காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் ஒருங்கிணைப்பில், 30.09.2018. அன்று காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்படவுள்ளது. குருதிக்கொடை தொடர்பாக – உலக சுகாதார அமைப்பின் (WHO) இலக்கை அடைய ஒத்துழைக்கக் கோரி, நகரின் பொதுநல அமைப்புகளுக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வேண்டுகோள் வைத்துள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
மருத்துவத்துறையின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று ரத்த தானங்கள் ஆகும். ஒருவர் செய்யும் ரத்த தானம் மூலம், நான்கு நபர்கள் வரை பயனடைய வாய்ப்பு உள்ளது.
இந்திய தேசிய ரத்த தான கொள்கைப்படி (NATIONAL BLOOD POLICY) - மருத்துவத்துறைக்கு தேவையான ரத்தம் - அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கிகள் மூலம் பூர்த்திசெய்யப்படவேண்டும்; மேலும் - மாற்று கொடையாளிகள் (REPLACEMENT DONORS) கேட்கப்படும் வழிமுறைகளும், முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.
உலக சுகாதார அமைப்பு (WHO) உடைய அளவுகோள்படி - மக்கள் தொகையின் சுமார் 1 சதவீதம் பேர் ரத்த தானம் செய்தால், மருத்துவத்துறைக்கு தேவைப்படும் ரத்தம், எளிதாக கிடைத்துவிடும்.
இந்த இரு சித்தாந்தங்களை அடிப்படையாக கொண்டு, நடப்பது என்ன? குழுமம் - நகரில் தொடர்ந்து ரத்த தான முகாம்களை நடத்தி வருகிறது.
2017 - 2018 காலகட்டத்தில் நடத்தப்பட்ட 3 ரத்த தானம் முகாம்கள் மூலம், 250 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். இது காயல்பட்டினம் மக்கள் தொகையில் ௦.5 சதவீதம் ஆகும்.
2018 - 2019 காலகட்டத்தில், ரத்த தானம் முகாம் - நடப்பது என்ன? குழும ஏற்பாட்டில் - ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. இதில் 28 பெண்கள் உட்பட சுமார் 122 பேர் ரத்த தானம் செய்தனர்.
2018 - 2019 காலகட்டத்தில், ரத்த தான முகாம்கள் மூலம், மக்கள்தொகையில் ஒரு சதவீதம் கொடையாளர்கள் (500 கொடையாளர்கள்) இலக்கை அடையவேண்டும் என்ற நோக்கில் நடப்பது என்ன? குழுமம் செயலாற்றி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக - இறைவன் நாடினால் - எதிர்வரும் செப்டம்பர் 30 ஞாயிறு அன்று காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில், திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து - ரத்த தானம் முகாம் நடத்திட, மெகா | நடப்பது என்ன? குழுமம் திட்டமிட்டுள்ளது.
இந்த இலக்கை அடைவதற்காக - பொது நல அமைப்புகள் மூலமாக, குருதி கொடையாளர்களை - முகாம்களுக்கு அழைத்து வர, நடப்பது என்ன? குழுமம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த இலக்கினை அடைவதன் மூலம், நம் நகரின் / தாலூக்காவின் / மாவட்டத்தின் - ரத்த தேவை எளிதாக பூர்த்தி அடைவது மட்டுமல்லாமல், பிற பகுதி மக்களுக்கும் - இறைவன் நாடினால் - இது முன்னுதாரணமாக அமையும்.
குருதிக்கொடை வழங்கும் தன்னார்வலர்களுக்கு, ஊக்குவிக்கும் விதமாக, அரசு சார்பாக சான்றிதழ் வழங்கப்படுகிறது. முகாம்கள் மூலம் - குருதிக்கொடை வழங்கும் பொது நல அமைப்பினரை ஊக்குவிக்கும் விதமாக, பாராட்டு சான்றிதழ், அவ்வமைப்புகளுக்கும் - மெகா | நடப்பது என்ன? குழுமம் சார்பாக - இறைவன் நாடினால் - வழங்கப்படவுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 16, 2018; 8:45 pm]
[#NEPR/2018091603]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|