காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் ஒருங்கிணைப்பில், 30.09.2018. அன்று காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் குருதிக்கொடையளிக்கும் கொடையாளர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் சான்றிதழ் அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
உலக சுகாதார அமைப்பு (WHO) உடைய அளவுகோள்படி - மக்கள் தொகையின் சுமார் 1 சதவீதம் பேர் ரத்த தானம் செய்தால், மருத்துவத்துறைக்கு தேவைப்படும் ரத்தம், எளிதாக கிடைத்துவிடும் என்ற இலக்கை அடையும் நோக்கில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், மெகா | நடப்பது என்ன? அமைப்பு, அரசு ரத்த வங்கிகளுடன் இணைந்து, நகரில் ரத்த தான முகாம்களை நடத்திவருகிறது.
இதுவரை நடந்துள்ள நான்கு முகாம்களின் மூலம் சுமார் 400 பேர் ரத்த தானம் செய்துள்ளனர். ஒருவரின் ரத்த தானம் மூலம் - 3/4 நபர்கள் பயனடைவர்.
"...மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்..." (ஸூரத்துல் மாயிதா, வசனம் 32) என இறைமறை தெரிவிக்கிறது.
இத்தொடரின் ஐந்தாவது ரத்த தானம் முகாம் - இறைவன் நாடினால் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில், செப்டம்பர் 30 ஞாயிறு அன்று நடைபெறும். இந்த முகாமினை, மெகா | நடப்பது என்ன? - திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து நடத்துகிறது.
தமிழகத்தில் - அரசு ரத்த வங்கிகள் மூலம், ஒவ்வொரு தினமும் - 10 முகாம்களுக்கு மேல் மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு அரசு முகாம்களில் சராசரியாக 85 நபர்கள் ரத்த தானம் செய்கின்றனர்.
2016-2017 காலகட்டத்தில், அரசு வங்கிகள் மூலம் நடத்தப்பட்ட 4090 ரத்த தான முகாம்கள் வழியாக, 349,666 அலகுகள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் பெருவாரியானவை - அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு இலவசமாக வழங்கப்பட்டது என தமிழக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இது போன்ற முகாம்களே, தமிழகத்தில், ஆண்டொன்றுக்கு 9 லட்ச அலகு ரத்தம் சேகரிக்க - முதுகெலும்பாகும்.
இந்த முகாம்களில், தன்னார்வமாக கலந்துக்கொண்டு ரத்த தானம் செய்யும் கொடையாளர்களை, தமிழக அரசு சார்பாக பாராட்டி சான்றிதழ்கள் வழங்க - அரசு, ஏற்பாடு செய்துள்ளது.
இறைவன் நாடினால் - செப்டம்பர் 30 அன்று நடைபெறவுள்ள முகாமில் கலந்துக்கொண்டு, தானம் செய்யும் கொடையாளர்களுக்கும், இந்த சான்றிதழ் - தொடர்ந்து ரத்த தான முகாம்கள் மூலம் தானம் செய்ய ஊக்குவிக்கும் நோக்கில் - வழங்கப்படும்.
மாதிரி சான்றிதழ்:-
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 8, 2018; 9:45 am]
[#NEPR/2018090801]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|