அரசாணை நிர்ணயம் செய்துள்ள உச்சவரம்பை தாண்டி 200 சதவீதம் அளவிற்கு சொத்து வரியை உயர்த்த காயல்பட்டினம் நகராட்சி முயற்சித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் பொதுநல அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி மூலம் விதிக்கப்படும் சொத்து வரியை - குறைந்தது 200 சதவீதம் அளவிற்கு உயர்த்திட, காயல்பட்டினம் நகராட்சி தீர்மானம் இயற்றியுள்ளது.
செப்டம்பர் 4 அன்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம்படி (1671) - ZONE A, ZONE B, ZONE C என மூன்று மண்டலங்களாக காயல்பட்டினம் நகராட்சி தெருக்கள் பிரிக்கப்பட்டு - சதுர அடிக்கு 50 பைசா (A), 25 பைசா (B), 19 பைசா (C) என A, B, C மண்டலங்களுக்கு தற்போது இருக்கும் சொத்து வரி அடிப்படை மதிப்பை, 150 பைசா (A), 80 பைசா (B) மற்றும் 60 பைசா (C) என அதிகரிக்க நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
உதாரணமாக - தற்போது சொத்து வரியாக 1000 ரூபாய் செலுத்துவோர், 3000 ரூபாய் வரை வரி செலுத்தவேண்டிய வாய்ப்பு உள்ளது.
இந்த அதிகரிப்புக்கு - தமிழக அரசின் இரு அரசாணைகளை காயல்பட்டினம் நகராட்சி மேற்கோள் காண்பித்துள்ளது. அவை - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை எண்கள் 73 (19.7.2018) மற்றும் 76 (26.7.2018) ஆகும்.
இறுதியாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 76 படி, சொந்த குடியிருப்புகளுக்கு, வாடகை குடியிருப்புகளுக்கு 50 சதவீதத்திற்கும் மேல் வரி உயர்வு கூடாது (NOT MORE THAN) என்றும், குடியிருப்பு இல்லாத இதர கட்டுமானங்களுக்கு 100 சதவீதத்திற்கு மேல் வரி உயர்வு கூடாது (NOT MORE THAN) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி இருக்க, இந்த அரசாணை நிர்ணயம் செய்துள்ள உச்சவரம்பையும் தாண்டி - 200 சதவீதம் மற்றும் அதற்கும் மேல் அதிகமாக வரியினை உயர்த்தி, காயல்பட்டினம் நகராட்சி நிறைவேற்றியுள்ள தீர்மானம் சட்டப்படி செல்லாதது ஆகும்.
மேலும் - கடந்த ஆண்டு தான், நகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலை பயன்படுத்தி, காயல்பட்டினம் நகராட்சி குப்பைக்கான வரியினை (SWM FEE) அமல்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது சொத்துவரியினை 200 சதவீதம் அளவிற்கு உயர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.
காயல்பட்டினம் நகராட்சி மூலம் தற்போது வசூல் செய்யப்படும் குப்பை வரியும் - நகராட்சி வசூல் செய்யும் சொத்து வரியின் மதிப்போடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. எனவே - சொத்து வரி உயர்ந்தால், குப்பை வரியும் உயரும்.
ஏற்கனவே, பல்வேறு வரி சுமைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் மீது, இந்த சொத்து வரி உயர்வை திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். எனவே - சொத்து வரி அதிகரிப்பு முயற்சியை, காயல்பட்டினம் நகராட்சி கைவிடவேண்டும் என வேண்டி - காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு, நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி மூலம், நேற்று தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த விளம்பரம்படி - 30 தினங்களுக்குள், இந்த வரி உயர்வு சம்பந்தமாக ஆட்சேபனை ஏதும் இருப்பின், பொது மக்கள் எழுத்துப்பூர்வமாக நகராட்சிக்கு அனுப்பலாம்.
எனவே - இந்த வரி உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என நினைக்கும் பொது மக்கள், தங்கள் எதிர்ப்பை - பதிவு தபால் மூலமோ, நேரடியாகவோ காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 12, 2018; 8:00 pm]
[#NEPR/2018091202]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|