காயல்பட்டினத்திலிருந்து இ பொதுசேவை மையம் இடமாற்றம் செய்யப்படும் திட்டத்தைக் கைவிடக் கோரி “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அரசிடம் முறையிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில், TACTV என்ற அரசு நிறுவனம் மூலம், ஒரு ஊழியரை கொண்டு, இசேவை மையம், ஜூலை 15, 2015 முதல் இயங்கி வருகிறது. இந்த மையம் மூலம் - 60 க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை, மின்வாரியத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த சேவைகளை பொது மக்கள் பெறமுடியும்.
50,000 மக்கள்தொகை கொண்ட இரண்டாம் நிலை நகராட்சியான காயல்பட்டினம் நகராட்சியில், இசேவை மையங்கள் மூலம், பல மக்கள் பல்வேறு சேவைகளை பெற்று வந்தனர். இதனால் - நீண்ட தூரம் சென்று, இடை தரகர்களுக்கு அவசியம் இல்லாமல் பணம் கொடுத்து சான்றிதழ் பெறவேண்டிய சூழல் தவிர்க்கப்பட்டு வந்தது.
நிலைமை இவ்வாறிருக்க, புதிதாக துவக்கப்பட்டுள்ள ஏரல் தாலுகாவிற்கு, காயல்பட்டினம் நகராட்சியில் இயங்கி வரும் இ சேவை மையம் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ஊர், திருச்செந்தூர் தாலுகாவில் மிகப்பெரிய ஊரான காயல்பட்டினம் நகராட்சியில் இயங்கும் இசேவை மையத்தை மூடும் முயற்சியை, 50,000 மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு கைவிட வேண்டும் என எனக்கோரி - தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு செயலர், தகவல் தொழில்நுட்பவியல் துறை அரசு செயலர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், திருச்செந்தூர் கோட்டாட்சியர், திருச்செந்தூர் வட்டாச்சியர் ஆகியோருக்கு நடப்பது என்ன? குழுமம் சார்பாக - செப்டம்பர் 12 அன்று மனு அனுப்பப்பட்டது.
இது சம்பந்தமாக திருச்செந்தூர் தாலுகா துணை தாசில்தார் திரு குமாரசாமி அவர்களை நேரில் சந்தித்து, நடப்பது என்ன? குழுமம் சார்பாக மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இச்சந்திப்பின் போது - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி IAS அவர்களின் கவனத்திற்கு இப்பிரச்சனையை, திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார், நடப்பது என்ன? குழுமத்திடம் உறுதி அளித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 14, 2018; 10:45 pm]
[#NEPR/2018091403]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|