காயல்பட்டினம் வரலாற்றைப் பறைசாற்றும் அருங்காட்சியகத்தை நகரில் அமைத்திடுமாறு தமிழக அரசைக் கோரி, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் வரலாற்று சிறப்புமிக்க, கடற்கரை ஊராகும். இரண்டாம் நிலை நகராட்சியான இவ்வூரில் 50,000 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் மூன்றில் இருவர் - இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்தவர்கள் ஆவர்.
கிருஸ்தவர்கள் பெருவாரியாக வாழும் வீரபாண்டியன்பட்டினம் - இந்நகருக்கு தெற்கில் உள்ளது. ஹிந்து சமுதாயத்தினர் பெருவாரியாக வாழும் திருச்செந்தூர் - இந்நகருக்கு 8 கிலோமீட்டர் தெற்கில் உள்ளது. பழம்பெரும் ஊரான கொற்கை வெகுதொலைவில் இல்லை.
காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களின் வரலாறு - பல்வேறு வகைகளில் ஆவணப்படுத்தபப்ட்டுள்ளது.
வட இந்தியாவிற்கு - பன்னிரண்டாம் நூற்றாண்டில் இஸ்லாமிய மார்க்கம் வருவதற்கு முன்பே - கேரளா மற்றும் தென் தமிழகம் வாயிலாக, ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாமிய மார்க்கம் வந்ததாக வரலாறு கூறுகிறது. தென் இந்தியாவில் உள்ள காயல்பட்டினம் - முதன்முதலாக இந்தியாவில் இஸ்லாமிய மார்க்கம் தோன்றிய இடங்களில் ஒன்று என நம்பப்படுகிறது.
காயல் நகரை வணிகத்திற்கு முக்கிய தலமாக, பிரபல இத்தாலிய பயண வரலாற்று ஆசிரியர் மார்கோ போலோ - பதிமூன்றாம் நூற்றாண்டில் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பிரபல பயண வரலாற்று ஆசிரியர் இப்னு பதூதா - காயல் குறித்து - தனது புத்தகங்களில் விரிவாக எழுதியுள்ளார்.
காயல்பட்டினம் நகரில் காணப்பட்ட கல்வெட்டுகளை ஆய்வு செய்த ARCHAEOLOGICAL SURVEY OF INDIA (ASI) என்ற நடுவணரசின் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம், பதினான்காம் நூற்றாண்டில் இருந்தே காயல்பட்டினம் நகரில் இருந்து உலகளவில் வணிகம் நடந்ததற்கான சான்றுகளை வெளியிட்டுள்ளது.
கிருஸ்துவ மத போதகர் பிரான்சிஸ் சேவியர் - பதினாறாம் நூற்றாண்டில் காயல்பட்டினம் வருகை புரிந்தது - அவரின் ஆதாரப்பூர்வமான கடிதங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்னும் சொல்லப்போனால், போர்ச்சுகீஸ் நாட்டு படையினரும், காயல்பட்டினம் மக்களும் - எவ்வாறு வணிக மேலாதிக்கத்திற்காக, பதினாறாம் நூற்றாண்டில் போராடினார்கள் என்பதற்கான சான்றுகளும் உள்ளன. இதே காலகட்டத்தில், இது போன்ற போராட்டம், கேரளா பகுதியிலும் நடந்தது இதனை உறுதி செய்கிறது. [பார்க்கவும் - ஜைனுத்தீன் மக்தூம் எழுதிய துஹ்பத் அல் முஜாஹிதீன்].
கடந்த காலங்களில் காயல்பட்டினம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு பழம் பொருட்கள் தற்போது பல தனியார்கள் வசம் உள்ளதாக கூறப்படுகிறது.
கோஸ்மரை பகுதியில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட கற்கள் பழமைவாய்ந்த குடியிருப்புகளின் அடையாளங்கள் என பட்டறிவு வாய்ந்த மானுடவியலாளர் தெரிவித்துள்ளார். கரிம கால மதிப்பீடு (கார்பன் டேட்டிங்) மூலம் அவற்றின் தொன்மை உறுதிசெய்யப்படவேண்டும்.
நீண்ட, பல்வேறுவகைப்பட்ட, கலப்பு வரலாற்றினை தன்னகத்தே கொண்ட ஊராக காயல்பட்டினம் இன்று திகழ்கிறது என்றால் அது மிகையாகாது. சமூக நல்லிணக்கத்திற்கு ஓர் அடையாளாமாகவும் அனுதினமும் இந்நகரம் வாழ்ந்து வருகிறது.
இந்த வரலாற்றினை - அறிவியல்பூர்வமாக பாதுகாப்பது - காயல்பட்டினம் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதனை கருத்தில் கொண்டு - எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு அமைப்புடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ள, கீழ்க்காணும் கோரிக்கைகள், அரசு முன் வைக்கப்பட்டுள்ளன.
(1) காயல்பட்டினம் பகுதியின் - குறிப்பாக கடலோரப்பகுதியின் - எந்த இடங்கள் விரிவான வரலாற்று ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் என்பதனை கண்டறிய அரசு தொடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்
(2) ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுள்ள பழம் பொருட்களை கரிம கால மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட அரசு ஆவன செய்யவேண்டும்.
(3) சமீபத்தில் பழம் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட காயல்பட்டினம் வடக்கு கடற்கரை யின் கோஸ்மரை பகுதியில் - அப்பகுதியின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க அரசு ஆவன செய்யவேண்டும்
(4) இந்நகரின் நீண்ட, சிறப்புமிக்க வரலாற்றினை பறைசாற்றும் விதமாக - காயல்பட்டினத்தின் வடக்கு கடற்கரை பகுதியில் நினைவுச்சின்னம் நிறுவிட அரசு ஆவன செய்யவேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளுடன் வரலாற்று சான்றுகள் இணைக்கப்பட்டு - அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் நோக்கில், திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் திருமதி சிவ சத்தியவள்ளியிடம், மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (MEGA) சார்பாக, ஆகஸ்ட் 28 அன்று வழங்கப்பட்டது.
இம்மனுவினை - மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பின் மூத்த உறுப்பினரும், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவருமான சாளை பஷீர் - நேரடியாக அளித்தார்.
மனுவினை பெற்றுக்கொண்ட காப்பாட்சியர் - இம்முயற்சியினையும், கோரிக்கைகளையும் வெகுவாக பாராட்டினார்.
தொடர்புடைய துறைகளுக்கு முறையாக இக்கோரிக்கையை சேர்ப்பதாக உறுதியளித்த காப்பாட்சியர், வருங்காலங்களில் - காயல்பட்டினம் நகரில் காணப்படும் கல்வெட்டுகளை வாசிப்பதற்கும், படியெடுப்பதற்கும் பயிற்சி வகுப்புகளை அருங்காட்சியகம் சார்பில் நகரில் நடத்திட ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 1, 2018; 8:30 am]
[#NEPR/2018090101]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |