காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா பள்ளிக்கு எதிரிலுள்ள அணுகுசாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிடக் கோரி CMA, RDMA, நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி ஹாஜியப்பா பள்ளி - எல்.கே.மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை இணைக்கும் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் பல ஆண்டுகளாக உள்ளன. இது சம்பந்தமாக புகார்கள் கொடுக்கப்படும் போது எல்லாம் - அவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறும் நகராட்சி, எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
சமீப காலங்களில், இது சம்பந்தமாக - கடந்த பிப்ரவரி மாதம் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு வழங்கப்பட்டது. அந்த புகார் மனுவினை, மேல் நடவடிக்கைக்காக - திருச்செந்தூர் வட்டாட்சியர், காயல்பட்டினம் நகராட்சிக்கு அனுப்பியிருந்தார்.
காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றாமல், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டதாக - மாவட்ட ஆட்சியருக்கு மார்ச் மாதம் பதில் வழங்கியுள்ளார்கள்.
ஜூலை 12, 2018 அன்று இது சம்பந்தமாக நினைவூட்டல் மனு - நகராட்சியிடம் வழங்கப்பட்டது. அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் - இந்த குறுகிய சாலையின் தென் பகுதியில், சாலைக்கு நடுவே - குடிநீர் வால்வு தொட்டி உள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள - அந்த தொட்டியையும் நகராட்சி அகற்றவில்லை.
ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுவதால் - போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது. தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கான வியாபார உரிமத்தை ரத்து செய்யவும் இதுவரை நகராட்சி எடுக்கவில்லை.
அந்த சாலையை எவ்வித ஆக்கிரமிப்புகள், வாகன நிறுத்தங்கள் இல்லாமல் - எளிதாக போக்குவரத்திற்கு பயன்படுத்தும் வகையில் கொண்டு வர வேண்டி - சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் (CMA), திருநெல்வேலி நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர் (RDMA) மற்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மனு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் - அச்சாலையில் கழிவுகள் ஊத்தப்படுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுவது குறித்தும் நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர் ஆகியோரிடமும் புகார் பதிவு செய்யப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 18, 2018; 10:30 am]
[#NEPR/2018091802]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|