“நாட்டில் சேகரிக்கப்படும் இரத்தம் வீணடிக்கப்படுகிறதா? உண்மைதான் என்ன??” எனும் தலைப்பில், காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தகவலறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
(முகாம்கள் மூலம் சேகரிக்கப்பட்டு) ரத்த வங்கியில் பாதுகாத்து வைக்கப்படும் ரத்தம் - வீணடிக்கப்படுவதாக, ஒரு தவறுதலான பிரச்சாரம் ஒரு சிலரால் தொடர்ந்து வைக்கப்படுகிறது.
இது போன்ற தவறான பிரச்சாரங்கள் புதிதல்ல; இது போன்ற தவறான பிரச்சாரங்களால், குருதிக்கொடை முகாம்கள், ரத்த வங்கிகள் பெரிதும் பாதிக்கப்படவில்லை என்றாலும், ஒரு சிலர் - இது போன்ற தவறான பிரச்சாரங்களை நம்பி, பிறருக்கும் இது போன்ற தவறான தகவல்களை எத்திவைப்பதால், இது குறித்த உண்மையை பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவது நம் அனைவரின் கடமையாகும்.
இது போன்ற தவறான பிரச்சாரத்தை மேற்கொள்பவர்கள், TIMES OF INDIA என்ற நாளிதழின் ஏப்ரல் 2017 செய்தி ஒன்றினை மேற்கோள்காட்டுவர். அல்லது - அந்த செய்தியை தொடர்ந்து பிற ஊடகங்களில் வெளிவந்த தழுவல் செய்திகளையும் மேற்கோள்காட்டுவர். அந்த செய்தி - சேட்டன் கோத்தாரி என்பவரின் RTI சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையிலானது.
அந்த செய்திக்கான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.
"No coordination between blood banks and hospitals, 6 lakh litres of blood wasted in five years" [TIMES OF INDIA வழங்கிய தலைப்பு]
https://timesofindia.indiatimes.com/india/no-coordination-between-blood-banks-and-hospitals-6-lakh-litres-of-blood-wasted-in-five-years/articleshow/58333338.cms
சேட்டன் கோத்தாரி என்பவர் பெற்ற RTI மூலமான தகவல், தன்னார்வலர்கள் மூலம் நாட்டில் சேகரிக்கப்படும் ரத்தத்தில் - சுமார் 6 சதவீதம் வீணாகிறது (அழிக்கப்படுகிறது) என்று தெரிவித்திருந்தது. இது உண்மை தான்.
இவ்வாறு ரத்தம் அழிக்கப்படுவதற்கு பல்வேறு நியாயமான காரணங்கள் உள்ளன; அவையும் அதே செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் - செய்தியின் தலைப்பை மட்டும் படித்து விட்டு, ஒரு சிலர் - குருதிக்கொடை முகாம்களுக்கும், ரத்த வங்கிகளுக்கும் எதிராக தங்கள் பிரச்சாரங்களை - அறியாமையினாலோ, விஷமத்தனத்தினாலோ - மேற்கொண்டு வருகின்றனர்.
இதே செய்தியை, THE HINDU நாளிதழ் அதே காலகட்டத்தில் - பொருத்தமான தலைப்புடன் வெளியிட்டிருந்தது.
"Blood wastage drops sharply, reveals RTI query" [THE HINDU வழங்கிய தலைப்பு]
அதற்கான இணைப்பும் கீழே வழங்கப்பட்டுள்ளது.
https://www.thehindu.com/news/cities/mumbai/news/Blood-wastage-drops-sharply-reveals-RTI-query/article14390744.ece
சேகரிக்கப்படும் ரத்தம் அழிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்கள்:-
(1) Malaria, Syphilis, HIV, Hepatitis B, Hepatitis C போன்ற நோய்கள், சேகரிக்கப்பட்ட ரத்தங்களில் கண்டறியப்பட்டது
(2) சேகரிக்கப்பட்ட ரத்தம் (WHOLE BLOOD) / கூறுகள் (COMPONENTS), அதற்கான ஆயுட்காலத்திற்குள் பயன்படுத்தமுடியாத சூழல்
// முழு ரத்தம் (WHOLE BLOOD) சுமார் 35 தினங்களுக்குள் பயன்படுத்தப்படவேண்டும்
// ரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் கூறான RBC - சுமார் 42 தினங்களுக்குள் பயன்படுத்தப்படவேண்டும்
// ரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் கூறான PLATELETS - சுமார் 5 தினங்களுக்குள் பயன்படுத்தப்படவேண்டும்
// ரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் கூறான PLASMA - சுமார் ஓர் ஆண்டுக்குள் பயன்படுத்தப்படவேண்டும்
இந்த காலகட்டத்திற்குள் பயன்படுத்தமுடியாத ரத்தம்/கூறு அழிக்கப்படுகிறது.
இது தவிர வேறு காரணங்களுக்காகவும் (சேகரிக்கப்பட்ட ரத்தம் தரம் சரியாக இல்லை; சேகரிக்கப்பட்ட ரத்தம் பாக்டீரியா போன்ற பாதிப்புக்கு உள்ளாவது; தேவையை துல்லியமாக கணிக்கமுடியாத காரணத்தால் சில இடங்களில் அதிகளவு ரத்தம் தேக்கம்) அழிக்கப்படுகிறது.
இந்த - அழிக்கப்படும் ரத்தம் சதவீதத்தை குறைக்க, உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். சேகரிக்கப்படும் ரத்தம் அழிக்கப்படுவது - முற்றிலும், 100%, தவிர்க்க முடியாத விஷயமாகும்; வளர்ந்த நாடுகளில் கூட - சேகரிக்கப்படும் ரத்தம், 5 - 6 சதவீதம் அழிக்கப்படுகிறது. இந்தியாவில் - அழிக்கப்படும் ரத்தமும் அதே அளவில் தான் உள்ளது.
இதனை குறைக்க என்னென்ன நடவடிக்கைகள் - உலகளவில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதனை தொடர் செய்திகளில் நாம் காண்போம்.
TIMES OF INDIA நாளிதழ் செய்தியை அடிப்படையாக கொண்டு பரப்பப்படும் தவறான தகவல்கள் குறித்து, டாக்டர் சிவராம் சந்திரசேகர் (Department of Transfusion Medicine, Manipal Hospital,Bengaluru, Karnataka, India), Global Journal of Transfusion Medicine ¦ Volume 2 ¦ Issue 2 ¦ July‑December 2017 என்ற பத்திரிகையில், கடந்த ஆண்டு எழுதிய விரிவான கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.
சுருங்க சொன்னால் - தன்னார்வலர்கள் மூலம் சேகரிக்கப்படும் ரத்தம் சீரழிக்கப்படுகிறது என செய்யப்படும் பிரச்சாரம் உண்மைக்கு புறம்பான பிரச்சாரம் ஆகும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 5, 2018; 4:30 pm]
[#NEPR/2018100502]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|