வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பான விபரங்களை உள்ளடக்கி, பொதுமக்கள் நலன் கருதி “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
ஜனவரி 1, 2019 தேதியில் 18 வயது பூர்த்தியடைவோர் என்ற அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம், புதிய வாக்காளர் பட்டியலை - செப்டம்பர் 1 அன்று வெளியிட்டுள்ளது.
31.12.2000 அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்கள், வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக தங்களை சேர்த்திடவும் அல்லது ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறிய காரணத்தால் வாக்காளர் பட்டியலில் புதிதாக தங்களை சேர்த்திடவும் - படிவம் 6 (FORM 6) பயன்படுத்தப்படவேண்டும்.
புகைப்படத்தை ஒட்டி, எளிதாக நிரப்பக்கூடிய இரண்டு பக்க படிவம் இணைக்கப்பட்டுள்ளது. (ஒப்புதல் ரசீதுடன் மூன்று பக்கம்).
இந்த விண்ணப்பத்தை நிரப்பி, எதிர்வரும் செப்டம்பர் 9, செப்டம்பர் 23, அக்டோபர் 7, அக்டோபர் 14 ஆகிய நான்கு நாட்கள்களில் (ஞாயிற்றுக்கிழமைகள்) - அந்தந்த வாக்கு சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை சமர்ப்பித்தப்பின் தவறாமல், ஒப்புதல் ரசீதை பெற்றுக்கொள்ளவும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நிலையை அறிந்திட, ஒப்புதல் ரசீது அவசியம் ஆகும்.
18 முதல் 21 வயது நிரம்பியவர்கள், புதிதாக விண்ணப்பம் செய்யும்போது, அவர்களிடம் வயதுக்கான ஆதாரம் இல்லாத பட்சத்தில் - பெற்றோர் ஒருவர் (அல்லது குரு) வழங்கும் உறுதிமொழிக்கான இணைப்பு படிவம் - 1 (ANNEXURE 1) இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.
விடுதியில் தங்கி, கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் - இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழி இணைப்பு படிவத்தையும் (ANNEXURE 2) (ஆங்கிலம் அல்லது தமிழில்), படிவம் 6 உடன் இணைத்து கல்லூரி முதல்வரின் கையெழுத்து பெற்று, படிவம் 6 உடன், முகாம்களில் சமர்ப்பித்து - ஒப்புதல் ரசீது பெறவேண்டும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 5, 2018; 8:30 am]
[#NEPR/2018090501]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|