சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு பணிகளை மேற்கொள்ளக் கோரி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் நேரில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
சுமார் 45,000 மக்கள், 34,000 வாக்காளர்கள் கொண்ட காயல்பட்டினம் நகரம் - தூத்துக்குடி மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ஊர். மேலும் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி பகுதியில் - காயல்பட்டினம் தான் பெரிய ஊராகும். 12.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட, இக்கடலோர ஊருக்கு என பல்வேறு தேவைகள் உள்ளன.
மாநில அரசாங்கம் - ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும், அவரின் தொகுதியின் தேவைகளை பூர்த்தி செய்ய - ஆண்டொன்றுக்கு 2 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. நடப்பு ஆண்டில் இது 2.5 கோடி என அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் - அத்தொகுதியின் அனைத்து பகுதி மக்களும், வளர்ச்சி திட்டங்கள் பெற விரும்புவர்.
சட்டமன்ற தொகுதியில் மிக பெரிய ஊர் என்ற அடிப்படையில் காயல்பட்டினத்திற்கு - திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம், அதிகளவில் பணிகள் நடைபெறவேண்டும் என காயல்பட்டினம் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.
இருப்பினும் பிற பகுதி மக்களும் இதே எதிர்பார்ப்பில் இருப்பர் என்பதை கருத்தில் கொண்டு, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கையில், காயல்பட்டினம் வாக்காளர்கள் - 15 சதவீதம் என்பதால், மாநில அரசு - ஐந்தாண்டுகளில் ஒதுக்கும் குறைந்தது 12.5 கோடி ரூபாயில், 15 சதவீதமான, குறைந்தது 1.875 கோடி ரூபாய் - காயல்பட்டினம் நகர் பணிகளுக்கு ஒதுக்கிட கோரி - திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் MLA அவர்களிடம் இன்று தூத்துக்குடியில் உள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் கோரிக்கை மனு, நடப்பது என்ன? குழுமம் சார்பாக சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது தி.மு.க. நகரச்செயலாளர் ஜனாப் முத்து முஹம்மது உடனிருந்தார்.
சட்டமன்ற உறுப்பினர் நிதியை எவ்வாறு பயன்படுத்தலாம் என தமிழக அரசு - மே 31, 2018 அன்று வெளியிட்ட அரசாணை எண் 72 (Rural Development and Panchayat Raj Department) விதிமுறைகள் அனுமதிக்கும் ஷரத்து எண், கோரிக்கை விவரத்துடன் அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பது என்ன? குழுமம் சார்பாக, சட்டமன்ற உறுப்பினரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:
(1) ஜாபர் அப்பா தர்கா - ஐ.ஓ.பி. சந்திப்பில் பயணியர் நிழல்கொடை [provision (2)]
(2) ஊராட்சி ஒன்றியப்பள்ளி (தைக்கா தெரு) - மாணவர்களுக்கு தேவையான பெஞ்ச் மற்றும் நாற்காலிகள் [provision 3.4 (ii)]
(3) ஊராட்சி ஒன்றியப்பள்ளி (தைக்கா தெரு) முன்னர் இயங்கிவந்து, தற்போது காலியாக உள்ள இடத்தை சுற்றி சுவர் எழுப்புதல் [provision 1.5 (b) (5)]
(4) எல்.எப். சாலையில் - ரத்தினாபுரி அருகில் உள்ள நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு பூங்கா [provision 1.5 (b) (10)]
(5) காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு தேவையான புதிய வெளிநோயாளிகள் அறைகள் [provision 1.5 (b) (5)]
(6) காயல்பட்டினம் பெண்கள் அரசு மேனிலைப்பள்ளிக்கு (தீவு தெரு) புதிய வகுப்பறைகள் [provision 1.5 (b) (5)]
இது தவிர - காயல்பட்டினம் பகுதியின் அனைத்து மக்களின் ஆலோசனைகளை கேட்டும், அனைத்து பகுதி மக்களையும் சந்தித்து அவர்களின் தேவைகளை அறிந்தும் - இந்நிதிமூலம், பணிகள் மேற்கொள்ளவும் சட்டமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
மேலும் - இந்த சந்திப்பின் போது, எவ்வாறு, கடந்த இரு ஆண்டுகளாக, பல்வேறு கட்சி, கொள்கை, சிந்தனை கொண்ட அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து, மெகா | நடப்பது என்ன? குழுமம் - பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட பணிகளை - இறைவனின் உதவிக்கொண்டு - நகரில் செய்து வருகிறது என்பதனை சட்டமன்ற உறுப்பினரிடம் விரிவாக நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 5, 2018; 8:00 pm]
[#NEPR/2018090503]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|