காயல்பட்டினம் வழித்தடத்திலேயே அரசுப் பேருந்துகள் செல்ல வேண்டும் என வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி, மதுரை, கும்பகோணம், கோவை மண்டலங்கள் வெளியிட்ட சுற்றறிக்கைகள், பயணத்திலிருக்கும் பொதுமக்கள் எளிதில் உடனுக்குடன் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய அரசு பேருந்துகள், காயல்பட்டினம் வழியை புறக்கணித்து செல்லும் பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இது சம்பந்தமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடப்பது என்ன? குழுமம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து (ஆகஸ்ட் 2016), தகவலை அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (RTI) பெறப்பட்ட தகவல்கள் கொண்டு - காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய பேருந்துகள் குறித்த அனைத்து விபரங்களும் kayal.org/buses என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து - 24 மணி நேர பேருந்து கண்காணிப்புகள் அவ்வப்போது நடத்தப்பட்டு, அதன் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் - சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
அதன் விளைவாக - திருநெல்வேலி, மதுரை, கும்பகோணம், கோவை மண்டல அதிகாரிகள் - இது சம்பந்தமாக ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி - அதன் நகலை நடப்பது என்ன? குழுமத்திற்கு அனுப்பியிருந்தனர்.
அந்த சுற்றறிக்கைகளும், பொது மக்கள் பயனுக்காக துண்டு பிரசுரமாகவும், சமூக ஊடங்கள் வாயிலாகவும் - நடப்பது என்ன? குழும ஏற்பாட்டில் வெளியிடப்பட்டது.
மேலும் - கோவை மண்டல பேருந்துகள் அனைத்திலும் "காயல்பட்டினம் வழி" என்ற தகவல் ஸ்டிக்கர், நடப்பது என்ன? குழும ஏற்பாட்டில் ஒட்டப்பட்டது.
மேலும் - மதுரை, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பேருந்து நிலையங்களில் - காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டும் என்ற அறிவிப்பு பலகையும் - அரசு அதிகாரிகள் ஒப்புதலுடன், நடப்பது என்ன? குழும ஏற்பாட்டில் நிறுவப்பட்டுள்ளன.
இருப்பினும் - அவ்வப்போது காயல்பட்டினம் வழியாக செல்ல, சில பேருந்துகள் பிரச்சனை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அவ்வேளைகளில் - அரசு பேருந்துகளின் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளை, அப்பேருந்துகளில் செல்லும் காயல்பட்டினம் பயணிகள் - நடத்துனர்களிடம் காண்பித்து, பேருந்துகளை காயல்பட்டினம் வழியாக செல்ல கோரியுள்ளனர்.
தங்களிடம் அந்த சுற்றறிக்கை இல்லாத வேளைகளில், எளிதாக இணையதளத்தில் எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தால், பிரயோஜனமாக இருக்கும் ஒரு சிலர் வைத்த வேண்டுகோளை அடுத்து, திருநெல்வேலி, மதுரை, கும்பகோணம், கோவை மண்டல பேருந்துகள் குறித்த சுற்றறிக்கைகள், kayal.org/buses இணையதளத்தில் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 3, 2018; 8:30 am]
[#NEPR/2018090301]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|