சொத்து வரி உயர்வை எதிர்த்து, காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தின் மாதிரி வாசகத்தை வடிவமைத்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் பொதுநல அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் சொத்து வரியினை 200 சதவீதம் வரை உயர்த்திட காயல்பட்டினம் நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்திற்கு பொது மக்கள் - 30 தினங்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால் - இந்த வரி உயர்வு, ஏப்ரல் 1, 2018 தேதியினை அடிப்படையாக கொண்டு அமலுக்கு வரும். இதன் மூலம் - 200 சதவீதம் வரி உயர்வு ஏற்படும்.
இந்த வரி உயர்வு அவசியமற்றது என நினைப்போர், காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு அனுப்ப தோதுவாக மாதிரி ஆட்சேபனை கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கடிதம் அனுப்பும் பொதுமக்கள், தங்கள் பெயர், விலாசத்தை முழுமையாக எழுதி - கடிதத்தில் உள்ள வாசகங்களை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு, ஆணையருக்கு - பதிவு தபால் வாயிலாக - ஆட்சேபனை மனு அனுப்பலாம்.
தபால் அனுப்ப முடியாதவர்கள், commr.kayalpattinam@tn.gov.in என்ற ஈமெயில் முகவரிக்கு ஆட்சேபனை கடிதம் அனுப்பலாம்.
===================================================================
/9/2018
அனுப்புனர்
[உங்கள் பெயர்],
[உங்கள் முகவரி].
பெறுநர்
ஆணையர்,
காயல்பட்டினம் நகராட்சி,
காயல்பட்டினம்.
628 204
ஐயா,
பொருள்;- காயல்பட்டினம் நகராட்சி - சொத்து வரி உயர்வுக்கு ஆட்சேபனை பதிவு - குறித்து
பார்வை:- தங்களின் செப்டம்பர் 11, 2018 தேதியை தினத்தந்தி விளம்பரம்
பார்வையில் காணப்படும் விளம்பரம் வாயிலாக, காயல்பட்டினம் நகராட்சி மூலம் வசூல் செய்யப்படும் சொத்து வரியினை உயர்த்திட நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக அறிய வந்தோம். இந்த வரி அதிகரிப்பு அவசியமற்றது. ஏற்கனவே - அரசுக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வகையான வரிகளை நாங்கள் செலுத்தி வருகிறோம்.
ஏற்கனவே வசூல் செய்யப்படும் வரி மூலம் திரட்டப்படும் நிதியினை, வீண் விரையம் செய்யாமல், முறையாக செலவிட்டாலே மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம்.
மேலும் - காயல்பட்டினம் நகராட்சியில் தற்போது மக்கள் பிரதிநிதிகள் இல்லை. மக்கள் பிரதிநிதிகள் இருந்திருந்தால், இந்த வரி உயர்வுக்கு - மக்கள் உணர்வை அறிந்து - அனுமதி வழங்கியிருக்க மாட்டார்கள்.
நகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலை பயன்படுத்தி கடந்த ஆண்டு குப்பைக்கான வரியினை அறிமுகப்படுத்தியது போல, தற்போது சொத்து வரியினை உயர்த்த முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது.
எனவே - சொத்து வரி உயர்வு முயற்சியினை கைவிடும்படி தங்களை கேட்டுக்கொண்டு, எனது ஆட்சேபனையை பதிவு செய்கிறேன்.
இவண்,
தங்கள் உண்மையுள்ள,
[உங்கள் கையொப்பம்]
=============================================
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 12, 2018; 10:15 pm]
[#NEPR/2018091203]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|