காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கும் கழிவுகளைப் பயனுள்ளவையாக மாற்றிட நகராட்சியால் பல்வேறு செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு, பொதுமக்களுக்கும் அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், நகராட்சிக்குட்பட்ட வீடுகளில் சேரும் கழிவுகளை வீட்டுக்குள்ளேயே மறுசுழற்சி முறையில் உரமாக்கி, வீட்டு மாடியிலேயே மாடித் தோட்டம் அமைத்து, அங்கு வளர்க்கப்படும் செடிகளுக்குப் பயன்படுத்திட – குடும்பப் பெண்களுக்கு சிறப்புப் பயிற்சியளிக்கும் நோக்குடன், 24.09.2018. திங்கட்கிழமையன்று 11.00 மணியளவில் நகராட்சி கூட்டரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ப்ரேம் ஆனந்த் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் விழிப்புணர்வுரையாற்றினார்.
வீடுகளில் தேங்கும் குப்பைகள் பல பயன்களைத் தரத்தக்க மகத்துவமிக்கவை என்றும், அவற்றை எடுத்துச் செல்வதற்கு நகராட்சிப் பணியாளர்களை எதிர்பார்த்துக் கொண்டிராமல், அவரவர் வீடுகளிலேயே மறுசுழற்சி செய்து, உரமாக்கி, வீட்டு மாடியிலேயே பாதுகாப்பான முறையில் மாடித்தோட்டம் அமைத்து, வீடுகளுக்குத் தேவையான காய்கறிகள், கீரை வகைகளைப் பயிரிடவும், அச்செடிகளுக்கு – வீட்டுக் குப்பைகளிலிருந்து பெறப்பட்ட உரத்தையே பயன்படுத்தவும் பொதுமக்கள் முன்வர வேண்டுமென்றும், இதன் அருமையை உணர்ந்து, நகர் முழுக்க அவரவர் வீடுகளில் செய்யத் துவங்கினால், நகரம் குப்பையில்லாத – சுகாதாரமான நகரமாகும் என்றும், தம் வீட்டுக் குப்பைகள் பற்றாக்குறைக்கு பிறர் வீட்டிலிருந்தும் கழிவுகளைக் கேட்டுப் பெறும் நிலை ஏற்படும் என்றும் அவர் பேசினார்.
அவரைத் தொடர்ந்து, வீடுகளில் மாடித்தோட்டத்தைப் பாதுகாப்பான முறையில் அமைத்துப் பயன்பெறுவது பற்றி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளரும் – மாடித்தோட்டப் பயிற்றுனருமான தனலட்சுமி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து ஏற்கனவே வீடுகளில் மாடித்தோட்டம் அமைத்துள்ள பெண்களும், மகளிர் சுய உதவிக் குழுவினரும் திரளாகக் கலந்துகொண்டனர். அவர்கள் கேட்ட சந்தேகங்களுக்குப் போதிய விளக்கமும் நிகழ்ச்சியின் நிறைவில் அளிக்கப்பட்டது.
வீடுகளில் சேரும் கழிவுகளை உரமாக்குவதற்கான மறுசுழற்சித் தொட்டி மூலம் பங்கேற்றோருக்கு செய்முறைப் பயிற்சியுமளிக்கப்பட்டது. இரண்டு அளவுகளில் தொட்டிகளும், பல்வேறு அளவுகளில் செடி வளர்ப்புப் பையும் (grow bag) விற்பனை செய்யப்படுவதாகவும், இப்பொருட்கள் தேவைப்படுவோரும் – நகராட்சியின் திடக்கழிவு மூலம் பெறப்படும் நுண்ணுயிர் உரம் தேவைப்படுவோரும், நகராட்சி அலுவலக வேலை நாட்களில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உரிய தொகை செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், பொதுமக்கள் அனைவரும் தயங்காமல் பயன்பெறுவதற்காக மிகக் குறைந்த கட்டணத்திலேயே அவை விற்கப்படுவதாகவும், சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.
|