காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) சார்பில், நேற்று ஏழைகளுக்கு ஃபித்ரா உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
நோன்புப் பெருநாளன்று முஸ்லிம்கள் யாரும் உணவுக்கு வழியின்றி இருக்கக்கூடாது என்பதற்காக, அன்றைய தினம் ஏழைகள் கூட தமது தேவைக்குப் போக அதிகமாக உணவுப்பொருட்கள் வைத்திருந்தால், அவற்றை பிற ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டியது கடமை என்று இஸ்லாம் மார்க்கம் கட்டளையிட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, காயல்பட்டினம் நகரில் பல்வேறு அமைப்பினர், பொதுமக்களின் ஃபித்ரா பொருட்களையோ அல்லது அதற்கான தொகையையோ பெற்று, ஒருங்கிணைந்த முறையில் ஃபித்ரா பொருட்களை வட்டார ஏழைகளுக்கு வழங்குவது வழமை.
அந்த அடிப்படையில் காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) சார்பில் நேற்று ஒருங்கிணைந்த முறையில் ஃபித்ரா பொருட்கள் வினியோகிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் வெறும் அரிசி மட்டுமே வழங்கப்பட்டு வந்த்து. கடந்த ஹிஜ்ரீ 1428 (2007ஆம் ஆண்டு) முதல், பெருநாளன்று சமைக்கத் தேவைப்படும் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் உள்ளடக்கி, வித்தியாசமான முறையிலான ஃபித்ரா உணவுப்பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
நேற்று மாலையில் நடைபெற்ற ஃபித்ரா உணவுப்பொருட்கள் வினியோகத்திற்கு ஐ.ஐ.எம். தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமை தாங்கினார். அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், துணை தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், செயலாளர் வழக்குறைஞர் எம்.ஐ.மீராஸாஹிப், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுமார் 1300 ஏழைக்குடும்பங்களுக்கு ஃபித்ரா உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏழைகள் யாரையும் நேரடியாக அழைக்காமல், அந்தந்த தெருக்களுக்கு பொறுப்பாளர் ஒருவரை நியமித்து, ஃபித்ரா பொருட்கள் வாங்கத் தகுதியான ஏழை-எளியோரை ஆய்ந்தறிந்து பட்டியலிட்டு, கணினியில் அந்த தகவல்களைப் பதிவு செய்து, அதனடிப்படையில் அவர்களின் இல்லம் தேடிச் சென்று இந்த உணவுப்பொருட்கள் சரக்குந்து (லாரி) மூலம் கொண்டு செல்லப்பட்டு வினியோகிக்கப்பட்டது.
பொருட்களைப் பெற்றுக்கொண்டதற்கான கைச்சான்றை மட்டும் வட்டாரப் பொறுப்பாளர்களிடம் ஐ.ஐ.எம். நிர்வாகம் பெற்றுக்கொண்டது.
இந்த ஆண்டு ஃபித்ரா வினியோக ஏற்பாடுகளை, ஹாஜி எம்.என்.எம்.ஐ.மக்கீ தலைமையில், ஹாஜி எஸ்.எம்.அமானுல்லாஹ், ஹாஜி எம்.ஐ.மஹ்மூத் சுலைமான், எம்.ஏ.அப்துல் ஜப்பார், ஹாஜி டில்லி உவைஸ் மற்றும் பலர் செய்திருந்தனர்.
இந்த ஆண்டு ஐ.ஐ.எம். சார்பில் வழங்கப்பட்டுள்ள ஃபித்ரா உணவுப்பொட்டலத்தில் அரிசி, சீனி, மைதா, தேங்காய், சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள், ஜவ்வரிசி, இறைச்சி பெறுவதற்கான டோக்கன் ஆகிய பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.
தகவல்:
எம்.ஏ.அப்துல் ஜப்பார்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். |