இருப்பிடம்
மரைக்கார் பள்ளி:
காயல்பட்டினம் மரைக்கார்பள்ளித் தெருவின் தென்முனையில், சொளுக்கார் தெருவையும் அரவணைத்தாற்போல் அமைந்துள்ளது இப்பள்ளிவாசல். இப்பள்ளிவாசலின் பெயரிலேயே இது அமைந்துள்ள தெருவிற்கு மரைக்கார் பள்ளித் தெரு என்று பெயர். இத்தெரு முன்னர் கடற்கரை தெரு என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.
அப்பா பள்ளி:
காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவின் தென்முனையில், மரைக்கார் பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ளது அப்பாபள்ளி. இப்பள்ளியின் பெயரிலேயே இத்தெரு அப்பாபள்ளித் தெரு என்றழைக்கப்படுகிறது.
இப்பள்ளிவாசல்களின் வரலாறு குறித்து, 1990ஆம் ஆண்டு காயல் மகபூப் தொகுப்பில், அப்போதைய காயல்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சி மன்றம் சார்பில் நடத்தப்பட்ட ஐம்பெரும் விழா மலரில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் செவிவழிச் செய்திகள் பின்வருமாறு:-
வரலாறு:
மரைக்கார் பள்ளி:
காயல்பட்டினம் நகரின் பூர்வீகமான ஐந்து பள்ளிகளில் இப்பள்ளிவாசலும் ஒன்று. குத்பா பெரிய பள்ளிவாசல், குத்பா சிறிய பள்ளிவாசல், கடற்கரை பள்ளிவாசல் (தற்போது இல்லை), கோமான் மொட்டையார் பள்ளிவாசல், மரைக்கார் பள்ளிவாசல் ஆகியன இந்த ஐந்து பள்ளிகளாகும் என சரித்திர ஆய்வாளர் முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் ஆங்கிலத்தில் தொகுத்தெழுதியுள்ள தனது காயல்பட்டினம் சரித்திர நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அக்காலத்தில் மரக்கலங்களில் பயணித்து வணிகம் செய்தவர்கள் மரக்கலாயர் என்றழைக்கப்படுவர். அப்பெயர் மருவி நாளடைவில் மரைக்காயர் என்றானது. இப்பகுதி மக்கள் அவ்வாறு வணிகம் செய்தவர்களாக இருந்திருக்கக் கூடும் எனவும், எனவேதான் இப்பள்ளிக்கும் மரைக்கார் பள்ளி என்று பெயர் வந்திருக்கலாம் என்றும் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. மரைக்கார் - அப்பா பள்ளி ஜமாஅத்தைச் சார்ந்த பலருக்கு மரைக்கார் என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்பள்ளி வளாகத்தில் மஹான் ஷெய்கு சுலைமான் வலிய்யுல்லாஹ் அவர்களின் சமாதி உள்ளது. அரபிகளின் வருகையைத் தொடர்ந்து இங்கு அரபுத்தமிழ்க் கலாச்சாரம் பரவியிருந்த நேரத்தில், இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவிய பிராமணப் பெண்ணை மஹான் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்கள் மூலம் ஐந்து இறைநேசர்கள் பிறந்தனர். அவர்களில் அப்பாபள்ளிவாசலில் அடங்கியிருக்கும் மஹான் ஸாம் ஷிஹாபுத்தீன் வலிய்யுல்லாஹ் அவர்களும் ஒருவர்.
இப்பள்ளிவாசலில் பல்லாண்டுகளுக்கு முன்பே மத்ரஸா நடைபெற்று வந்துள்ளது. இங்கு கற்றுத் தேறியவர்கள் புகழ்பெற்றவர்களாக இன்றும் இருக்கின்றனர். இடையில் மத்ரஸா இல்லாத குறை நீக்கப்பட்டு, 1986ஆம் ஆண்டில் சுலைமானிய்யா குர்ஆன் ஹிஃப்ழு (மனன) மத்ரஸா துவக்கப்பட்டது.
காயல்பட்டினம் மரைக்கார்பள்ளித் தெருவைச் சார்ந்த ஹாஃபிழ் எம்.ஏ.நூஹ் ஸாஹிப், ஹாஃபிழ் உமர் நவ்ஷாத், ஹாஃபிழ் அப்துல் காதிர் (கால்நடை மருத்துவர்), ஹாஃபிழ் எம்.எம்.ஸல்மான் ஃபாரிஸ் ஆகியோர் 1988ஆம் ஆண்டிலும்,
திட்டுவிளை நகரைச் சார்ந்த ஹாஃபிழ் ஜாஃபர் ஸாதிக், பணக்குடியைச் சார்ந்த ஹாஃபிழ் ஷாஜஹான், காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சார்ந்த ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் 1990ஆம் ஆண்டும் என மொத்தம் ஏழு மாணவர்கள் இந்த மத்ரஸாவில் திருமறை குர்ஆனை முழுமையாக மன்னம் செய்து ஹாஃபிழுல் குர்ஆன் பட்டம் பெற்றுள்ளனர்.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் அப்போதைய கத்தீப் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ மத்ரஸாவின் முதல்வராக சேவையாற்றியுள்ளார். திண்டுக்கல்லைச் சார்ந்த மவ்லவீ ஜமாலுத்தீன் ஃபாஸீ என்பவரும், அவருக்குப் பின் கடையநல்லூரைச் சார்ந்த மவ்லவீ ஜஃபருல்லாஹ் பத்ரீ என்பவரும், இன்னும் சிலரும் இந்த மத்ரஸாவின் ஆசிரியர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.
1990ஆம் ஆண்டு முதல் இந்த மத்ரஸா குல்லிய்யத்துல் அரபிய்யா ரூஹுல் இஸ்லாம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1993ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த மத்ரஸாவின் செயல்பாடு நின்றுபோனது.
அப்பா பள்ளி:
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள இப்பள்ளிவாசலில், மரைக்கார் பள்ளிவாசலில் அடங்கியிருக்கும் மஹான் ஸாம் ஷிஹாபுத்தீன் வலிய்யுல்லாஹ் அவர்கள், ஹிஜ்ரீ 1121, ரஜப் 21ஆம் நாளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
மஹான் ஸாம் ஷிஹாபுத்தீன் வலிய்யுல்லாஹ் அவர்கள் சிறந்த இறைநேசச் செல்வராகவும், சமூக நலக் கவிஞராகவும் திகழ்ந்தவர்கள். நபிமொழிக் கிரந்தங்களான ஹதீஸ் நூல்களை அன்றே கவிதை நடையில் தமிழாக்கம் செய்தவர்கள் இவர்கள். பெரிய ஹதீது மாணிக்க மாலை, சின்ன ஹதீது மாணிக்க மாலை ஆகிய நூல்கள் ஹதீஸ் மொழியாக்க கவிதை நூல்களாகவும், அதபு மாலை, தோகைமாலை, குத்பா மாலை, தக்க ஷுரூத் உள்ளிட்ட நூல்கள் மார்க்க சட்டங்கள் மற்றும் சமூக நலக் கருத்துக்களை உள்ளடக்கிய கவிதை நூற்களாகவும் உள்ளன. இன்றளவும் இந்நூல்களில் பல - மார்க்க் கல்வி (தீனிய்யாத்) கூடங்களில் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
சிறந்த மார்க்க மேதையாகத் திகழ்ந்தவரும், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையை உருவாக்கியவர்களில் ஒருவரும், தப்லீக் இயக்கத்தின் அப்போதைய ஊர் அமீரும், காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரீஷ் ஷரீஃப் ஸபை, எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம் – ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளி, குடிநீர்த்திட்டம் ஆகியவற்றை உருவாக்கியவர்களில் முக்கியமானவரும், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளிவாசல், தாயிம்பள்ளிவாசல், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் ஆகியவற்றின் முத்தவல்லியாக இருந்தவர்களுமான ஷெய்குல் உலமா மு.க.செய்யித் இப்றாஹீம் ஆலிம் முஃப்தீ அவர்கள், ஹிஜ்ரீ 1410 ரமழான் 14இல் காலமாகி, இப்பள்ளிவாசல் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
நிர்வாகம்:
மரைக்கார் பள்ளி:
ஹாஜி எஸ்.மூஸா இப்பள்ளியின் தலைவராகவும், ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹ்யித்தீன் துணைத்தலைவராகவும் உள்ளனர்.
அப்பா பள்ளி:
ஹாஜி எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் என்ற சி.எம்.கே. இப்பள்ளியின் தலைவராகவும், ஹாஜி ஏ.எம்.இஸ்மாயீல் நஜீப் துணைத்தலைவராகவும் உள்ளனர். இப்பள்ளிவாசலுக்கென www.appapalli.org என்ற பெயரில் தனியொரு இணையதளமும் உள்ளது.
சார்பு நிறுவனங்கள்:
ரெட் ஸ்டார் சங்கம் என்ற பெயரில் விளையாட்டு மைதானம் உள்ளது. விளையாட்டிற்காக நகரில் உருவாக்கப்பட்ட முதல் மைதானம் இதுவாகும்.
ஜமாஅத்துக்கு உட்பட்ட திருமணங்கள் பல இந்த மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது. முற்காலத்தில் பல தேசிய - மாநில அரசியல் தலைவர்கள் இம்மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர்.
நகரில் மார்க்க ரீதியான கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்த காலத்தில், 1985ஆம் ஆண்டு இம்மைதானத்தில், காயல்பட்டினம் ஹாஜி எம்.இசட்.ஜலீல் முஹ்யித்தீன் காதிரீ, மவ்லவீ பி.ஜைனுல் ஆபிதீன் ஆகியோருக்கிடையே விவாதம் நடைபெற்றுள்ளது.
பூப்பந்து விளையாட்டு இங்கு பிரதானமாக விளையாடப்படுகிறது. கால்பந்து, க்ரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளும் நடைபெறுகிறது.
உடற்பயிற்சிக் கருவிகள் பல இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் இவற்றைக் கொண்டு உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இம்மைதானத்திற்கென www.redstarsociety.org என்ற பெயரில் தனியொரு வலைதளமும் உள்ளது.
Maraikarpalli - Appapalli Jama’ath Welfare Association - MAJWA என்ற பெயரில் அமைப்பொன்று செயல்பட்டு வருகிறது.
இமாம் - பிலால்:
மரைக்கார் பள்ளியின் இமாமாக காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சார்ந்த ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத், பிலால்களாக காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சார்ந்த யஹ்யா, மேலப்பாளையத்தைச் சார்ந்த ஷாஹுல் ஹமீத் ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்.
அப்பாபள்ளியின் இமாமாக காயல்பட்டினத்தைச் சார்ந்த டி.எச்.எம்.ரஹ்மத்துல்லாஹ் பக்ரீ, பிலாலாக காயல்பட்டினத்தைச் சார்ந்த அபுல் காஸிம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
தொழுகை நேரம்:
ரமழான் காலங்களில் இவ்விரு பள்ளிவாசல்களிலும் இஷா தொழுகை இரவு 08.45 மணிக்கும், தராவீஹ் தொழுகை 09.00 மணிக்கும் நடத்தப்படுகிறது.
வழமைச் செயல்பாடுகள்:
இவ்விரு பள்ளிகளிலும் எல்லாக்காலங்களிலும் ஐவேளைத் தொழுகை இமாம் ஜமாஅத்துடன் நடத்தப்பட்டு வருகிறது.
இரு பள்ளிவாசல் வளாகங்களிலும் காலை - மாலை வேளைகளில், சிறுவருக்கான திருக்குர்ஆன் ஓதல் பயிற்சி வகுப்பு (மக்தப்) நடத்தப்பட்டு வருகிறது.
ரமழான் சிறப்பு செயல்பாடுகள்:
மரைக்கார் - அப்பா பள்ளி ஜமாஅத் சார்பில், ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில், நோன்பு துறப்பதற்காக ஊற்றுக்கஞ்சி வினியோகம் தினமும் மாலை 04.30 மணிக்கு நடைபெறுகிறது. சுமார் ஐம்பது முதல் எழுபத்தைந்து குடும்பத்தினர் இக்கஞ்சியைப் பெற்றுச் செல்கின்றனர்.
துவக்கத்தில் இவ்விரு பள்ளிகள் சார்பாகவும் தனித்தனியே கஞ்சி தயாரிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஓரிடத்தில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதே ரெட் ஸ்டார் சங்கத்தில் தினமும் மாலை இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இஃப்தார் - நோன்பு துறப்பு ஏற்பாடுகள்:
நடப்பாண்டு தினசரி இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் 50 முதல் 70 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு நகரின் வழமையான பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்படுகிறது.
தினமும் கறிகஞ்சியும், எப்போதாவது பிரியாணி கஞ்சி அல்லது வெண்கஞ்சியும் தயாரிக்கப்படுகிறது. |