செப்டம்பர் 7, 2010 அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் ரமளான் 29ஆம் நாள் இரவுத் தொழுகை நேற்று நடைபெற்றது. அதில் திருக்குர்ஆன் முழுமைப்படுத்தப்பட்டது. வித்ரு தொழுகைக்குப் பிறகு நிர்வாகத்தின் சார்பாக தொழுவித்த ஹாஃபிழ்கள் கண்ணியப்படுத்தப்பட்டனர். அல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகக் கமிட்டியின் தலைவர், அல்ஹாஜ், எஸ்.ஐ. தஸ்தகீர் அவர்கள் ஹாஃபிழ்களை கவுரப்படுத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து பள்ளியின் விரிவாக்கப் பணி தொடர்பாக பள்ளியின் கத்தீப் மௌலவி, அப்துல் மஜீத் மஹ்ழரீ அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார்கள். அவர் தனது உரையில் “இப்பள்ளி கட்டப்பட்டு அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டது. கடந்த அறுபது ஆண்டுகளில் பல்வேறு சோதனைகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு நகரிலேயே சாதனைகளையும் சீர்திருத்தங்களயும் செய்துவருவதில் முன்னோடியான பள்ளியாக திகழ்ந்துவருகிறது என்றும், மேலும் பல அறப்பணிகளை இந்த ஜும்ஆ மஸ்ஜித் ஆற்றுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும், எனவே இப்பள்ளியின் விரிவாக்கப் பணிகளுக்கு நம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதுடன்,இதற்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையான ஒரு முஸல்லாவுக்கு ரூ. 6000 என்பதை அனைவரும் போட்டி போட்டு வாரி வழங்கிட முன்வர வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
துணைச் செயலாளர்களில் ஒருவரான ஹாஜி நவாஸ் அவர்கள் பள்ளியின் விரிவாக்க வரைபடங்களை கணினியின் மூலமாக விளக்கிக் கூறினார். நிகழ்ச்சியை சகோதரர் தம்மாம் இஸ்மாயீல் தொகுத்து வழங்கினார்.
முழு விபரம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் இணையதளத்தில் (www.aljamiulazhar.org) காண்க.
தகவல்:
அபூஹிஷாம்
காயல்பட்டிணம் |