தமிழகத்தின் தலைநகர் சென்னையில், காயலர்களால் நடத்தப்பட்டு - காயலர்கள் பங்கேற்ற கால்பந்து சுற்றுப் போட்டியில், ஸ்ப்ரிட்டெட் யூத் அணியினர் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளனர். விரிவான விபரம்:-
சென்னையில் வசிக்கும் விளையாட்டு வீரர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு விளையாட்டுக் களம் அமைத்துக் கொடுப்பதையும், நீண்ட காலத் திட்டமாக – காயல்பட்டினத்திலிருந்து வேலைவாய்ப்பு தேடி சென்னை வரும் காயலர்களுக்குத் தகுந்த வேலைவாய்ப்புகள் கிடைத்திட உதவுவதையும் நோக்கமாகக் கொண்டு, Chennai Kayal Futsal League (CKFL ’18) எனும் தலைப்பில் ஐவர் கால்பந்து சுற்றுப் போட்டி, சென்னை – நுங்கம்பாக்கத்திலுள்ள Whistle Urban Sports Hub மைதானத்தில், 16.09.2018. ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தப்பட்டது.
அணிக்கு 5+3=8 பேர் வீதம் மொத்தம் 4 பிரிவுகளைக் கொண்ட 16 அணிகளாக வீரர்கள் இச்சுற்றுப்போட்டியில் கலந்துகொண்டனர்.
கே-யுனைட்டெட், வி-யுனைட்டெட், ஸ்ப்ரிட்டெட் யூத், கே.பீ.எம்.வாரியர்ஸ் ஆகிய அணிகள் காலிறுதிப் போட்டியில் வென்று, அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
முதலாவது அரையிறுதிப் போட்டியில் கே-யுனைட்டெட் அணியும், வி-யுனைட்டெட் அணியும் மோதின. ஈரணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் போட்டி முடிவுற்றதையடுத்து, கே-யுனைட்டெட் அணி சமனுடைப்பு முறையில் வெற்றிபெற்றது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஸ்ப்ரிட்டெட் யூத் அணியும், கே.பீ.எம். வாரியர்ஸ் அணியும் மோதின. இதில் ஸ்ப்ரிட்டெட் யூத் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இறுதிப் போட்டியில், கே-யுனைட்டெட் அணியும், ஸ்ப்ரிட்டெட் யூத் அணியும் மோதின. இதில் சமனுடைப்பு முறையில் ஸ்ப்ரிட்டெட் யூத் அணி வெற்றிபெற்று சாம்பியன் ஆனது.
தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது.
சிறந்த கோல் காப்பாளருக்கான பரிசை ஸ்ப்ரிட்டெட் யூத் அணியின் ஹபீப்,
சிறந்த தற்காப்பு ஆட்டக்காரருக்கான பரிசை கே-யுனைட்டெட் அணியின் மீரா ஸாஹிப்,
சிறந்த முன்கள ஆட்டக்காரருக்கான பரிசை வி-யுனைட்டெட் அணியின் ஷாஹுல் ஹமீத்,
சுற்றுப்போட்டியின் சிறந்த வீரருக்கான பரிசை ஸ்ப்ரிட்டெட் யூத் அணியின் ஃபஹீம் ஆகியோர் பெற்றனர்.
அரையிறுதி வரை முன்னேறிய கே.பீ.எம். வாரியர்ஸ், வி-யுனைட்டெட் அணிகளுக்கு – காயல் மான்செஸ்டர், ஃபுட் ட்ராக் ஆகியவற்றின் அனுசரணையில் தலா 1,500 ரூபாய், வீரர்களுக்கான தனிப்பரிசுகள், வெண்கலப் பதக்கங்கள் ஆகியன பரிசாக வழங்கப்பட்டன.
இறுதிப் போட்டியில் வெற்றிவாய்ப்பை இழந்த கே-யுனைட்டெட் அணிக்கு ஆல்காம் குழும அனுசரணையில் 3 ஆயிரம் ரூபாய் பணப்பரிசு, வீரர்களுக்கான தனிப் பரிசுகள், வெள்ளிப் பதக்கங்கள் ஆகியனவும், மர்ஹூம் ஷேக் ஷீத் நினைவு கேடயமும் வழங்கப்பட்டன.
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ப்ரிட்டெட் யூத் அணிக்கு SAIS அனுசரணையில் 5 ஆயிரம் ரூபாய் பணப்பரிசு, வீரர்களுக்கான தனிப் பரிசுகள், தங்கப் பதக்கங்கள், கே.ஏ.எஸ். என்டர்ப்ரைசஸ் நிறுவனத்தின் சார்பில் பயணப் பை ஆகியனவும், மர்ஹூம் ஷேக் ஷீத் நினைவு கேடயமும் வழங்கப்பட்டன.
முன்னதாக, அரையிறுதிப் போட்டி நிறைவுற்றதும் – மூத்த வீரர்கள் பங்கேற்ற பார்வையாளர் சிறப்பு கால்பந்துப் போட்டியும் நடத்தப்பட்டது. சென்னையில் வசிக்கும் – காயல்பட்டினத்தைச் சேர்ந்த மூத்த கால்பந்து வீரர்கள் இதில் கலந்துகொண்டு, வயதுக்கும் மிஞ்சிய தமது திறமையை வெளிப்படுத்தியமை பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. நிறைவில் அவர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
சென்னையிலிருந்து...
தகவல்:
ஹாஃபிழ் M.I.மஹ்மூத் சுல்தான் (+91 95002 56645) |