இருப்பிடம்
காயல்பட்டினம் குத்துக்கல் தெரு - காட்டுத்தைக்கா சந்திப்பில் அமைந்துள்ளது மஸ்ஜித் முஹ்யித்தீன் எனும் முஹ்யித்தீன் பள்ளிவாசல்.
இப்பள்ளியின் வரலாறு குறித்து, பள்ளியின் செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.கமால் தெரிவித்துள்ளதாவது:-
வரலாறு:
132 ஆண்டுகளுக்கு முன்பு, ஹிஜ்ரீ 1299ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் 5ஆம் நாளன்று இப்பள்ளிவாசல் கட்டப்பட்டது. இதற்கு இப்பள்ளியின் துவக்க கால கல்வெட்டு சான்றாக உள்ளது.
சிங்கப்பூரார் என்ற பெயரில் அழைக்கப்படும் ஹாஜி உ.து.இப்றாஹீம், அல்ஆரிஃப் பில்லாஹ் முஹிப்புர்ரஸூல் ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூஃபீ ஹஜ்ரத் அவர்களின் கம்பெனியார் வகையறாக்கள், ஹாஜி சே.கு.அப்பா குடும்பத்தினர், ஹாஜி குளம் செண்டு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியொர் இப்பள்ளியின் நிர்மான ஸ்தாபகர்களாவர்.
கடந்த 1970ஆம் ஆண்டு, இப்பள்ளிவாசல் கட்டிடம் துவக்கமாக மாற்றம் செய்யப்பட்டது. பள்ளியைச் சுற்றி வெளிப்பள்ளி விரிவாக்கம் செய்யப்பட்டு, ஓட்டுக்கூரை அமைக்கப்பட்டது.
தரமான கருங்கள் மற்றும் இத்தாலி நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட மார்பிள் கொண்டு பள்ளியின் வெளிப்பகுதி தளம் அமைக்கப்பட்டது.
வருங்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு. நடப்பாண்டு பிப்ரவரி மாத துவக்கத்தில் இப்பள்ளிவாசல் கட்டிடம் தகர்க்கப்பட்டு, புனர்நிர்மாணப் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. என்பத்தைந்து லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் செலவில், பிரம்மாண்டமான தோற்றத்துடன் இப்பள்ளி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நிர்வாகம்:
ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ பள்ளியின் தலைவராகவும்,
ஹாஜி எஸ்.எம்.தாஜுத்தீன் செயலாளராகவும்,
ஹாஜி எம்.எம்.முஹம்மத் சுல்தான் பொருளாளராகவும் சேவையாற்றி வருகின்றனர். இவர்களையும் சேர்த்து சுமார் 35 செயற்குழு உறுப்பினர்கள் இப்பள்ளிவாசலை நிர்வகித்து வருகின்றனர்.
இமாம் - பிலால்:
பள்ளியின் இமாமாக மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ, பிலாலாக அம்பலம் ஸாலிஹ் ஆகியோர் கடமையாற்றி வருகின்றனர்.
தொழுகை நேரம்:
ரமழான் காலங்களில் இப்பள்ளியில் இஷா தொழுகை இரவு 08.45 மணிக்கும், தராவீஹ் தொழுகை 09.00 மணிக்கும் நடத்தப்படுகிறது.
வழமைச் செயல்பாடுகள்:
இப்பள்ளியில் எல்லாக்காலங்களிலும் ஐவேளைத் தொழுகை இமாம் ஜமாஅத்துடன் நடத்தப்பட்டு வருகிறது.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணிக்கு ஸலவாத் மஜ்லிஸ் நடத்தப்படுகிறது.
ரபீஉல் அவ்வல் மாதத்தின் முதல் 12 தினங்களில் நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும்,
ரபீஉல் ஆகிர் மாதத்தின் முதல் 11 தினங்களில் மஹான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீதும் புகழ்மாலை பாடும் மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டு வருகிறது.
புகழ்பெற்ற மஹான்களின் நினைவு தின மாதங்களின்போது, ஒருநாள் மட்டும் சிறப்பு மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்படுகிறது.
ஷஃபான் மாத பாதியில், நிஸ்ஃப் ஷஃபான் (பராஅத் இரவு) சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
பள்ளி வளாகத்தில், காலை - மாலை வேளைகளில், சிறுவருக்கான திருக்குர்ஆன் ஓதல் பயிற்சி வகுப்பு (மக்தப்) மத்ரஸத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற பெயரில் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இரண்டு பெருநாட்களின் முன்னிரவுகளிலும் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் ஸஃபர் மாதம் ஏழாம் நாளன்று, பள்ளப்பட்டியில் அடங்கியிருக்கும் தைக்கா செய்கு முஹம்மத் வலிய்யுல்லாஹ் அவர்களின் பெயரில் கந்தூரி நடத்தப்படுகிறது.
ரமழான் சிறப்பு செயல்பாடுகள்:
ரமழான் காலங்களில் நோன்பு துறப்பதற்காக ஊற்றுக்கஞ்சி வினியோகம் தினமும் மாலை 03.00 மணிக்கு நடைபெறுகிறது. இருபது முதல் நாற்பது குடும்பங்களைச் சார்ந்தவர்கள் இந்த ஊற்றுக்கஞ்சியைப் பெற்றுச் செல்கின்றனர்.
தினமும் மாலை இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இரவில் தராவீஹ், வித்ர் தொழுகை நடத்தி, அதனைத் தொடர்ந்து மஹல்லாவாசிகளின் இணைந்தமர்வு நடத்தப்பட்டு, தேனீர் வழங்கப்படுகிறது. பின்னர் வித்ரிய்யா மஜ்லிஸ் நடத்தப்படுகிறது.
ரமழான் இருபத்தேழாம் நாளன்று தஸ்பீஹ் தொழுகை நடத்தப்பட்டு, தவ்பா - பாவமன்னிப்புப் பிரார்த்தனை மஜ்லிஸ் நடத்தப்படுகிறது.
இஃப்தார் - நோன்பு துறப்பு ஏற்பாடுகள்:
நடப்பாண்டு தினசரி இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் 20 முதல் 30 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு நகரின் வழமையான பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி ஆகியனவும், எப்போதாவது வடை, கடற்பாசி, குளிர்பானம் உள்ளிட்ட பதார்த்தங்களும் பரிமாறப்படுகிறது.
தினமும் கறிகஞ்சி அல்லது காய்கறி கஞ்சியும், எப்போதாவது பிரியாணி கஞ்சி அல்லது வெண்கஞ்சியும் தயாரிக்கப்படுகிறது.
கஞ்சி ஏற்பாட்டுக்குழு:
நடப்பாண்டு கஞ்சி ஏற்பாட்டுக் குழுவினராக,
ஹாஜி கத்தீப் இப்றாஹீம் தலைமையில், நோனா அபுல்காஸிம், ஹாஜி பி.எம்.எம்.அபுல் காஸிம் ஆகியோர் செயலாளர்களாகவும்,
எஸ்.டி.கமால், ஜே.உமர், சி.எம்.கே.மூஸா நெய்னா ஆகியோர் உறுப்பினர்களாகவும் சேவையாற்றி வருகின்றனர்.
சார்பு நிறுவனங்கள்:
இப்பள்ளியையொட்டி வடக்கில் மஜ்லிஸுல் கரம் சங்கம் என்ற பெயரில் பொது நல அமைப்பொன்று செயல்பட்டு வருகிறது. பல வருடங்களுக்கு முன், நகரின் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு இச்சங்கம் மூலமும் தீர்வு காணப்பட்டுள்ளது.
சமூக சேவைகள் பல செய்து வரப்பட்டுள்ளது. நூலகம் ஒன்றும் இயங்கியது. பலர் பொருளாதாரத் தேவை நிமிர்த்தம் வெளிநாடு - வெளியூர்களுக்குச் சென்றுவிட்டதால், இப்பணிகளில் தற்போது சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது.
பள்ளிவாசல் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதையிட்டு, இங்குதான் தற்சமயம் தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. |