காயல்பட்டினத்திலிருந்து இ பொதுசேவை மையம் இடமாற்றம் செய்யப்படும் திட்டத்தைக் கைவிடக் கோரி “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் முறையிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில், TACTV என்ற அரசு நிறுவனம் மூலம், ஒரு ஊழியரை கொண்டு, இசேவை மையம், ஜூலை 15, 2015 முதல் இயங்கி வருகிறது. இந்த மையம் மூலம் - 60 க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை, மின்வாரியத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த சேவைகளை பொது மக்கள் பெறமுடியும்.
50,000 மக்கள்தொகை கொண்ட இரண்டாம் நிலை நகராட்சியான காயல்பட்டினம் நகராட்சியில், இசேவை மையங்கள் மூலம், பல மக்கள் பல்வேறு சேவைகளை பெற்று வந்தனர். இதனால் - நீண்ட தூரம் சென்று, இடை தரகர்களுக்கு அவசியம் இல்லாமல் பணம் கொடுத்து சான்றிதழ் பெறவேண்டிய சூழல் தவிர்க்கப்பட்டு வந்தது.
நிலைமை இவ்வாறிருக்க, புதிதாக துவக்கப்பட்டுள்ள ஏரல் தாலுகாவிற்கு, காயல்பட்டினம் நகராட்சியில் இயங்கி வரும் இ சேவை மையம் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி IAS அவர்களை நடப்பது என்ன? குழுமம் இன்று நேரடியாக சந்தித்து - இதற்கான ஆட்சேபனையை தெரிவித்தது.
அவ்வேளையில் -
|| இ சேவை மையம் காயல்பட்டினத்தில் இருந்து மாற்றப்பட்டால், பெண்களும், வயதானவர்களும் - அரசு ஆவணங்கள் பெற நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும்;
|| இடைத்தரகர்களை நாட வேண்டி இருக்கும்;
|| லஞ்சத்தை ஊக்குவிக்கும்;
|| ஏழை எளிய மக்களுக்கு அவசியமற்ற பொருளாதார பாரத்தை ஏற்படுத்தும்;
|| தேசிய / மாநில eGOVERNANCE கொள்கைக்கு மாற்றமாக இருக்கும்
போன்ற பிரச்சனைகள் உள்ளது என மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 17, 2018; 10:00 pm]
[#NEPR/2018091706]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|