்தம் உள்ளது என்ற தகவலை - பொதுமக்களே இணையதளத்தில் பார்த்து அறிந்துக்கொள்ளலாம்.
நாம் முகாம் மூலம் ரத்தம் கொடுக்கிறோம். நமக்கு ரத்த வங்கிகள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமா இல்லையா?
அரசு மருத்துவமனைக்கு முகாம்கள் மூலம் நாம் கொடுக்கும் ரத்தம் - அங்கு சிகிச்சை பெறும் அனைத்து மக்களுக்கும், பாகுபாடு இல்லாமல், இலவசமாக வழங்கப்படுகிறது. நாம் ஒருவர் கொடுக்கும் ரத்தம் 3 - 4 பேருக்கு பயனாக உள்ளது.
"...மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்..." (ஸூரத்துல் மாயிதா, வசனம் 32)
எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், மேலுள்ள இறைவசனத்தை மனதில் வைத்து செய்வதே சிறந்த குருதிக்கொடையாகும்.
நாம் முகாம் நடத்தினாலும், இல்லாவிட்டாலும் ரத்த வங்கிகள் - நமது தேவைக்கு ரத்தம் வழங்க கடமைப்பட்டவர்கள்.
எனவே - முகாம் நடத்துகிறோம், அதனால் ரத்தம் கேட்க நமக்கு உரிமை இருக்கிறது என எண்ணுவதே தவறு; நாம் முகாம்கள் நடத்தாவிட்டாலும், ரத்த வங்கிகள், நமக்கு தேவை எழும்போது ரத்தம் வழங்கவேண்டும்.
நாம் இலவசமாக குருதிக்கொடை செய்கிறோம்; ஆனால் - நாம் ரத்தம் கேட்கும்போது 500 ரூபாய் வசூல் செய்யப்படுகிறதே?
நாம் அரசு ரத்த வங்கிகளுடன் இணைந்து நடத்தும் முகாம்களில் பெறப்படும் ரத்தம், சுமார் 13 பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, சேமித்துவைக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் ரத்தம் தேவை ஏற்படும்போது - அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு, முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள், அரசு ரத்த வங்கியை அணுகும்போது - பரிசோதனைகளுக்கு அரசு செய்த செலவு, பாதுகாத்து வைத்ததற்கு செய்யப்பட்ட செலவு என்ற வகைக்கு ரூபாய் 500 வசூல் செய்ய அரசு முடிவு செய்து, மாநிலம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வரும் விதிமுறை தான் இது.
வங்கியில் சேமித்துவைக்கப்படும் ரத்தம் வீணடிக்கப்படுகிறதே?
இந்தியாவில் - ஆண்டொன்றுக்கு 12 கோடி யூனிட் ரத்தம் சேகரிக்கப்படுகிறது. அதில் சில ஆயிரம் யூனிட் ரத்தம், பல்வேறு காரணங்களுக்காக அழிக்கப்படுகிறது. உதாரணமாக, அந்த ரத்தத்தில் சில குறைப்பாடுகள் இருக்கலாம்; காலாவதியாகி இருக்கலாம். இது போன்ற பல்வேறு காரணங்களுக்கு - அந்த ரத்தத்தை மக்களுக்கு ஏற்றமுடியாது என்பதால் - ரத்தம் அழிக்கப்படுகிறது. இது நாட்டில் - ஓர் ஆண்டில் சேமிக்கப்படும் ரத்தத்தில், 0.1 சதவீதம் கூட அல்ல. இதனை - தங்கள் அறியாமையால் - ஒரு சிலர் மிகைப்படுத்துகிறார்கள்.
ஓர் இடத்தில அதிகமாக உள்ள ரத்தத்தை தேவையுள்ள இடத்திற்கு மாற்றிட (TRANSPORT), அரசு புதிய வழிமுறைகளை அமைத்து செயலாற்றி வருகிறது.
நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி - உரிய காலத்தில் சேமிக்கப்படும் ரத்தத்தை பயன்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும், அரசு / தனியார் ரத்த வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன.
நேரில் ரத்தம் கொடுத்தால் - நாம் முகம் பார்க்கலாம்; பிரார்த்தனை செய்வார்கள் என்கிறார்களே?
தானத்தில் சிறந்தது - மறைமுகமாக கொடுக்கப்படும் தானம். வலது கையால் கொடுக்கப்பட்டது, இடது கைக்கு தெரியாதது தானத்தில் சிறந்தது என்பது நபிமொழி. இதையே - இறைமறையும் வலியுறுத்துகிறது (2:271).
ரத்த வங்கி, முகாம்கள் மூலம் குருதிக்கொடை பெறுபவர்கள், நம் முகத்தை பார்க்காவிட்டாலும், அவர்கள் செய்யும் பிரார்த்தனை நம்மை வந்தடையும் என்பதில் ஏன் சந்தேகம்?
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 20, 2018; 6:15 pm]
[#NEPR/2018092003]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|