மாலையில் குருதிக்கொடை அளிக்கக் கூடாது என பரப்பப்படும் தவறான பரப்புரைகளுக்கு, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
சமீபத்தில் மெகா | நடப்பது என்ன? குழுமம் மூலம் நடத்தப்பட்ட குருதிக்கொடை முகாமை சீர்குலைக்க பரப்பப்பட்ட பல்வேறு வினோதமான - பொய்யான தகவல்களில் ஒன்று, திருச்செந்தூர் ரத்த வங்கிக்கு, ஒவ்வொரு பிரிவிலும், 5 அலகு (UNIT) ரத்தம் தான் தேவை என்பதாகும்.
இது உண்மை அல்ல.
தூத்துக்குடி மாவட்டத்தில் - மூன்று அரசு ரத்த வங்கிகள் உள்ளன. கோவில்பட்டி அரசு ரத்த வங்கி, மாவட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ளது. தூத்துக்குடி அரசு ரத்த வங்கி, மாவட்டத்தின் மத்திய பகுதியில் உள்ளது. திருச்செந்தூர் அரசு ரத்த வங்கி, மாவட்டத்தின் தென் பகுதியில் உள்ளது.
திருச்செந்தூர் அரசு ரத்த வங்கியில், ஒரே நேரத்தில் குறைந்தது 300 அலகு ரத்தத்தை பராமரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ரத்தத்தை கூறுகளாக பிரிக்கும் உரிமத்தை இந்த வங்கி இன்னும் பெறவில்லை.
திருச்செந்தூர் அரசு ரத்த வங்கி, இந்த சுற்றவட்டாரத்தில் (தென் தூத்துக்குடி மாவட்டத்தில்) உள்ள பல்வேறு ஊர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய துவக்கப்பட்ட ரத்த வங்கி ஆகும்.
இந்த ரத்த வங்கியில் மாதத்திற்கு சுமார் 100 அலகு ரத்தம் தேவைப்படும் என இவ்வங்கி மருத்துவர்கள் - தெரிவிக்கிறார்கள். செப்டம்பர் 30 முகாமிற்கான கடிதத்தில், இந்த எண்ணிக்கையை (90 - 100) குறிப்பிட்டே, வங்கியின் மருத்துவர்கள் - மெகா | நடப்பது என்ன? குழுமத்திற்கு, அதிகாரப்பூர்வமாக கடிதமும் எழுதினார்கள்.
எனவே - ஒவ்வொரு பிரிவிலும் 5 அலகு ரத்தம் போதும் என தலைமை மருத்துவர் கூறினார் என்பது உண்மைக்கு புறம்பான தகவலாகும்.
மெகா | நடப்பது என்ன? குழுமம் மூலம் நடத்தப்பட்ட குருதிக்கொடை முகாமை சீர்குலைக்க பரப்பப்பட்ட மற்றொரு வினோதமான - பொய்யான தகவல், அளவுக்கு அதிகமான அலகு ரத்தம் இருந்ததால், பிற ரத்த வங்கிகளுக்கு "கூவி - கூவி" கொடுத்தார்கள் என்பதாகும்.
குறிப்பாக - காவலர்களுக்காக, ஜூன் இறுதியில் அரசு சார்பாக நடத்தப்பட்ட குருதிக்கொடை முகாம் குறித்து இந்த பொய்யான தகவல் பரப்பபப்ட்டது. காவலர்கள் கலந்துக்கொண்ட குருதிக்கொடை முகாமில் 78 அலகு ரத்தம் - திருச்செந்தூர் ரத்த வங்கியினால் சேகரிக்கப்பட்டது.
ஒரு ரத்த வங்கியின் குருதி தேவையை துல்லியமாக ஒரு போதும் கணிக்கமுடியாது. அடுத்த மாதம் - எத்தனை விபத்துகள் நடக்கும், எத்தனை அவசர தேவைகள் எழும் போன்றவற்றை எந்த மனிதரால் கணிக்கமுடியாது. எனவே - கடந்த கால அனுபவங்களை கருத்தில்கொண்டு, ஒவ்வொரு ரத்த வங்கியும், தனது தேவையை நிர்ணயம் செய்து அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்கிறது.
சில மாதங்களில் - கணிக்கப்பட்ட தேவைக்கு ஏற்ப ரத்தம் பயன்படுத்தப்படுகிறது.
சில மாதங்களில் - கணிக்கப்பட்ட தேவைக்கு கூடுதலாக ரத்தம் தேவைப்பட்டால், பிற ரத்த வங்கிகளிடம் இருந்து ரத்தம் பெறப்படுகிறது.
சில மாதங்களில் - கணிக்கப்பட்ட தேவைக்கு குறைவாக ரத்தம் பயன்படுத்தப்பட்டால், மீதி ரத்தம் பிற ரத்த வங்கிகளுக்கு அனுப்பப்படுகிறது.
அதிகளவில் உள்ள ரத்தத்தை, வேறு ரத்த வங்கிகளுக்கு, அனுப்ப சட்ட சிக்கல்கள் கடந்த காலங்களில் இருந்ததால், சேகரிக்கப்பட்ட ரத்தம் - காலவிதியாகும் சூழல் உருவானது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், இந்த விதிமுறையை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. புதிய விதிமுறைப்படி, கூடுதலாக ஒரு ரத்த வங்கியில் ரத்தம் இருந்தால், பாதுகாப்பான முறையில் தேவையுள்ள ரத்த வங்கிக்கு - ரத்தத்தை மாற்றலாம்.
இது குறித்த கெஜட் அறிவிப்பு:-
சமீபத்திய மெகா | நடப்பது என்ன? முகாமிற்கு முன்பு - பரப்பப்பட்ட மற்றொரு வினோதமான பொய்யான தகவல், மாலை நேரத்தில் குருதிக்கொடை செய்யக்கூடாது என்பதாகும். இந்த கூற்றில் எந்த விஞ்ஞான பூர்வ உண்மையும் கிடையாது; இது முழுவதும் முட்டாள்தனமான வாதமாகும்.
மாலை நேரத்தில் - குருதிக்கொடை முகாம் நடத்த இங்கிலாந்து நாட்டில் வெளியிடப்பட்ட விளம்பரம்:-
கடந்தாண்டு - கோடை வெயிலினை கருத்தில் கொண்டு, இரவு நேரத்தில் முகாம் நடத்த, மேற்கு வங்காள அரசு வெளியிட்ட அறிவிப்பு செய்தி:-
http://newsfromnadia.in/mamata-orders-evening-blood-donation-camp/
இது போன்ற பொய்யான, முட்டாள்தனமான, அறிவுக்கு பொருந்தாத தகவல்களுக்கு விளக்கம் வழங்காமல் இருந்துவிடலாம் என்றாலும், மறுப்பு விளக்கம் வரவில்லை என்றால், ஒரு சிலர் - இதனை உண்மை என நினைத்து விடக்கூடாது என்பதற்காக - குருதிக்கொடை முகாம்கள், ஒரு சமுதாயத்தின் மிக அத்தியாவசிய தேவைகளில் ஒன்று என்பதனை மனதில் கொண்டு இவ்விளக்கங்கள் வழங்கப்படுகிறது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 5, 2018; 10:00 pm]
[#NEPR/2018100503]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |