சொத்து வரி அதிகரிப்பு, இ-சேவை மையம் இடமாற்ற முயற்சி, வாடகை வீடுகளில் குடியேறும் வெளியூர் வாசிகளைக் கண்காணித்தல், சிசிடீவி கேமரா தொடர்பாக அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளுக்கு காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வேண்டுகோள் கடிதம் நேரில் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
சொத்துவரி அதிகரிப்பு, இ சேவை மையம், வாடகை வீடுகளில் குடியேறும் வெளியூர் சார்ந்தவர்கள், சி.சி.டி.வி. கேமராக்கள் ஆகியவை குறித்து - நகரின் அனைத்து ஜமாஅத்துகள் / ஊர் நல அமைப்புகளுக்கும் - நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், இன்று நேரில் சந்தித்து கடிதங்கள் கொடுத்தனர்.
----------------
சொத்துவரி அதிகரிப்பு
----------------
காயல்பட்டினம் நகராட்சி மூலம் வசூல் செய்யப்படும் சொத்துவரியினை 200 சதவீதம் வரை உயர்த்திட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 10 அன்று வெளியான அறிவிப்புப்படி, 30 தினங்களுக்குள் பொது மக்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
மாதிரி ஆட்சேபனை கடிதத்தை இணைத்து, இவ்வரி சம்பந்தமான முழு விளக்கம் அடங்கிய கடிதம், ஜமாஅத்துகள் / ஊர் நல அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்டது. மேலும் - அந்தந்த பகுதி மக்களை, இதற்கான எதிர்ப்பினை பதிவு செய்யக்கோரி, தகவல் தெரிவிக்கவும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
----------------
இ சேவை மையம்
----------------
காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில் ஜூலை 2015 முதல் இயங்கி வரும் இ சேவை மையம், புதிதாக துவக்கப்பட்டுள்ள ஏரல் தாலூக்காவிற்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கான எதிர்ப்பினை, ஜமாஅத்துகள் / ஊர் நல குழுக்கள் சார்பாக, மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
----------------
வாடகை வீடுகளில் குடியேறும் வெளியூர் சார்ந்தவர்கள்
----------------
சமீப காலங்களில், நகரில் வெளியூர்கள் / வெளிமாவட்டம் / வெளிமாநிலத்தில் இருந்து குடியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களில் பெருவாரியானவர்கள் கண்ணியமானவர்கள் என்றாலும், ஒரு சிலரால் பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
சென்னை, டில்லி போன்ற பெரு நகரங்களில், வாடகை வீடுகளில் குடியமருவோர் குறித்து தகவல்கள், காவல்துறை மூலம், சிறப்பு படிவங்கள், வாயிலாக சேகரிக்கப்படுகிறது. இது போன்று - ஒவ்வொரு ஜமாஅத் / ஊர் நல குழுக்களும், தங்கள் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியேறுவோர் விபரங்களை, சிறப்பு படிவங்களில் சேகரிக்க வேண்டி - மாதிரி படிவம் அடங்கிய கடிதம் கொடுக்கப்பட்டது.
இக்கோரிக்கை - கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், நடப்பது என்ன? குழுமம் சார்பாக ஜமாத்துகளுக்கும் / ஊர் நல குழுக்களுக்கும் வைக்கப்பட்டு வருகிறது. இது ஒரு தொடர் நினைவூட்டல் முயற்சி.
----------------
சி.சி.டி.வி. கேமராக்கள்
----------------
நகரில் சமீப காலங்களில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த - கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், 100 சதவீதம், காயல்பட்டினம் பொது இடங்கள் - சி.சி.டி.வி. கேமராக்கள் பார்வைக்குள் வரவேண்டும் என்ற இலக்கை அடைய, நடப்பது என்ன? குழுமம் தொடர்ந்து பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகிறது. அதன் பயனாக, நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுவரை சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தாத பகுதிகளில் கேமராக்கள் பொருத்தவேண்டி கடிதம் இன்று கொடுக்கப்பட்டது. இது ஒரு தொடர் நினைவூட்டல் முயற்சி.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 13, 2018; 10:00 pm]
[#NEPR/2018091302]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|