பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக குறும்படம் ஒன்றை தயாரிப்பதென சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றம் முடிவு செய்துள்ளதாக அதன் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ தெரிவித்தார்.
குறும்படம் தயாரிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், காயல்பட்டினம் மருத்துவர் தெருவில், அரசு மருத்துமனை அருகிலுள்ள இல்லத்தில், 27.12.2010 அன்று இரவு 07.00 மணிக்கு, ஹாஜி எஸ்.ஐ.அபூபக்கர் தலைமையில் நடைபெற்றது.
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கூட்ட அறிமுகவுரையாற்றினார். ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு அதிகரித்திடும் பொருட்டு, சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவில், 30 முதல் 45 நிமிடங்கள் அடங்கிய குறும்படம் தயாரிக்கவுள்ளதாகவும், அதன் உள்ளடக்கம் குறித்து கருத்து தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
கைபேசி கோபுரங்களின் கதிர்வீச்சால் விளையும் பாதிப்புகள் குறித்து செய்தியாதாரங்களுடன் விளக்கிப் பேசிய இலங்கை காயல் நல மன்றத்தின் (காவாலங்கா) செயற்குழு உறுப்பினர் எஸ்.ஐ.புகாரீ, நகரின் அனைத்துப் பள்ளி மாணவர்களைக் கொண்டு பகுதிவாரியாக நகரின் அனைத்துப் பகுதிகளிலும், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான படங்கள், முழக்கங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திக்கொண்டு நகர்வலம் செல்லச் செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தார்.
நகரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலரது குடும்பத்தினரின் இனங்காட்டப்படாத நேர்காணல்கள், ப்ளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதால் விளையும் தீவினைகள், நகரிலுள்ள உணவகங்களின் சமையல் முறைகள், அவற்றால் ஏற்படும் தீவினைகள், நகரின் பெரும்பாலான வீடுகளில் கழிவு நீர் சேகரிப்புத் தொட்டி (செப்டிக் டாங்க்) அருகிலேயே கிணறுகள் அமைத்து அவற்றிலிருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்துவதால் விளையும் தீவினைகள், தொழிற்சாலைக் கழிவுகள், காற்று - நில - நீர் மாசு குறித்த முக்கிய தகவல்கள், கைபேசி கோபுரங்களின் கதிர்வீச்சால் ஏற்படும் தீவினைகள் ஆகியவற்றையும்,
புற்றுநோய்க்கு தரப்படும் சிகிச்சை முறைகள், அதனால் ஏற்படும் பக்க விளைவுகள், அந்நோயால் நோயாளியும், அவரைப் பார்த்துப் பார்த்து அவரது குடும்பத்தார் அடையும் வேதனைகளை கற்பனைச் சித்திரமாகவும் இக்குறும்படத்தில் காண்பிக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில், குறும்பட தயாரிப்பிற்கான உள்ளூர் ஏற்பாட்டுப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளராக ரியாத் அஹ்மத் ஸாஹிப், ஏற்பாட்டுக் குழுவினராக ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, துபை முஹம்மத் இப்றாஹீம், அப்துல் காதிர், ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் ராஸிக், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரடங்கிய குழு நியமிக்கப்பட்டது. ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் உணவு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட குழுவினர், குறும்படத்திற்கு இறுதி வடிவம் கொடுப்பர் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தைச் சார்ந்த சாளை நாஸர், வட அமெரிக்க காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.தவ்ஃபீக், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். |