கடற்கரையை சுத்தமாக வைக்க தவறிய குத்தகைதாரர் உரிமத்தை ரத்து செய்ய - CMA, RDMA மற்றும் நகராட்சி ஆணையருக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரை - மாநிலத்திலேயே மிகப்பெரிய கடற்கரைகளில் ஒன்று. பொது மக்கள் வாழும் பகுதியில், குறுகிய அணுகு சாலை கொண்டு அமைந்துள்ள இந்த கடற்கரையை, காலம் காலமாக பொது மக்கள், அமைதியாக அனுபவித்து வந்தனர்.
இருப்பினும் - சமீப காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட வணிக முயற்சிகளால், இந்த கடற்கரையில் பல்வேறு சீர்கேடுகள் நடக்கின்றன. குறிப்பாக மது அருந்துவது, போதை பொருட்கள் விற்பது போன்றவையாகும். இதற்கு முக்கிய காரணம் - இந்த கடற்கரையை பொது மக்களின் விருப்பத்தின் மாறாக, சுற்றுலா தலமாகவும், வியாபார தலமாகவும் மாற்றிடும் முயற்சிதான்.
இதனால் - குறுகிய அணுகு சாலை கொண்ட இந்த கடற்கரை பகுதியை, உள்ளூர் மக்கள் நிம்மதியாக அனுபவிக்க முடிவதில்லை. அநேக நாட்களில் அசுத்தமாகவும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளது.
காயல்பட்டினம் நகராட்சியில் 27-6-2017 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் (எண் 1394) மூலம் - கடற்கரை பூங்காவில் சிறு கடைகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் உரிமம் குறித்த துணை விதிகள் அறிவிக்கப்பட்டன.
அவைகள் விபரம் வருமாறு:
=============================================
(a) சிறு வியாபாரிகள் ஒன்றுக்கு ரூ.10 கட்டணம் வசூல்
(b) தள்ளுவண்டி வியாபாரிகள் ஒன்றுக்கு ரூ.20 கட்டணம் வசூல்
(c) ஐஸ்கிரீம் வண்டி ஒன்றுக்கு ரூ.50 கட்டணம் வசூல்
1) கடற்கரைப் பகுதியில் (மணல்பரப்பில்) கடைகள் அமைக்க அனுமதி கிடையாது
2) கடற்கரை பகுதியின் வெளிப்புறம் (அணுகுசாலையின் அருகில்) கடை அமைக்க அனுமதி வழங்கப்பட வேண்டும்
3) விளையாட்டு சாதனங்கள் அனுமதிக்கக்கூடாது
4) வியாபாரிகளால் உருவாக்கப்படும் குப்பைகளை குத்தகைதாரர் சொந்த பொறுப்பில் சுத்தம் செய்யப்படவேண்டும். தவறினால் உரிய கட்டணம் வசூலிக்கப்படும்
5) தடை செய்யப்பட்ட 40 மைக்ரான் கீழ் உள்ள பிளாஸ்டிக் கப்கள் (ம) பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யக்கூடாது
=============================================
இருப்பினும் - இந்த விதிமுறைகளை மீறி, கடற்கரை மணற்பரப்பில் கடைகள் அமைக்கப்படுகின்றன;
விளையாட்டு சாதனங்கள் நிறுவப்படுகின்றன; குப்பைகளை - குத்தகைதாரர் அப்புறப்படுவதில்லை.
இது சம்பந்தமாக பல்வேறு தருணங்களில் நகராட்சியிடம் மனு வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக ஜூன் 25, 2018 அன்று வழங்கப்பட்டது.
இருப்பினும் இது குறித்து நகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு சில நகராட்சி ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு இதனை அனுமதிப்பதாக தெரிகிறது.
எனவே - பல மாதங்களாக, தொடர்ந்து விதிமுறைகளை மீறி வரும் குத்தகைதாரர் உரிமத்தை ரத்து செய்து, மணற்பரப்பில் கடைகள் / விளையாட்டு சாதனங்கள் வைப்பதை தடை செய்யும்படி கோரி - நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் (CMA), நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர் (RDMA) மற்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு மனு வழங்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 11, 2018; 8:00 am]
[#NEPR/2018091101]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|