| காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும முறையீட்டின் எதிரொலியாக, வழி மாறிச் செல்லும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு, தமிழக போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
 இதுகுறித்த செய்தியறிக்கை:-
 
 
  காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் - காயல்பட்டினம் வழியை புறக்கணிப்பது சம்பந்தமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை - மெகா | நடப்பது என்ன? மேற்கொண்டுவருவதை அனைவரும் அறிவர். 
 இப்பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு காணும் வகையில் சில முயற்சிகளை மெகா | நடப்பது என்ன? குழுமம் சமீப காலங்களில் செய்துள்ளது.
 
 உதாரணமாக - திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் மதுரை பேருந்து நிலையங்களில் - காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டும் என்ற தகவல் பலகை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், மதுரை மாநகராட்சி ஆணையர், திருச்செந்தூர் பஞ்சாயத்து செயல் அலுவலர் ஆகியோரின் அனுமதியோடு  நிறுவப்பட்டுள்ளது.
 
 இது சம்பந்தமான அரசு சுற்றறிக்கைகள் - அச்சிடப்பட்டும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பகிரப்பப்ட்டுள்ளது.
 
 விதிமீறும் ஓட்டுனர்கள்/நடத்துனர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டு, பல ஓட்டுனர்கள்/நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுத்த விபரங்களையும் போக்குவரத்து அதிகாரிகள் - நடப்பது என்ன? குழுமத்திற்கு வழங்கியுள்ளார்கள்.
 
 இத்தொடர் முயற்சியின் அடுத்தக்கட்டமாக - சில கோரிக்கைகளை முன்வைத்து, சென்னையில் உள்ள போக்குவரத்துத்துறை ஆணையர் (TRANSPORT COMMISSIONER) திரு  C.சமயமூர்த்தி IAS அவர்களை, நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் நேற்று (செப்டம்பர் 17) சென்னையில் சந்தித்தனர். அச்சந்திப்பின்போது - பிரச்சனையின் முழுவிபரம் ஆணையரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
 
 
  
 வழிமாறி செல்லும் பேருந்துகளின் ஓட்டுனர்கள்/நடத்துனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது தான் - பிற ஓட்டுநர்களும், நடத்துனர்களும் - வழிமாறி செல்ல தயங்குவர் என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.
 
 உடனடியாக - திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலரை (RTO) தொடர்புக்கொண்டு, காயல்பட்டினம் வழியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டு, வழிமாறி செல்லும் அரசு / தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.
 
 அரசு பேருந்துகளில் GPS கருவி பொருத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்த ஆணையர், இது குறித்து தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
 
 போக்குவரத்துத்துறை ஆணையரிடம் -
 
 || வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகம் (திருச்செந்தூர்) தொடர்ச்சியாக ஒரு மாதமும், அதன்பிறகு அவ்வப்போதும் - ஆறுமுகநேரி, வீரபாண்டியபட்டினம் சந்திப்புகளில் ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும்
 
 || காயல்பட்டினம் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளிலும் (ஆறுமுகநேரி ஸ்டேஜ் என்பதற்கு பதிலாக) காயல்பட்டினம் ஸ்டேஜ் வழங்கப்படவேண்டும்; அவ்வாறு வழங்கப்பட்டால் தான், காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய பேருந்துகள், அடைக்கலப்புரம் வழியில் செல்வதை தடுக்க முடியும்
 
 || காயல்பட்டினம் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளிலும் காயல்பட்டினம் வழி என்ற அறிவிப்பு - பலகையாகவோ, வண்ணம் பூசப்பட்டோ, ஸ்டிக்கராகவோ - வைக்கப்படவேண்டும்
 
 என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
 தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் திரு PWC டேவிடார் IAS அவர்களிடமும் இதே கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
 இவண்,
 நிர்வாகிகள்,
 நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
 [மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
 
 [பதிவு: செப்டம்பர் 18, 2018; 1:30 pm]
 [#NEPR/2018091803]
 
 இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 |