காயல்பட்டினம் கடற்கரையோரம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து பல்வேறு துறைகளுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ள தகவலை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் தகவலறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரையோரமாக உள்ள புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
இது சம்பந்தமாக கடந்த ஆண்டு முதல், நடப்பது என்ன? குழுமம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இப்பிரச்சனை - பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்கியது என்பதை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, இவ்விஷயங்கள் சம்பந்தமாக வெளியாகியுள்ள அரசாணைகள் கூறும் வழிகாட்டுதல்கள் படி, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
====
சட்டத்திற்கு புறம்பாக குருசடிக்கு வழங்கப்பட்ட மின்னிணைப்பு துண்டிப்பு / ஆக்கிரமிப்பு அகற்றுதல்
====
காயல்பட்டினம் கடற்கரையோரம், பொது மக்கள் அமரும் பூங்கா பகுதிக்கு அருகே, 1990 களில் குருசடி அமைப்பதற்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. முறையாக இதற்கு தீர்வுக்காணப்படாததால், படிப்படியாக அந்த ஆக்கிரமிப்பு வளர்ந்து - சில ஆண்டுகளுக்கு முன்பு, மின்னிணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.
புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து உருவாக்கப்படும் கட்டுமானங்கள்/வழிபாட்டுத்தலங்களுக்கு - மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்றிதழ் (NOC) இல்லாமல் மின்னிணைப்பு வழங்கக்கூடாது என்ற அரசாணை / நீதிமன்ற உத்தரவுகளை மீறி - இந்த மின்னிணைப்பு வழங்கப்பட்டுள்ளதை அறிந்த நடப்பது என்ன? குழுமம் - இது குறித்து மின்வாரியத்துறையின் புகார்கள் விசாரிக்கும் அமைப்புக்கு (CGRF) தெரிவித்தது.
சட்டத்திற்கு புறம்பாக வழங்கப்பட்டுள்ள இந்த மின்னிணைப்பை நீக்க மின்வாரியத்துறை SHOW CAUSE நோடீஸ் அனுப்ப, மாவட்ட ஆட்சியரிடம் NOC கோரி விண்ணப்பம் செய்துள்ளதாக கூறி, கால அவகாசம் கேட்டு, இடைக்கால தடையினை பெற்றனர் அந்த குருசடிக்கு பின்னணியில் உள்ளவர்கள். இந்த வழக்கு தற்போது - சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது.
இவ்வழக்கில் இதுவரை அரசு தரப்புகள் பதில் தாக்கல் செய்யாததை சுட்டிக்காட்டி, நடப்பது என்ன? குழுமம் சார்பாக ஜூன் 25 அன்று - மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. இது குறித்து, மின்வாரியத்திற்கு கடிதம் (E1/3758/2017) எழுதப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பதில் தற்போது வழங்கியுள்ளார்.
இதே விஷயத்தில், சட்டத்திற்கு புறம்பாக - புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள குருசடியை அகற்றுவது குறித்து நடப்பது என்ன? குழுமம், அரசாணை வகுத்துள்ள நடைமுறைப்படி - வட்டாச்சியர், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆட்சியரிடம் புகார்கள் தெரிவித்தும் - இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, ஜூன் 25 அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு வழங்கப்பட்டது.
அதற்கு பதில் வழங்கியுள்ள, மாவட்ட ஆட்சியர் - இது குறித்து நடவடிக்கை எடுக்க - திருச்செந்தூர் கோட்டாட்சியருக்கு கடிதம் (D4/11835/2017) எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
==========================
கடற்கரையோரம் இதர ஆக்கிரமிப்புகள்
==========================
காயல்பட்டினம் கடற்கரையோரம் - மக்கள் அமரும் பூங்கா பகுதிக்கு அருகே, சுமார் 150 ஆக்கிரமிப்புகள், CRZ விதிமுறைகளை மீறி, புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ளது.
ஏற்கனவே இப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் - புதிதாக, மீண்டும் அங்கு ஆக்கிரமிப்புகள் உருவாகியுள்ளன.
இது குறித்தும் கடந்த ஆண்டு நடப்பது என்ன? குழுமம் சம்பந்தப்பட்ட துறையினருக்கு - அரசாணைகள், சட்டதிட்டங்கள் வழிகாட்டுதல்படி - புகார்கள் தெரிவித்தது.
இந்த புகார்கள் மேல் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஜூன் 25 அன்று வழங்கப்பட்ட மனுவிற்கு பதில் வழங்கியுள்ள மாவட்ட ஆட்சியர், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 17, 2018; 8:00 am]
[#NEPR/2018091701]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|