காயல்பட்டினத்திலுள்ள 5 பள்ளிக்கூடங்கள் கல்விக்கட்டண நிர்ணயம் செய்ய தமது வரவு – செலவு விபரங்களை அரசிடம் சமர்ப்பிக்கவில்லை என்ற தகவலை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமம் பொதுநல அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க 2009-ம் ஆண்டு, Tamil Nadu Schools (Regulation of Collection of Fee) Act என்ற சட்டம் அப்போதைய தமிழக அரசால் இயற்றப்பட்டது.
இதன்படி, தமிழகத்தில் உள்ள சுமார் 10,000 தனியார் பள்ளிக்கூடங்களில் கல்விக்கட்டணங்களை, பள்ளிக்கூடங்களிடம் கலந்தாலோசனை செய்து, அரசே நிர்ணயம் செய்யும். அந்த கட்டணத்திற்கு மேல் வேறு எந்த கட்டணமும் வாங்க கூடாது.
மே மாதம் துவக்கத்தில் - நகரின் அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களுக்கும், நடப்பது என்ன? குழுமம் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டது. அதில் - அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக்கட்டணத்தை தவிர கூடுதலாக, மாணவர்களிடம் வசூல் செய்யவேண்டாம் எனவும் கேட்டு கொள்ளப்பட்டிருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தின் 148 தனியார் பள்ளிக்கூடங்களின் மூன்று ஆண்டுகளுக்கான (2017-2018, 2018-2019, 2019-2020) கல்விக்கட்டணம் விபரம், தமிழக அரசு தனியார் பள்ளிக்கூடங்களில் கல்விக்கட்டணம் நிர்ணயம் குழு (Tamil Nadu Private Schools Fee Determination Committee) மூலம் - முதல் கட்டமாக - மே மாதம் வெளியாகின.
அந்த பட்டியலில் காயல்பட்டினம் சார்ந்த மூன்று பள்ளிக்கூடங்கள் (சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, காட் நீதான் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி) விபரமும் அடங்கும். அந்த 3 பள்ளிக்கூடங்களுக்கு, அரசு குழு நிர்ணயம் செய்துள்ள கட்டணம் விபரம், துண்டு பிரசுரம் மூலமாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - வெளியிடப்பட்டது.
மேலும் அந்த விழிப்புணர்வு பிரசுரத்தில், நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட அதிகமாக வசூல் செய்தால், கீழ்க்காணும் முகவரிக்கு, ஆவணங்களுடன் புகார் செய்ய தெரிவிக்கப்பட்டிருந்தது.
Tamil Nadu Private Schools Fee Determination Committee,
DPI Campus,
College Road,
Chennai - 600 006.
அதனை தொடர்ந்து, ஒரு சில பெற்றோர்கள் - கல்விக்கட்டணம் குழுவிற்கு புகார்கள் செய்துள்ளனர்; அந்த புகார்கள் மீது தலைமை கல்வி அதிகாரி (CEO) / மாவட்ட கல்வி அதிகாரி (DEO) ஆகியோர் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நகரின் கீழ்க்காணும் 6 பள்ளிக்கூடங்களின் கல்விக்கட்டணம் விபரங்கள் அந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
(1) அல் அமீன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி
(2) ரஹ்மானியா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி
(3) முஹைதீன் மெட்ரிகுலேசன் மற்றும் மேனிலைப்பள்ளி
(4) கமலாவதி மேனிலைப்பள்ளி
(5) சுபைதா மேனிலைப்பள்ளி
(6) ஸ்ரீ சத்ய சாய் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி
இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறையினரிடம் விசாரித்ததில், அந்த பள்ளிக்கூடங்கள் - கட்டணம் நிர்ணயம் செய்ய - தங்கள் வரவு - செலவு விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும், உடனடியாக அந்த விபரங்களை சமர்ப்பிக்க நோடீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் - பள்ளிக்கூடங்கள் திறந்து ஏறத்தாழ 4 மாதங்கள் ஆகியும், அப்பள்ளிக்கூடங்களின் விபரம் இது வரை வெளியாகவில்லை.
இதனை அடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் - இது குறித்த விபரம், தமிழ்நாடு தனியார் பள்ளிக்கூடங்கள் கட்டணம் நிர்ணயம் குழுவிடம் கோரப்பட்டது. அதற்கு பதில் வழங்கியுள்ள குழு, முதல் பட்டியலில் இடம்பெறாத காயல்பட்டினம் சார்ந்த 6 பள்ளிக்கூடங்களில் - ஒரு பள்ளிக்கூடம் மட்டும் (அல் அமீன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி) விபரத்தை சமர்ப்பித்ததால், அந்த பள்ளிக்கூடத்திற்கான ஓர் ஆண்டு கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மீதியுள்ள 5 பள்ளிக்கூடங்கள் - இதுவரை விபரங்களுடன் குழுவினை அணுகவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கல்விக்கட்டணத்தை அரசு மூலம் நிர்ணயம் செய்யாமல் அதிகமாக கல்விக்கட்டணம் வசூல் செய்யும் இந்த பள்ளிக்கூடங்கள் குறித்த புகாரினை பொது மக்கள் - CEO அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட தலைமை கல்வி அலுவலர் முகவரி கீழே:
Chief Educational Officer (CEO),
Seenavana Higher Secondary School Campus,
Devarpuram Road,
Thoothukudi - 628002
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 13, 2018; 9:30 am]
[#NEPR/2018091301]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|