காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில், நகர ஹாஃபிழ்கள் - ஆலிம்களுக்கான சிறப்பு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நேற்று மாலையில் நடைபெற்றது.
ஆண்டுதோறும் ரமழான் மாத இறுதியில், காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் நகரிலுள்ள திருக்குர்ஆனை மனனம் செய்த - செய்கிற ஹாஃபிழ்கள், மார்க்க அறிஞர்கள் - ஆலிம்கள் கலந்துகொள்ளும் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழமை.
நடப்பாண்டின் இந்நிகழ்ச்சி, நேற்று மாலையில், காயல்பட்டினம் குத்பா பெரிய பள்ளி வளாகத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், கே.எம்.டி. மருத்துவமனை தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, குத்பா பெரிய - சிறிய பள்ளிகளின் முத்தவல்லி ஹாஜி ஷேக் மதார் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் ஃபாழில் பாக்கவீ சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.
இந்நிகழ்ச்சியில், நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஹாஃபிழ்களும், ஆலிம்களும் திரளாகக் கலந்துகொண்டனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, குளிர்பானம், பழம், கேக் ஆகிய பதார்த்தங்கள் பரிமாறப்பட்டிருந்தது.
இந்த சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி குறித்து, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் எஃப்.எம்.ஸ்டோர் மஹ்மூத் லெப்பை தெரிவித்ததாவது:-
எமது காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில், நகர ஹாஃபிழ்கள் கலந்துகொள்ளும் இஃப்தார் நிகழ்ச்சி கடந்த 2000ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில், நகரின் அனைத்துப் பள்ளிவாசல்களின் காலஞ்சென்ற முத்தவல்லிகள் உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயரில் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்படுகிறது.
வெறுமனே ஹாஃபிழ்கள் மட்டும் அழைக்கப்பட்டு வந்த இந்நிகழ்ச்சியில், ஆலிம்களையும் அழைக்கலாமே என பெரியவர்கள் பலர் தெரிவித்த நல்லாலோசனையைக் கருத்தில் கொண்டு, கடந்த 2005ஆம் ஆண்டு முதல் நகர ஹாஃபிழ்களுடன் ஆலிம்களும் இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
துவக்கத்தில், ஆண்டுதோறும் ரமழான் 25ஆம் நாளன்று இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்த்து. எமது அமைப்பின் நிர்வாகிகள் உட்பட ஏராளமான ஹாஃபிழ்கள், ஆலிம்கள் ரமழான் கடைசி ஐந்து தினங்களில்தான் தாயகம் வருகின்றனர் என்பதைக் கருத்தில் கொண்டு, தற்சமயம் ரமழான் 28ஆம் நாளன்று இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
துவக்க காலத்திலிருந்து நகரின் அனைத்து ஹாஃபிழ்கள் - ஆலிம்களுக்கு தனித்தனியே அழைப்புக்கடிதம் அனுப்பப் படுகிறது. எனினும் ஒரு சில ஹாஃபிழ்கள் - ஆலிம்களின் பெயர் ஆண்டுதோறும் விடுபட்டு விடுகிறது.
நகரிலுள்ள அனைத்து ஹாஃபிழ்கள் மற்றும் ஆலிம்களின் பட்டியலை சேகரிக்கும் அரும்பணியை காயல்பட்டினம்.காம் செய்தால், அதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் தர எமதமைப்பு ஆவலுடன் காத்திருக்கிறது. அவ்வாறு செய்யப்படும்போது, அந்த தகவல் பட்டியலை, இந்த இஃப்தார் நிகழ்ச்சி உட்பட பல நல்ல காரியங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது எமது கருத்தாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். மன்ற உறுப்பினர்கள் கே.ஜே.ஷாஹுல் ஹமீத், எஸ்.ஏ.இப்றா ஹீம் மக்கீ, எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன் உட்பட பலர் அப்போது உடனிருந்தனர்.
|