விதிகளை மீறிய தனியார் பேருந்துகள் குறித்து, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் நேரில் முறையிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய அரசு போக்குவரத்து பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் தொடர்ந்து காயல்பட்டினம் வழியை புறக்கணிப்பதை பல்வேறு தருணங்களில் அரசு அதிகாரிகள் கவனத்திற்கு - நடப்பது என்ன? குழுமம் எடுத்து சென்றுள்ளது.
செப்டம்பர் 14 அன்று காயல்பட்டினம் ஓடக்கரை பகுதியை சார்ந்த ஐ.சுயம்புலிங்கம் என்பவர் - திருச்செந்தூரில் இருந்து MRG என்ற தனியார் பேருந்தில் மதியம் 1 மணியளவில் ஏறியுள்ளார். தூத்துக்குடிக்கு செல்லும் இப்பேருந்து, வழமையாக காயல்பட்டினம் வழியாக தான் செல்லவேண்டும்.
ஆனால் - இப்பேருந்தின் நடத்துனர், காயல்பட்டினம் செல்லாது என அப்பயணியை வலுக்கட்டாயமாக, பேருந்தில் இருந்து இறக்கிவிட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல், கடுமையான வார்த்தையிலும் அந்த பயணியை - நடத்துனர் - விமர்சித்துள்ளார்.
NKR என்ற தனியார் நிறுவன பேருந்து - காயல்பட்டினம் வழியாக இயக்கப்படுகிறது. இப்பேருந்து - மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக, வேகமாக ஒட்டப்படுகிறது என்ற புகார் பொது மக்கள் மத்தியில் உள்ளது.
கடந்த செப்டம்பர் 4 அன்று மதியம் 11:30 மணியளவில், NKR பேருந்து - காயல்பட்டினம் பேருந்து நிலையம் உள்ளே செல்லாமல், அரசு பேருந்து ஒன்று முன்னே சென்றதால், அதனை முந்த வேண்டும் என்ற நோக்கில் - கட்டுக்கடங்காத வேகத்தில் சென்றது.
மயிரிழையில் அங்கு கூடியிருந்த பொது மக்கள் தப்பினர். அதிர்ச்சிக்குள்ளான மக்கள் பேருந்தை இடைமறித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். அப்போதும் - பேருந்து ஓட்டுநர் / நடத்துனர், அலட்சியமாக - அரசு பேருந்து காயல்பட்டினம் வரக்கூடாது, வருகிறார்கள் என கூறிவிட்டு சென்றிவிட்டார்கள்.
NKR பேருந்து மூலம் இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நடக்கின்றன. இதனால் - பேருந்து நிலையம் சுற்றிய பகுதியில் இப்பேருந்து வந்து செல்லும் போது ஒரு பதட்டமான சூழல் நிலவுகிறது.
எனவே - இவ்விரு சம்பவங்களில் தொடர்பான பேருந்து நிறுவனங்கள், ஓட்டுனர்கள் / நடத்துனர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) - நடப்பது என்ன? குழுமம் சார்பாக, கோரிக்கை மனு இன்று வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 17, 2018; 7:30 pm]
[#NEPR/2018091705]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|