அடையாள அட்டையின்றி தெருக்களில் வணிகம் செய்வோர் மீது நகராட்சியில் முறையிடலாம் என காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ப்ரேம் ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள பொதுநல அறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக - அடையாளம் அறியமுடியாத சிலர் - தெரு தெருவாக சென்று வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்கள் குறித்த அச்சம் பரவலாக பொது மக்கள் மத்தியில் காணப்பட்டது; இவைகள் குறித்த செய்திகளும் சமூக ஊடகங்கள் வாயிலாக பரவின.
இதனை கருத்தில் கொண்டு, கடந்த சில தினங்களுக்கு முன்னர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு முரளி ரம்பா IPS அவர்களை நடப்பது என்ன? குழுமம் சந்தித்து, நகரில் தெரு தெருவாக சென்று வியாபாரம் செய்யும் அடையாளம் தெரியாத நபர்கள் - குறிப்பாக வெளி மாநிலத்தவர்கள் - விஷயத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் வைத்தனர். அதன் தொடர்ச்சியாக, இம்மனு குறித்து ஆறுமுகநேரி காவல்நிலையம் ஆய்வாளர் திரு கணேஷ் குமார், நடப்பது என்ன? குழும நிர்வாகிகளை சமீபத்தில் சந்தித்தார்.
இதற்கிடையே - இவ்விஷயத்தில், நகராட்சி மூலமாக சில தீர்வுகளை ஏற்படுத்தும் நோக்கில், நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுக்கு சில கோரிக்கைகளை நடப்பது என்ன? குழுமம் வைத்தது.
அதில் - 2006 ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட TOWN VENDING COMMITTEE குறித்த ஆணைப்படி ((G.O.(Ms.)No.119 dated 19.10.2006; Municipal Administration and Water Supply Department)), நகர்மன்றத்தலைவர், தாலுகாவை சார்ந்த முக்கிய அதிகாரிகள் (ஆணையர், கோட்டாட்சியர்/வட்டாச்சியர், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர், காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் / ஆய்வாளர், தெருவியாபாரிகள் சங்க பிரதிநிதி, வங்கிகள் சார்பாக மாவட்ட மேலாளர்) அடங்கிய குழு மூலமாக - தெருக்களில் வியாபாரம் செய்வோரை கண்டறிந்து, அவர்களிடம் விண்ணப்பம் பெற்று, முறையான ஆவணங்களை சமர்ப்பிப்போருக்கு அடையாள அட்டை வழங்கிட கோரப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக - நகராட்சி ஆணையர் திரு பிரேம் ஆனந்த் அவர்களை நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், சில தினங்களுக்கு முன்னர் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது - இந்த குழு சில ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டதாகவும், அதன் மூலம் சுமார் 23 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அவரிடம் - அந்த குழு மூலம் தொடர்ந்து தெரு வியாபாரிகள் கண்காணிக்கப்படவேண்டும் என்றும், தற்போதைய சூழலை கருத்தில்கொண்டு இது குறித்து - நகராட்சி உடனடியாக செயல்புரிய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த ஆணையர், அடையாள அட்டை இல்லாமல் தெருக்களில் வியாபாரம் செய்வோர் குறித்து நகராட்சியில் பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 4, 2018; 8:30 pm]
[#NEPR/2018100401]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|