கொடையளிக்கப்படும் குருதி விற்கப்படுகிறதா? குருதி வங்கிகளுக்கு அது சாத்தியமா?” என்பது பற்றி, “நாம் கொடுக்கும் ரத்தம் விற்கப்படுகிறதா? பொதுமக்களிடம் சேகரிக்கும் ரத்தத்தை கொண்டு - ரத்த வங்கிகள் - வியாபாரம் புரியலாமா?” எனும் தலைப்பில் - காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
COMMON CAUSE என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில் - 1996 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பு, நாட்டில் பல மாற்றங்களை கொண்டுவந்தது. [Writ Petition (civil) 91 of 1992; Common Cause vs Union Of India And Others on 4 January, 1996; Bench: S.C. Agrawal, G.B. Pattanaik]
குறிப்பாக - இந்த தீர்ப்பினை தொடர்ந்து,
// பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு முறையான உரிமங்கள் பெறாத ரத்த வங்கிகள் தடைசெய்யப்பட்டன
// தேசிய மற்றும் மாநில அளவுகளில், ரத்த தேவையை பூர்த்திசெய்ய அரசு அமைப்புகள் (BLOOD TRANSFUSION COUNCILS) உருவாக்கப்பட்டன
// குருதிக்கொடை செய்ய பணம் / பொருள் வழங்கும் (PAID DONORS) நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டது
எவ்வாறு தன்னார்வலர்களிடம் இருந்து பெறப்படும் ரத்தத்திற்கு பணம் வழங்கப்படக்கூடாதோ, அது போல - ரத்த வங்கிகள், நோயாளிகளுக்கு வழங்கும் ரத்தத்திற்கும், பணம் வசூல் செய்யக்கூடாது. ரத்த வங்கிகள் - லாபம் நோக்கில் இயங்கக்கூடாது என்பதே அரசு விதிமுறையாகும்.
"... The basic principle of non profitability should be followed in blood banking, and continue to levy no charge for blood as such, as it is to be collected from voluntary non renumerated blood donors who are not to be paid for donating blood..." [Guidelines for recovery of processing charges for blood and blood components; Ministry of health and family welfare, Government of India]
நாம் கொடுக்கும் ரத்தத்தை பெற்று, பரிசோதித்து, கூறுகளை பிரித்து, பாதுகாத்து, தேவைப்படும்போது வழங்கும் ரத்த வங்கிகள் - ரத்தத்தை இலவசமாக வழங்கினால், எவ்வாறு செயல்படமுடியும்? அவர்களின் நிர்வாக செலவினை எவ்வாறு ஈடு செய்வார்கள்?
ரத்த வங்கிகள் லாப நோக்கில் செயல்படாவிட்டாலும், நஷ்டம் அடிப்படையில் செயல்படவும் அரசு நிர்பந்தம் செய்யவில்லை.
ஒரு ரத்த வங்கி, கொடையாளிகள் மூலம் இலவசமாக பெற்ற ரத்தத்தை - பெற, சோதிக்க, கூறு பிரிக்க, பாதுகாக்க, விநியோகிக்க - சந்திக்கும் செலவீனங்களை, ரத்தம் தேவைப்படும் நோயாளிகளிடம் இருந்து பெற (PROCESSING CHARGE) - அரசு விதிகள் அனுமதிக்கின்றன. இந்த கட்டணத்தில் - ரத்தத்திற்கு என எந்த கட்டணமும் இடம்பெறாது; மாறாக - பராமரிப்பு சேவைகளுக்கு மட்டும், லாபம் நோக்கு இல்லாமல், கட்டணம் வசூல் செய்யலாம்.
இந்த தொகையையும், அரசு ரத்த வங்கிகளுக்கு என ஒரு கட்டணமும், தனியார் ரத்த வங்கிகளுக்கு என ஒரு கட்டணமும் - அரசே நிர்ணயம் செய்துள்ளது. இந்த கட்டணமும் - முழு ரத்தம், RBC கூறு, PLATELETS கூறு, PLASMA கூறு என - தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் - அரசு அறிவுறுத்தியுள்ள பரிசோதனைகளை தவிர கூடுதல் பரிசோதனைகள் (NAT TEST, ELISA TEST etc) மேற்கொள்ளப்பட்டால், எந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என தெரிவித்து, நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கூடுதல் தொகையும் பெறவும் அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதன் விபரமும் - ரத்தம் பெறுபவரிடம் தெரிவிக்கப்படவேண்டும்.
அதன்படி - அரசு ரத்த வங்கிகள், முழு ரத்தத்திற்கு - அலகு ஒன்றுக்கு ரூபாய் 1050 வரை பெறலாம்; தனியார் ரத்த வங்கிகள், முழு ரத்தத்திற்கு - அலகு ஒன்றுக்கு ரூபாய் 1450 வரை பெறலாம். எவ்வாறு 1050 / 1450 ரூபாய் தொகை நிர்ணயம் செய்யப்பட்டது என்ற விபரம் இணைக்கப்பட்டுள்ளது.
நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தொகையை விட குறைவான கட்டணத்திற்கோ அல்லது முற்றிலும் இலவசமாகவோ ரத்தம் வழங்கிட அந்தந்த மாநில அரசாங்கமும், தனியார் வங்கிகளும் முடிவு செய்துக்கொள்ளலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி - தமிழக அரசு சார்ந்த ரத்த வங்கிகள், அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெறும் நோயாளிகளுக்கு இலவசமாக ரத்தம் கொடுக்கின்றன; தனியார் தேவைகளுக்கு, மத்திய அரசு அனுமதித்துள்ள தொகையை விட குறைவாக - அலகு ஒன்றுக்கு ரூபாய் 500 பெறுகின்றன.
முழு ரத்தத்திற்கும், கூறுகளுக்கும், கூடுதல் பரிசோதனை செய்யப்பட்ட ரத்தங்களுக்கும் - வசூல் செய்ய அனுமதிக்கப்பட்ட கட்டணம் விபரம் (அரசு ரத்த வங்கிகள் / தனியார் ரத்த வங்கிகள்) இணைக்கப்பட்டுள்ளது.
எனவே - நாம் இலவசமாக, தானம் செய்யும் ரத்தம் - வியாபாரம் பொருள் ஆக்கப்பட, அரசு அனுமதிக்கவில்லை; மாறாக - பெறப்பட்ட ரத்தத்தை, பரிசோதிக்க, கூறு பிரிக்க, பாதுகாக்க, தேவையுள்ளோருக்கு விநியோகம் செய்ய ஆகும் செலவினை மட்டும் ஈடு செய்ய மட்டுமே, அரசு அனுமதி வழங்குகிறது.
மேலும் - THALASEMMIA, HAEMOPHILIA, SICKLE CELL ANEMIA - போன்ற நோய்கள் காரணமாக தொடர்ந்து ரத்தம் தேவையுள்ளவர்களுக்கு, உரிமம் பெற்றுள்ள ரத்த வங்கிகள், இலவசமாக ரத்தம் வழங்கவேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் ஒரு சிலர் - இதனை வியாபாரம் ஆக்குவது அங்கங்கே நடக்கிறது என நாம் ஏற்றுக்கொண்டாலும், கொடையாளிகள் மூலம் பெறப்படும் ரத்தம் - வியாபாரம் ஆக்கப்படுகிறது என்று பொதுவாக பரப்பப்படும் தகவல்கள், குருதிக்கொடையின் அவசியத்தை முழுமையாக உணராதவர்கள் - தங்கள் அறியாமையிலோ, விஷமத்தனத்தினாலோ செய்யும் அவசியமற்ற பிரச்சாரம் ஆகும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 6, 2018; 9:30 am]
[#NEPR/2018100601]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|